

நாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், ஜூலை 12-ம் தேதி நாட்டுக்கோழி, காடை வளர்ப்பு ஆகியவை குறித்து இலவச பயிற்சியை நடத்தவுள்ளது. பயிற்சிக்கான முன்பதிவை ஜூலை 10-ம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம் அல்லாது மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். சிக்கல் வேளாண்மை நிலையத்தில் இந்தப் பயிற்சி நடத்தப்படவுள்ளது. முதல் 40 பேருக்கும் மட்டுமே பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளது. முன்பதிவுக்கு 99766 45554, 04365 246266 ஆகிய இந்த எண்களில் தொடர்புகொள்க.
சர்க்கரை உற்பத்தி பாதிப்பு
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 2,30,000 ஹெக்டரில் கரும்பு பயிடப்பட்டுவந்தது. இந்தாண்டு 12 சதவீதம் அளவு குறைந்த நிலத்தில்தான் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைச் சங்கம் தெரிவிக்கிறது.
போதிய மழைப் பொழிவு இல்லாததுதான், இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் பெரிய சர்க்கரை தயாரிப்பு நிறுவனமான இ.ஐ.டி. பாரி நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது. கரும்பு வரத்து குறைந்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனத்தின் தலைவர் எம்.எம். முருகப்பன் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் விலை அதிகரிப்பு
விரலி மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.400 வீதம் விலை அதிகரித்துள்ளதாக ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வேர் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.200 வீதம் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி ஈரோடு மஞ்சள் சந்தையில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,189லிருந்து ரூ.7,419 வரை விற்பனை ஆகிறது. வேர் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,877லிருந்து ரூ.6,584 வரை விற்பனை ஆகிறது.
வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ‘அடுமனைப் பொருட்கள் - மிட்டாய் தயாரித்தல்’ பயிற்சி நடத்தப்படவுள்ளது.
இந்த மாதம் 12, 13 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும்.