

தமிழ்நாட்டுப் பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை 17. ஆனால், 10-20 ஆண்டுகளுக்கு முன் இரண்டு சரணாலயங்களுக்கே மக்கள் குவிவார்கள். அவை வடக்கில் வேடந்தாங்கல், தெற்கில் திருநெல்வேலி அருகேயுள்ள கூந்தங்குளம். நீண்ட வரலாற்றால் வேடந்தாங்கல் புகழ்பெற்றிருந்தது என்றால், தன் பெரிய அளவால் புகழ்பெற்றது கூந்தங்குளம். இரண்டு இடங்களுக்கும் பெருமளவு உள்ளூர் வலசைப் பறவைகளும், ஓரளவு வெளிநாட்டு வலசைப் பறவைகளும் வரும்.
இரண்டுமே நீர்ப்பறவைச் சரணாலயங்கள். இந்த அம்சங்களைத் தாண்டி இரண்டு இடங்களுக்கும் உள்ள ஒற்றுமை, அந்த நீர்நிலைகளுக்குள் வளர்ந்துள்ள மரங்கள். அவை கருவேல மரங்கள். வேடந்தாங்கலில் நீர்க்கடப்பை (Barringtonia acutangula) மரங்கள் அதிகம் என்றாலும், நீர்க்கருவை மரங்களும் உண்டு. கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, நத்தைகுத்தி நாரை, கரண்டிவாயன் உள்ளிட்ட பெரிய பறவைகளின் எடையையும் அவற்றின் குஞ்சுகளையும் தாங்கி நிற்பவை இந்த மரங்களே.