மத்தாப்பு சுட்டுப்போடும் முன்

மத்தாப்பு சுட்டுப்போடும் முன்
Updated on
1 min read

தீபாவளி போன்ற கொண் டாட்ட வேளைகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வெடிக்கப்படும் பட்டாசுகளின் மொத்த அளவை கணக்கிட்டால், ஒரு பெரிய வெடிகுண்டு தனித்தனியாக வெடிக்கப்பட்டது போலத்தான் இருக்கும்.

தூக்கமே ஓடிப் போ

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் முதல் பாதிப்பு, அதிலிருந்து வரும் பெரும் அதிர்வு ஒலி (Noise pollution). இது நம் காதுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். உயிரினங்களின் நடத்தை முறையிலும் (Behaviour) பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசு ஒலியால் வீட்டு வளர்ப்புப் பிராணிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், சிறு பூச்சியினங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

உலகச் சுகாதார நிறுவனம், வகுத்துள்ள வரையறையின்படி இரவில் 35 டெசிபலுக்கு மேலே சத்தம் ஏற்பட்டால், மனிதர்களிடையே தூக்கக் கோளாறு (sleeping disorder) ஏற்படலாம். பகலில் 55 டெசிபலுக்கு மேல் ஒலி இருக்கக் கூடாது என்று வரையறுத்திருக்கிறது. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது 140 டெசிபலுக்கு மேல் ஒலி மாசு ஏற்படுகிறது.

அகலாத நஞ்சு

பட்டாசு வெடிக்கும்போது அதில் பயன்படுத்தப்பட்ட பேரியம் (பச்சை நிறத்துக்கு), சோடியம் (மஞ்சள் நிறத்துக்கு), தாமிரம் (நீல நிறத்துக்கு), ஸ்டிராண்டியம் (சிவப்பு நிறத்துக்கு), அலுமினியம், காரீயம், பாதரசம், ஆண்டிமணி, டெக்ஸ்டிரின், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு, டைட்டானியம், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் உள்ளன.

பட்டாசு, மத்தாப்புகளில் இருக்கும் வெடிமருந்துகள் வெடிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மண்ணில் வீரியம் குறையாமல் காணப்படும். இதனால்

மண்ணின் தன்மை சீர்கெடும். மண்ணில் உயிர்வாழும் கண்ணக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் இதனால் அழிகின்றன. மண்ணில் தங்கி யிருக்கும் இந்த வெடிமருந்துகள் மழை பெய்யும்போது, மழைத் தண்ணீரோடு அடித்துக்கொண்டு போய் ஆறு, குளம், கடலில் கலக்கலாம்.

இதனால் அப்பகுதியின் சூழலியல் தொகுதி (Eco system) பாதிக்கப்படும். தொடர்ச்சியாக அதன் உயிர்சங்கிலியில் உள்ள உயிரினங்கள், தாவரங்களும் பாதிக்கப்படும். தண்ணீர் மாசுபாடும் ஏற்படும்.

இணக்கமான கொண்டாட்டம்

குறிப்பாக அதிக ஒலி, புகையை வெளிப்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். நீர்நிலை, இயற்கை சார்ந்த இடங்கள், இயற்கை உயிரினங்கள்-வளர்ப்புப் பிராணிகள் அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவின் சில பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு நட்பான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பட்டாசுகள் Vacuum combustion தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டவை. இவற்றால் சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பில்லை. இவற்றிலிருந்து புகை, நெருப்பு, நச்சுப்பொருட்கள் அதிக அளவில் வெளியேறுவதில்லை.

குறைந்த சத்தம், ஒளிரும் காகிதத்துடன் கூடிய துகள்களையே இவை வெளியிடுகின்றன. இது போன்ற பட்டாசுகளை வெடித்தோ, விளக்குகளையோ ஏற்றியோ தீபாவளியைக் கொண்டாடுவது நல்லது.

கட்டுரையாளர்,
சுற்றுச்சூழல் அறிவியல் உதவி பேராசிரியர்
தொடர்புக்கு: ashokaq@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in