

இரா. பாரதிச்செல்வன், இதய நோய் சிறப்பு மருத்துவர், மன்னார்குடி:
படிப்பறிவற்ற, ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் வயிற்றி லடித்துப் பொருள் ஈட்டத் திட்டமிடும் பன்னாட்டு பெரு முதலாளிகள் மீதும், அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு உதவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், விஞ்ஞானிகள் மீதும் நம்மாழ்வார் ஐயா கொண்டிருந்த கடுங்கோபத்தை மீத்தேன் எதிர்ப்புப் போராட்டத்தின் போது தெரிந்துகொண்டேன்.
கார்ல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாட்டை அவர் விளக்கிய முறையையும், ஜான் பெர்கின்ஸனின் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற நூலின் பகுதிகளை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி, முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சி என்ற பெயரில் எப்படி ஏழை நாட்டு அரசியல்வாதிகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளைக் கொள்ளையடிக்கின்றன என்பதை விளக்குவார்.
படித்தவர்கள் புரிந்துகொள்ளச் சிரமப்படும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை எளிய வார்த்தைகளில் பாமரர்களுக்கும் புரிய வைக்கும் அய்யாவின் பேச்சைக் கண்டு வியந்துபோனேன்.
மன்னார்குடி பகுதியில் மீத்தேன் துரப்பணத் திட்டத்துக்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காமல் தடுத்து வைத்திருப்பதற்கு ஐயாவின் போராட்டங்கள் முக்கியக் காரணம். ஆனால், கெடுவாய்ப்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் களத்திலேயே ஐயா உயிர் நீத்தார். களத்தில் ஒலித்த ஐயாவின் குரல் இப்போதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
சரோஜா, இயற்கை விவசாயி பள்ளபட்டி, கரூர் மாவட்டம்:
இயற்கை விவசாயம் செய்தாலே, வெளிநாட்டு கம்பெனிகளை எதிர்த்துப் போராடுகிறாய் என்றுதான் அர்த்தம். 'இதற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால், எதற்காகவும் இதை விட்டுக் கொடுக்காதே' என்று பயிற்சியின் போது நம்மாழ்வார் உறுதிபடக் கூறுவார்.
'ஒரு நாள் விவசாயத்தில் யார் நமக்கு உதவுவார் என்று சிந்தித்துக்கொண்டு, நான் தனியாக என்ன செய்ய முடியும் ஐயா' என்று கேட்டேன். 'நீ தனியாக இல்லை. இயற்கை உனக்கு ஆதரவாக இருக்கிறது. தைரியமாக இறங்கு' என்றார். இன்றுவரை இயற்கையின் ஆதரவும் ஐயா கொடுத்த தைரியமுமே என்னை இயக்குகின்றன.
எம்.ஏகாம்பரம், இயற்கை வேளாண் பயிற்றுநர், செஞ்சி:
2004-ல் ஆழிப் பேரலையின்போது கடல் நீர் உட்புகுந்து நிலங்கள் பாழ்பட்டுப் போயின. நிலங்களைச் சீர்திருத்த 6 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறிவிட்டனர். நம்மாழ்வார் ஐயா தலையிட்டு அவற்றைப் பழைய தன்மைக்கு விரைந்து மாற்ற முயற்சி எடுத்துச் செய்தும் காட்டினார்.
'மஞ்சத் துங்க்ரோ' என்ற வைரஸ் தாக்கி விளைநிலங்கள் சேதமானபோது வேளாண் துறை, கல்லூரி மாணவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அடங்கிய குழு ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தக் கூறி விவசாயிகளிடம் வலியுறுத்தினர். அதை மறுத்து, ஐயாவின் ஆலோசனைப்படி இஞ்சி, பூண்டு கரைசலை விவசாயிகள் தெளித்தார்கள். வைரஸ் நோய் சீக்கிரத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதைப் பார்த்துச் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பேசி, அதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தார். இது போன்று நம்மாழ்வார் ஐயா எடுத்த முயற்சிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
(இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு, அவருடன் பழகிய, செயல்பட்ட பலரது கட்டுரைகள் வழியாகத் தொகுக்கப்பட்டு வருகிறது. அதில் சில பகுதிகள் இங்கே வெளியாகியுள்ளன. தொடர்புக்கு: 9443575431
நன்றி: ‘வானகம்' ஜெ.கருப்பசாமி, ஒருங்கிணைப்பாளர், ‘நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு' நூல்)