

‘பூச்சிகள் அற்ற உலகத்திலும், பூச்சிகள் பெருத்த உலகத்திலும் மனிதனால் வாழ இயலாது’. இதைப் புரிந்துகொள்ளும் சிறு முயற்சியாகவே, ‘பூச்சி சூழ் உலகு’ ஒளிப்படக் கட்டுரை திட்டமிடப்பட்டது.
பூச்சிகளில் ஒன்றான கொசுவின் பெருக்கத்தை வைத்து இதைத் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். இந்த உலகில் ஓர் உயிரினமாகப் பரிணமித்த கொசு, இயல்பான பெருக்கத்துடன் வாழ்ந்துவந்தது. ஆனால் தவளை அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு மனிதச் செயல் பாடுகளால் கொசுக்கள் இன்றைக்குக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்குப் பெருத்துவிட்டன. இன்றைக்கு மனிதச் சமூகத்தைப் பெருமளவில் பாதிக்கக்கூடிய பல பயங்கர நோய்த்தொற்றுகளை அவை பரவலாக்கியும் வருகின்றன. அது இயல்பாக இருந்த எண்ணிக்கையில் வாழ விடாமல், அதை முற்றாக அழிக்க முற்பட்டதன் விளைவாகவே, இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் சிக்கலான நிலைக்கு அடிப்படைக் காரணம்.
எந்தப் பூச்சியையும் முற்றாக அழிப்பதென்பது மனிதச் சமூகத்தால் இயலாத காரியம் என்பதை யதார்த்தம் உணர்த்தியுள்ளது. இந்தப் பூவுலகில் நாம் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே பரிணமித்து வாழ்ந்து வருபவை பூச்சிகள். இந்த உலகில் பரிணமித்த உயிரினங்களில் தானும் ஒன்று என்பதை மனித இனம் உணர்ந்துகொண்டு, இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ளும்போதுதான் ‘நீடித்த நிலையான வளர்ச்சி’ சாத்தியப்படும்.
பூச்சிகள் அற்ற நிலை, பூச்சிகள் பெருத்த நிலை ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டுச் சமநிலையில் இருக்கும்போது மட்டுமே மனித இனத்துக்கு மகிழ்ச்சியான வாழ்வு வசப்படும். அதற்கேற்ப, ‘பூச்சி சூழ் உலகை’ உருவாக்க நம்மைச் சுற்றியுள்ள காடுகள், மரங்கள், தாவரங்கள் அடங்கிய பசுமை பரப்பை அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்து, ஆதரவளித்த வாசகர்களுக்கு நன்றி.
(நிறைவடைந்தது)
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com