

நான் பி. பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு ராணுவத்தில் சேர்ந்து நல்ல பதவியில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்கான வழியைக் கூறுங்கள். - சிவநேசன், பூண்டி.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற உங்களின் லட்சியத்துக்கு வாழ்த்துகள். விடாமுயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால், உங்கள் கனவை நிச்சயம் நனவாக்க முடியும். இதற்கு முன்னுதாரணமாக, பல்வேறு சூழல்களில் இருந்து வந்து ராணுவத்தில் சாதித்த சிலரைப் பற்றிப் பார்க்கலாம்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த ஒருவர், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கிடைத்த சிறிய வேலைகளைச் செய்துவந்தார். அதேநேரத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் கட்டுமானத் துறையில் வேலை செய்து கொண்டே ராணுவ அலுவலர்களுக்கான போட்டித் தேர்வுக்குத் தயாரானார்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். வெற்றி பெற்று சென்னையில் உள்ள ஓடிஏவில் (OTA-ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறுவனம்) ராணுவ அதிகாரிக்கான பயிற்சியையும் நிறைவு செய்தார். இந்த ஆண்டு ராணுவ அதிகாரியாகப் பணியில் சேர்ந்துள்ளார்.
அதேபோல், ஒரு குக்கிராமத்தில் பிறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சியப் பெண் ஒருவர், ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் கடுமையாக உழைத்தார். நாள்தோறும் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து, உடற்தகுதித் தேர்வுக்கும் எழுத்துத் தேர்வுக்கும் தயாரானார்.
கவனச்சிதறல் எதுவுமின்றிப் பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டார். இதற்காக நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து பயிற்சி மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சியின் பலனாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிடிஎஸ் (CDS) தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் ஓடிஏவில் ராணுவ அதிகாரிக்கான பயிற்சியை நிறைவுசெய்தார்.
எனவே, உங்களுடைய ராணுவக் கனவை நனவாக்க, யுபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் தேர்வுக்கு நீங்கள் தயாராக வேண்டும். இந்தத் தேர்வு, ஓடிஏவில் சேர்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தத் தேர்வு குறித்த சிறு குறிப்பைப் பார்ப்போம்.
சிடிஎஸ் (CDS) தேர்வு மூலம் இந்தியன் மிலிட்டரி அகாடமி (IMA), ஆபிசர்ஸ் டிரெயினிங் அகாடமி (OTA), இந்தியன் நேவல் அகாடமி (INA), ஏர்போர்ஸ் அகாடமி (AFA) ஆகியவற்றில் சேர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது.
கல்வித் தகுதி: இந்தியன் மிலிட்டரி அகாடமி, ஆபிசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் சேர்வதற்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.எம்.ஏ. ஏர்போர்ஸ் அகாடமிக்கான தேர்வுகள் தலா 300 மதிப்பெண்களுக்கும், ஓடிஏவுக்கான தேர்வு 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். இந்தியன் நேவல் அகாடமியில் சேர பொறியியல் பட்டப் படிப்பு அவசியம். ஏர்போர்ஸ் அகாடமிக்கு பி.எஸ்சி. இயற்பியல் அல்லது பொறியியல் பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகும். சிடிஎஸ் எழுத்துத் தேர்வில் தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண் (Negative Marking) உண்டு. ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.33 மதிப்பெண் குறைக்கப்படும்.
அடுத்தக்கட்ட தேர்வுகள்: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்ததாக நேர்முகத் தேர்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து மருத்துவத் தகுதித் தேர்வும் நடத்தப்படும். மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற்றுத் தேர்வாகிறவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அகாடமியில் பயிற்சி பெறுவார்கள். இந்தியன் நேவல் அகாடமி, ஏர்போர்ஸ் அகாடமியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 74 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தியன் மிலிட்டரி அகாடமியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.
எனவே, உங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற அகாடமியைத் தேர்வுசெய்து அதற்கான தேர்வில் வெற்றி பெறும் வகையில் முழு மூச்சுடன் பயிற்சி மேற்கொண்டு, ஒரு சிறந்த ராணுவ வீரராக உருவாக வாழ்த்துகள்!