அருங்காட்சியகங்களில் திரளும் சீனர்கள்… காரணம் என்ன?

அருங்காட்சியகங்களில் திரளும் சீனர்கள்… காரணம் என்ன?
Updated on
2 min read

வடசென்னையில் வசித்தபோது எங்கள் பகுதியில் வசித்தவர்கள் விடுமுறை நாள்களில் ‘செத்த காலேஜுக்குப் போகலாமா அல்லது உயிர் காலேஜுக்குப் போக லாமா’ என்பது குறித்து குடும்பத்தினரோடு விவாதிப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர் களைப் பொறுத்தவரை 'உயிர் காலேஜ்' என்பது உயிரியல் பூங்கா. 'செத்த காலேஜ்' என்பது 'மியூசியம்', அதாவது அருங்காட்சியகம்.

பெரும்பாலும் பலரும் உயிரியல்பூங்காவுக்குப் போவதைத்தான் விரும்பு வார்கள். அருங்காட்சியகங்களுக்கு அலையலையாகச் செல்வது என்பது இந்தியாவில் காணப்படாத ஒன்று. அங்கு செல்வது கடைசித் தேர்வாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால், சீனாவின் நிலை நேர்மாறாக இருக்கிறது.

காரணம் என்ன? - பத்து ஆண்டுகளுக்கு முன்பு அருங் காட்சியகம் செல்வது என்பது சீனாவில் ஓர் உற்சாகமற்ற விஷயமாகத்தான் பலராலும் கருதப்பட்டு வந்தது. வளர்ச்சி, முன்னேற்றம், நவீனம் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டிய நேரத்தில், பழங்காலத்தின் பக்கம் கவனத்தைச் செலுத்துவானேன் என்கிற போக்கு இதற்குக் காரணமாக இருந்தது. ஆனால், இன்று அருங்காட்சியகங்களின் வாசலில் நிற்கும் வரிசை நீண்டு வருகிறது.

2007இல் சீனாவில் சுமார் 1,700 அருங்காட்சியகங்கள் இருந்தன. ஆண்டுக்கு 25 கோடி பேர் அவற்றைச் சென்று பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டு அதைப் போல ஆறு மடங்கு பேர் அருங்காட்சியகங்களுக்குச் சென்றி ருக்கிறார்கள். ஷாங்காயில் உள்ள பண்டைக்கால அருங்காட்சியகம் ஒன்றுக்கு வருகை தந்த மக்கள் எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கவே, சமீபத்தில் தொடர்ந்து 168 மணி நேரம் இடைவெளியே இல்லாமல் அது திறந்து வைக்கப்பட்டிருந்தது.

வரலாற்றின் மீது ஆர்வம்: சீன அரசின் அருங்காட்சியகங்கள் பின்னணியில் சுயநல நோக்கமும் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியின் அருமை பெருமை களை மக்கள் சிறிதும் மறந்துவிடக் கூடாது என்பதற்கு அரசு அருங்காட்சியகங்கள் உதவுகின்றன. தற்போதைய சீன அதிபர் ஷி ஜின்பிங் 2012இல் தான் பதவி யேற்றவுடன் தனது ‘சீனக் கனவு’க்கு வேராக விளங்கியது ஓர் அருங்காட்சி யகம்தான் என்றார். பின்னர் தொடர்ந்து அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வெளிநாட்டு விஐபிக்கள் வந்த போதும் அவர்களை ஏதாவது ஓர் அருங்காட்சியகத்துக்குத் தன்னுடன் அழைத்துச் செல்வார். ஐயாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட மரபு தங்களுடையது என்பதை அவர் அடிக்கடி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

சீன இளைஞர்களுக்குச் சமீப காலமாக சீன வரலாறு, பண்பாட்டின்மீது அதிக அளவில் கவனம் அதிகரித்திருக்கிறது. தொன்மையான பண்பாட்டில் ஆர்வம் கொண்டு சீனத் தொன்மைகளை மதிக்கும் இளைஞர்களை ‘ஹூவோசாவ்’ (Guochao) என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

அருங்காட்சியகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தகவல் வந்தால், உடனே ஆயிரக்கணக்கானவர்கள் அதைக் காண அருங்காட்சியகம் செல்லத் தொடங்குகிறார்கள்.

மாற்றமே மாறாதது: கடந்த பதினைந்து ஆண்டுகளாக சீன அருங்காட்சியகங்கள் புதுப்பிக்கப் பட்டுவருகின்றன. முன்பைவிட நுழைவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுவிட்டன. சில அருங்காட்சியகங்களுக்குக் கட்டணமே கிடையாது. தொன்மையான பொருள்களை மட்டுமே பார்வைக்கு வைப்பது ஒருபுறமிருக்க புரொஜக்டர், முப்பரிமாணத் தோற்றம் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்தக் கால விஷயங்களை நம் கண்முன் நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டி ருக்கின்றன.

கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருக் கும் பொருள்களை மட்டுமே பார்த்துச்செல்வதற்குப் பதிலாக, அவற்றைக் கதைகளைப் போல் விவரித்து ஆவலை அதிகரிக்கும் ஊழியர்களும் அங்கே இருக்கிறார்கள். இந்த உத்தி குறிப்பாக மாணவர்களைக் கவர்கிறது. உள்ளூர் அரசுகள் தங்கள் எல்லைக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தைப் பிரபலப் படுத்த பல வழிகளில் ஈடுபடுகின்றன. நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவது, திருவிழாக் கொண்டாட்டம், இரவிலும் திறந்துவைப்பது போன்ற உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

சீனாவில் உள்ள பெரிய அருங் காட்சியகங்கள் தற்போது இணைய வழிப் பதிவைத் தொடங்கியுள்ளன. ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நேரத்தில்தான் வர வேண்டும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விடுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் பெரும் கூட்டம் நுழைவதைக் கட்டுப்படுத்த முடிகிறது. அருங்காட்சியகங் களின் உள்ளே நடப்பதற்கு என்று குறிப்பிட்ட பாதைகள் உள்ளன. ஆக சீனாவில் ‘செத்த காலேஜ்கள்’ உயிர்ப்புடன் செயல்படுகின்றன. நமக்கான சில படிப்பினைகளையும் உணர்த்துகின்றன.

அருங்காட்சியகங்களில் திரளும் சீனர்கள்… காரணம் என்ன?
‘ஒளி’மயமான எதிர்காலத்துக்கான படிப்பு! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 27

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in