

இயற்கை வேளாண்மையில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கிறதா?
பொதுவாக, வேளாண்மையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம். ஆனால், அது மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டுமே வந்துள்ளன. வேளாண் தொழிலில் 70% முதல் 80% வேலைகள் பெண்களால்தாம் நடந்தேறுகின்றன.
வேளாண்மையில் பிரச்சினை ஏற்படும்போதும், ஆண்கள் வேறு வேலை தேடிச்செல்லும் போதும் பெண்கள் வேளாண்மையைத் தொடர்வதைப் பல இடங்களில் பார்க்கிறோம். இயல்பாகவே வேளாண்மை தழைப்பதற்குப் பெண்களுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட வேண்டும்.
இன்றைய வேதி வேளாண்மையும் நவீனச் சந்தையும் வேளாண்மை துறை சார்ந்து முடிவெடுக்கும் நிலையிலிருந்து பெண்களைத் தள்ளி வைத்ததால்தான் பிரச்சினைகள் பெருக ஆரம்பித்தன. இயற்கை வேளாண்மையில் விதைப் பாதுகாப்பு முதல் விதைப் பன்மை, வீட்டுக்குத் தேவையான உணவு/ காய்கறிகள் எனப் பலவும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதால், அதில் பெண்களின் பங்கு தற்போது மேம்பட்டுவருகிறது. இதனால் அவர்களுடைய பங்கேற்பும் முடிவெடுக்கும் திறன்களும் அதிகமாகின்றன.
இயல்பான ஈர்ப்பு
பொதுவாக பெண்களுக்கு வீட்டு நலன், ஆரோக்கியம், சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் இயல்பாகவே பற்றும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதனால் பாதுகாப்பான உணவு, இயற்கை வேளாண்மை ஆகியவை இயல்பாகவே அவர்ளை ஈர்க்கின்றன. மரபு உணவு, வேளாண் பழக்கங்கள், பண்ணைக் கால்நடைகளின் பராமரிப்பு, உயிரினப் பன்மையை-சமநிலையை நிலைநாட்டுவது, விதைப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திலும் அவர்களுடைய பங்கு மிக அதிகம்.
அதனால்தானோ என்னவோ நமது நாட்டின் முக்கிய எடுத்துக்காட்டு அமைப்புகளாகத் திகழும் இயற்கை வேளாண் குழுக்களில் பெண்களின் பங்கே மிக அதிகம்: ஹைதராபாத்தின் டெக்கான் டெவலப்மென்ட்
சொசைட்டி (டி.டி.எஸ்.), கேரளத்தின் குடும்பஸ்திரீ, பசுமைப் படை; கர்நாடகத்தின் பசுமை அறக்கட்டளை எனப் பல இயக்கங்கள், அத்துடன் வந்தனா சிவா, கவிதா குருகந்தி, சுமன் சஹாய், ‘தணல்’ உஷா எனப் பெண்களே முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.
தாக்கத்தைத் தவிர்க்க
அதே அளவுக்கு வேதி வேளாண்மையின் முக்கிய பாதிப்புகளும் பெண்கள் மீதே அதிகம்: உடல்நலன், அதிலும் குறிப்பாகப் பெண்களின் உடல்நலம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியது, அவர்கள் உடலில் நச்சுத் தேக்கம் அதிகமாக இருக்கும். அதனால் பிள்ளைப்பேறின்மை முதல் புற்றுநோய்வரை பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்.
வேளாண் சந்தையில் பொதுவாகவே ஆண்கள் ஆதிக்கம் அதிகம். நவீனச் சந்தைகளிலோ கேட்கவே வேண்டாம். அதனால் பல கைம்பெண்கள்/தனிமையில் உள்ள பெண்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள்.
பண்ணை கால்நடைகள்- பராமரிப்பு, அவற்றுக்கான உணவு, உடல்நலன், பிள்ளைப்பேறு என எல்லாமே இயற்கை வேளாண்மை மூலமாகப் பெரிய பிரச்சினையில்லாமல் நடந்தேறும். மாடுகளுக்கான உணவு அருகிலேயே இருக்கும், வெகு தொலைவுக்குச் சென்று பெண்கள் அவற்றைச் சுமந்துவர வேண்டியதில்லை. நீர், மற்ற இடுபொருட்களும் அதேபோலத்தான்.
பாதுகாப்பான உணவுக்காக மட்டுமில்லாமல், பல்வேறு வகையிலும் இயற்கை வேளாண்மையே பெண்களுக்கு நல்லது. இயற்கை வேளாண்மை மேலும் சிறப்புறவும், விதை முதல் கால்நடை வளர்ப்பு/பராமரிப்பு, பயிரினப் பன்மைவரை எல்லாம் சிறக்கவும் பெண்களின் ஈடுபாடு மிக முக்கியம்.
கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com