

சர்வமும் காணொளி மயமாகிவரும் இந்தக் காலத்தில் இளைய தலைமுறையினர் மத்தியில் வாசிப்புப் பழக்கம் உள்ளதா என்கிற கேள்வி எழுவது இயல்புதான்.
ஆனால், ஒளிப்படங்களுக்கு என வடிவமைக்கப்பட்ட இன்ஸ்டகிராம் செயலியில்கூட வாசிப்பை ஊக்கப்படுத்தும் பக்கங்களையும் இன்புளுயன்சர்களையும் அதிக அளவில் காண முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ‘பெர்ஃபாமேடிவ் ரீடிங்’ (Performative reading) என்பதும் அண்மைக் காலத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
அதென்ன ‘பெர்ஃபாமேடிவ் ரீடிங்’?
‘பெர்ஃபாமேடிவ்’ என்கிற ஆங்கிலச் சொல், பொதுவாக ஏதாவது ஒரு விஷயத்தை மற்றவர் கவனிக் கும்படி செயற்கையாக மெருகேற்றிக் காட்டுவது என்பதைக்குறிக்கிறது. சமூக வலைத்தளங் களில் தங்களின் வாழ்க்கை முறை யையும் அடையாளத்தையும் வெளிப்படுத்துவதற்காகச் சில செயல்களை ‘பெர்ஃபாமேடிவ்’ ஆகச் சிலர் மாற்றிக்கொள்வது புதிதல்ல.
அந்த வகையில், ஒருவரின் வாசிப்புப் பழக்கமும் தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல் பொது வெளியில் ‘பெர்ஃமாமேடிவ்’ ஆக மாறுவதைத் தான், ‘பெர்ஃமாமேடிவ் ரீடிங்’ என்கின்றனர்.
குறிப்பிட்ட ஒரு தலைப்பின்கீழ் ஆழமான அறிவை வளர்த்துக்கொள்ள அல்லது பொழுது போக்க ஒரு புத்தகத்தை விரும்பிப் படிக்காமல், தன்னுடைய சமூக அஸ்தஸ்துக்காகவும் தனக்கும் வாசிப்புப் பழக்கம் உண்டு என்பதை வெளிப்படுத்தவும் மேற் கொள்ளப்படும் செயல்கள் எல்லாம் ‘பெர்ஃபாமேடிவ் ரீடிங்’ ரகம்!
பொதுவெளியில் வாசிப்பு
சென்னை பெஸ்ஸி ரீட்ஸ், கொல்கத்தா ரீட்ஸ், திருவனந்தபுரம் ரீட்ஸ், பெங்களூரு கப்பன் ரீட்ஸ் என நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாசிப்பு குழுக்கள் ஒரு பொது இடத்தில் கூடி வாசிப்பை ஊக்குவித்து வருகின்றன.
இளைய தலைமுறையினர் இந்த வாசிப்புக் குழுக்களோடு சேர்ந்து ஆர்வமாக வாசிப்பில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. இது ஒருபுறம் இருக்க, மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது வாசிப்பது, அழகிய பின்னணியில் புத்தகம் வாசிப்பது, தத்துவ நூல்களைக் கையில் வைத்திருப்பது போன்ற ஒளிப்படங்களை எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிடுவதும் வழக்கமாகிவிட்டது.
இவை ‘பெர்ஃபாமேடிவ்’ ஆக இருந்தாலும் ஒருவரின் பதிவால் ஈர்க்கப்பட்டு, மேலும் பலர் புத்தக வாசிப் பைக் கையில் எடுக்கலாம் அல்லது தொடக்கத்தில் பாசாங்காகப் புத்தகத்தைக் கையில் எடுத்து ஒளிப்படங் களை மட்டும் பதிவிடுபவர்கூட, நாள டைவில் உண்மையான வாசகர்களாக மாறவும் வாய்ப்புள்ளது.
ஆனால், பெரும்பாலும் புத்த கத்தின் ஆழத்திற்குச் செல்லாமல், வெறும் அட்டைப்படத்தை நம்பி புத்தகங்களை வாங்கும் போக்கு அதிகரித்துவருவது கவலைக் குரியதே. அறிவுப் பெட்டகங்களாக இருக்கவேண்டிய புத்தகங்கள், வீட்டை அலங்கரிக்கும் பொருள்களாகவோ சமூக அந்தஸ்துக்காகவும் ஒளிப்பட அழகியலுக்குமான கருவி யாகவும் மட்டுமே மாறிவிடாமல் இருப்பது நல்லது.
ஒருவர் தனது வாசிப்பு அனுப வத்தைப் பகிர்ந்துகொள்ளும் போதும், புத்தகத்தைப் பரிந்து ரைக்கும்போதும் பார்ப்பவருக்குப் பயனுள்ளதாக இருக்கும்வரையில் பிரச்சினை இல்லை. வாசித்ததைப் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக வெளிப்படுத்துகிறோமா அல்லது வெளிப்படுத்துவதற்காக மட்டுமே வாசிக்கிறோமா என்பதில் தெளிவாக இருந்து விட்டால் போதும்!