கட்டணமில்லாமல் படிக்கலாம்! - வெற்றி உங்கள் கையில்!

கட்டணமில்லாமல் படிக்கலாம்! - வெற்றி உங்கள் கையில்!
Updated on: 
2 min read

நான் எம்.எஸ்சி., முடித்துவிட்டு பி.எட். படித்துவருகிறேன். ஆசிரியர் பணிக்குத் தயாராகும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறேன். என்னை ஓர் ஆசிரியராகப் பட்டைத் தீட்டிக்கொள்வதற்கான ஆலோசனைகளோடு கிராமப்புற மாணவர்களுக்கு இணையவழியில் கிடைக்கும் கட்டணமில்லாப் படிப்புகள் பற்றியும் கூறுங்கள். - சு.தியாகராஜன், வடபாதிமங்கலம்.

ஒருவர் எந்தப் படிப்பைப் படித்திருந் தாலும் பிற துறைகளைப் பற்றிய அறிமுகத் தையும் உயர்நிலைக் கல்விக்கான வாய்ப்புகளையும் அறிந்துகொள்ள உதவுபவை ‘MOOC’ எனப்படும் ‘Massive Open Online Course’ தளங்கள்.

இவற்றில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் குறைந்தது சில மணி நேரம் முதல் பல மாதங்கள்வரை பயிலக்கூடிய படிப்புகளை வழங்குகின்றன. குறிப்பிட்ட கால அளவிலான படிப்புகளைச் சில தளங்களில் கட்டணமின்றிப் பயிலலாம்.

சில தளங்களில் படிப்புகள் கட்டணமின்றிக் கிடைத்தாலும் சான்றிதழ் பெற கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆயிரக்கணக்கான தளங்கள் இருந்தாலும் உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய முக்கிய மான சில தளங்களைப் பற்றிய அறிமுகத்தை இங்கே காணலாம்.

* MYMOOC – இது கட்டணமில்லா, கட்டணப் படிப்புகளைத் தேடுவதற்கான முக்கியத் தளம். இங்கே 11,000க்கும் அதிகமான கட்டணமில்லாக் குறுகிய கால, நீண்ட காலப் படிப்புகளைக் காணலாம்.

உலகின் 550க்கும் மேற்பட்ட முன்னணிப் பல்கலைக்கழகங்கள், தனித்துவமான கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளை இந்தத் தளம் ஒருங்கிணைத்துள்ளது.

இந்தப் படிப்புகள் ஏறக்குறைய 100 சிறப்புத் துணைத் தலைப்புகளில் அமைந்துள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் கட்டணமில்லாப் படிப்புகளை அதிக அளவில் தொகுத்து வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

* CANVAS NETWORK – அமெரிக்காவின் உடா (Utah) மாகாணத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் இணைந்து, கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கரும்பலகைக்கு மாற்றாக ஆசிரியர்கள், மாணவர்கள், கற்றலில் ஆர்வமுள்ளவர் களுக்காக இந்த இணையவழித் தளத் தைத் தொடங்கின.

ஏறக்குறைய பல லட்சம் பயனர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். மொழிகள், ‘STEM’ தொடர்பான படிப்புகளை இதன் வழியாகப் பயிலலாம். இது மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

* COGNITIVE CLASS – இந்தத் தளம் ஐபிஎம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. இதில் ஏறக்குறைய 100 கட்டணமில்லாப் படிப்புகள் வழங்கப்படு கின்றன. அவற்றில் டேட்டா சயின்ஸ், பைத்தான், எஸ்கியூஎல் (SQL - Structured Query Language) ஆகியவை அடங்கும்.

குறிப்பாக, இந்தப் பாடப்பிரிவுகளில் தொடக்கநிலை முதல் மேம்பட்ட நிலைவரை ஆர்வமுள்ளவர்களுக்கு இத்தளம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

* KADENZE – இந்தத் தளம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் கல்விக் கூட்டாளிகளில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம், ரோட் ஐலண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைன் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இசை, விஷுவல் ஆர்ட்ஸ், கிரியேட்டிவ் டெக்னாலஜி, திரைத்துறை சார்ந்த கதைசொல்லல், சவுண்ட் புரொடக்‌ஷன் ஆகிய துறைகள் குறித்த படிப்புகளை வழங்குவது இந்தத் தளத்தின் சிறப்பம்சம்.

இந்தத் துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்தமான தலைப்புகளில் படிப்புகளைத் தேடிப் பார்க்கலாம். சில படிப்புகளுக்குக் கட்டணம் உண்டு.

* mooKIT – இந்தத் தளம் கான்பூர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி) உருவாக்கப்பட்ட இணையவழிக் கல்வி மேலாண்மைத் தளமாகும். இதில் மேலாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகளைக் காணலாம்.

இந்தத் தளத்தின் மூலம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் இந்தப் படிப்புகளில் பங்கேற்றுள்ளனர்.

கட்டணமில்லாமல் படிக்கலாம்! - வெற்றி உங்கள் கையில்!
ராணுவத்தில் சேர என்ன வழி? | வெற்றி உங்கள் கையில்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in