

நாட்டின் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019-20 ஆண்டில் பெய்துள்ள பருவமழையால் உணவு தானிய உற்பத்தி, 291.95 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, 2018-19 ஆம் விவசாய ஆண்டில் எட்டப்பட்ட இலக்கான 285.21 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியைவிட 6.74 மில்லியன் டன் அதிகமாக இருக்கும்.
கடந்த ஐந்தாண்டுகளைக் காட்டிலும் 26.20 மில்லியன் டன் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் மொத்த அரிசி உற்பத்தி 117.47 மில்லியன் டன், கோதுமை உற்பத்தி 106.21 மில்லியன் டன், மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தி 23.02 மில்லியன் டன், மொத்தக் கரும்பு உற்பத்தி 353.85 மில்லியன் டன், பருத்தியின் உற்பத்தி 28.04 மில்லியன் பேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி
நாட்டின் சர்க்கரை உற்பத்தி 22 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்தியச் சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான இந்தச் சந்தைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 22 விழுக்காடு சரிந்து 1 கோடியே 70 லட்சம் டன்னாக குறைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2018 - 2019 சந்தைப் பருவத்தில் 3 கோடியே 31 லட்சம் டன் ஆக இருந்தது. 2017 - 2018 ஆண்டு சந்தைப் பருவத்தில் புதிய சாதனை அளவாக 3 கோடியே 25 லட்சம் டன்னாகவும் 2016 - 2017 ஆண்டு சந்தை பருவத்தில் 2 கோடியே 3 லட்சம் டன்னாகவும் 2015 - 2016 ஆண்டு சந்தைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2 கோடியே 51 லட்சம் டன்னாகவும் இருந்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இலவசப் பயிற்சி
ஈரோடு, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி, பயிற்சி மையத்தில் வரும் பிப்ரவரி 24, 25 ஆகிய இரு நாட்களில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. கோழிகுஞ்சுகளைத் தேர்வு செய்தல், தீவனப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு, ஆகிய தலைப்புகளில் கோழிப்பண்ணையில் நேரடி களப்பயிற்சியுடன் வகுப்பு நடத்தப்படவுள்ளது. உழவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம். பயிற்சி குறித்த தகவல்களுக்கு 0424 - 2291482 என்ற எண்ணில் தொடர்பு கொள்க.
தொகுப்பு: ஜே.கே.