Published : 17 Sep 2016 11:39 AM
Last Updated : 17 Sep 2016 11:39 AM

பூச்சி சூழ் உலகு 01 - கறிவேப்பிலை அழகி

பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன வகைகள் எனப் புறவுலகில் நிறைந்துள்ள உயிரினங்கள் அனைத்தையும் சேர்த்தாலும், இவை அனைத்தின் கூட்டுத்தொகையைவிட மிக அதிக வகைகளைக் கொண்டவை பூச்சிகள். பார்ப்பதற்கு அளவில் சிறியவையாக இருந்தாலும், உலகிலுள்ள ஒட்டுமொத்தப் பூச்சிகளை எடைபோட்டால், அவை உலகிலுள்ள பாலூட்டிகள் அனைத்தின் எடையைவிட மிக அதிக எடையுடனே இருக்கும். இந்தப் பாலூட்டிகளில் மனிதர்களும் அடக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காட்டு உயிரினங்களைப் பார்க்கக் காட்டுக்குச் செல்ல வேண்டும், வலசைப் பறவைகளைப் பார்க்க நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், எந்த இடத்தையும் தேடிச் சென்றுதான் பூச்சிகளைப் பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஏனென்றால் பூச்சிகள் நம்மைச் சுற்றி, இந்த உலகெங்கும் நிறைந்திருக்கின்றன.

‘பூச்சிகள் அற்ற உலகிலும், பூச்சிகள் பெருத்த உலகிலும் மனிதனால் வாழ இயலாது'. அது ஏன் என்பதைப் பூச்சிகளைப் பற்றி புரிந்துகொள்ளும்போது தெரியவரும். நம்மைச் சுற்றியுள்ள சில அரிய பூச்சியினங்களைப் பற்றி அனுபவங்களின் அடிப்படையிலும், அவற்றை நேரடியாகப் பதிவு செய்த ஒளிப்படங்களின் வழியாகவும் பூச்சிகளின் உலகுக்குள் பிரவேசிப்போம்.

கறிவேப்பிலை அழகி (Common Mormon - Papilio Polytes Linnaeus)

பனி பெய்யும் மார்கழி மாதம். எங்கள் வீட்டின் புழக்கடையில் இருக்கும் சிறு தோட்டத்தின் எலுமிச்சை மரத்தில் 'கறிவேப்பிலை அழகி' எனும் வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டுச் சென்றிருந்ததை ஒரு நாள் பார்த்தேன். முட்டை இடப்பட்ட நாளிலிருந்து முதிர்ந்த பருவம்வரை தொடர்ச்சியாக ஒரு மாதக் காலத்துக்கு அதை ஒளிப்பட ஆவணமாக்கிவந்தேன். புழுப் பருவத்தில் இருந்து கூட்டுப் புழு பருவத்துக்கு அது மாறியிருந்தது. அந்தப் புழு, எப்போது வேண்டு மானாலும் தன் வண்ணச் சிறகுகளை விரித்து வானில் பறக்கலாம். கறிவேப்பிலை அழகி இறக்கை விரித்து வெளியே வரும்போது வரவேற்பதற்காக இரண்டு, மூன்று நாட்கள் இரவில் தூக்கமின்றிக் கண் விழித்துக் காத்திருந்தேன்.

புத்தாண்டும் பிறந்தது. ஜனவரி மூன்றாம் நாள் இரவு ஒளிப்படக் கருவியைச் சரியான கோணத்தில் வைத்து மின்னொளியைப் பாய்ச்சி, கூட்டுப்புழுவைச் சில படங்கள் எடுத்துவிட்டுக் காத்திருக்கத் தொடங்கினேன். சில நாட்களாகவே தூக்கமின்றி விழித்திருந்ததால், என்னையறியாமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். திடீர் விழிப்பு ஏற்பட்டுத் தூக்கம் கலைந்தது. சட்டென எலுமிச்சை மரத்தின் அருகே எட்டி பார்த்தபோது, எனக்கு முன்னதாகவே கறிவேப் பிலை அழகி என்னை வரவேற்கக் காத்திருந்தது.

கறுப்பு நிற இறக்கைகளில் செந்நிறத் தீற்றல்கள், வெள்ளைப் பட்டைகளுடன் சேர்ந்து பார்ப்பதற்கு எழிலார்ந்து காணப்பட்ட அந்தக் 'கறிவேப்பிலை அழகி'யைப் பார்த்தபோது, அதன் கூட்டுப்புழு பருவத்திலிருந்து பதிவு செய்த காட்சிகள் மனதில் ஆடின. காட்டுயிர் ஒளிப்படம் எடுப்பதற்கு மிக மிக அத்தியாவசியத் தேவை - பொறுமை. சரியான தருணம் வரும்வரை பொறுமையைக் கடைப்பிடித்தால், அதற்குரிய பலனாக நல்லதொரு படமும் கிடைக்கும் என்பது புரிந்தது.

தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

ஏ. சண்முகானந்தம், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர். பறவைகள், பூச்சிகளை ஒளிப்படம் எடுப்பதன் மூலமாகவும் அவற்றைக் குறித்து எழுதுவதன் மூலமாகவும் இயற்கை குறித்த விழிப்புணர்வை பரவலாக்கி வருகிறார். ‘தமிழகத்தின் இரவாடிகள்’ இவரின் குறிப்பிடத்தக்க நூல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x