மாணவர்களை ஈர்க்கும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 35

மாணவர்களை ஈர்க்கும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 35
Updated on
3 min read

இது மீடியா யுகம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், அட்வர்டைசிங், பப்ளிக் ரிலேஷன் போன்ற துறைகளை அடக்கிய ஊடகத் தொழில் பெருமளவில் வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் மாஸ் கம்யூனிகேஷன் எனப்படும் மக்கள் தகவல் தொடர்புத் துறை மூலம் இதழியல் உள்ளிட்ட பாடங்கள் கற்றுத் தரப்பட்டன.

சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்து நேரடி அனுபவத்தின் மூலம் பயிற்சி பெற்றது ஒரு காலம். தற்போது மீடியா சம்பந்தப்பட்ட பல்வேறு படிப்புகளைக் கற்றுத்தர தனிப்படிப்புகள் வந்துவிட்டன. விளம்பர யுகமும் தனியார் தொலைக்காட்சிகளில் பிரம்மாண்டமான வளர்ச்சியும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பும், சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் விஷுவல் கம்யூனிகேஷன் என்கிற காட்சித் தொடர்பியல் படிப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக்கியுள்ளது.

சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் கமர்சியல் ஆர்ட் டிப்ளமோ படிப்பு தற்போது பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பாக மாறியுள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் என்கிற விஷுவல் கம்யூனிகேஷன் தொடங்கப்பட்ட பிறகு, தற்போது பல்வேறு கல்லூரிகளில் பரவலாக இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ வகுப்பில் கலைப் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்க ஆர்வமிக்க மாணவர்களின், குறிப்பாக ஓவியத் திறமை கொண்ட மாணவர்களின் முதல் சாய்ஸ் விஸ்காம் படிப்பாக உள்ளது. எனவே, முக்கியக் கல்லூரிகளில் இந்தப் படிப்பில் சேர கடும் போட்டி உள்ளது.

டிராயிங், கலந்துரையாடல், போட்டோகிராபி, அட்வர்டைசிங், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, ஸ்கிரிப்ட் ரைட்டிங், டாகுமெண்டரி படத் தயாரிப்பு, கிராபிக் டிசைனிங், மல்டி மீடியா, வெப் டிசைனிங், எடிட்டிங், பிரிண்ட்டிங் அண்டு பப்ளிஷிங் டிசைன் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் இப்படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு ஊடகத் துறையின் பல்வேறு அம்சங்களின் அடிப்படை அறிமுகம் இருக்கும்.

தன்னாட்சிக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப மீடியா தொடர்புடைய வேறு சில பாடப்பிரிவுகளையும் கற்றுத்தருகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களை வரவழைத்து மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள். இப்படிப்பில் சேரும் மாணரவர்களுக்கு தியரி பாடங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் செய்முறைப் பயிற்சிக்கும் உண்டு.

விளம்பரதாரர்களின் தயாரிப்புகளை மக்களிடம் பிரபலப்படுத்த, மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் படங்களுடன் கூடிய வாசகங்களை உருவாக்குதல், லோகோ, டிரேட் மார்க் விளம்பரங்களை வடிவமைத்தல் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒளிப்படத்தில் ஆர்வமிக்கவர்கள் விளம்பரப் ஒளிப்படக்காரராக ஆகலாம். அனிமேஷன் துறையிலும் வாய்ப்புகள் உண்டு.

தொலைக்காட்சியில் சில நொடிகளே வந்து போகும் விளம்பரக் காட்சிகள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து இழுக்கின்றன. அந்த அளவுக்கு அவை திறமையுடன் புதிய கோணத்தில் எடுக்கப்படுகின்றன. படைப்பாற்றல் அதிகம் தேவைப்படும் இந்தத் துறையிலும் விஸ்காம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கிளைண்ட் சர்வீசிங் எக்ஸிகியூட்டிவ், லேஅவுட் ஆர்டிஸ்ட், காப்பி ரைட்டர், விஷுவலைசர், ஆர்ட் டைரக்டர் என விளம்பர நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் சேரலாம். திறமை, நடிப்பு, உழைப்பு இருந்தால் சின்ன திரையிலும் காம்பியரிங் செய்யலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளராகலாம். திரைப்படத்துறையில் முனைப்புக்காட்டி, அத்துறையில் தடம்பதிக்கும் மாணவர்களும் உண்டு. விஸ்காம் படித்தவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத் துறையில்கூட வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இதேபோல, பத்திரிகை துறையில் ஆர்வமிக்க மாணவர்களுக்குச் செய்தி ஊடகங்களிலும் இணைய ஊடகங்களிலும் வேலை கிடைக்கும். இந்தப் படிப்புடன் திறமையை வளர்த்துக்கொள்ளும் மாணவர்கள், தொலைக்காட்சித் துறை மட்டுமல்ல, திரைப்படத் துறையிலும் காலடி எடுத்து வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எலெக்ட்ரானிக் மீடியா

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் மீடியாவில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்எஸ்சி படிப்பு உள்ளது. இதே படிப்பில் பட்டப்படிப்பு மாணவர்கள் சேருவதற்கு ஏற்ற வகையில் இரண்டு ஆண்டு எம்எஸ்சி எலெக்ட்ரானிக் மீடியா படிப்பு உள்ளது. எம்எஸ்சி மல்டி மீடியா (விஷுவல் கம்யூனிகேஷன் சிறப்புப் பாடம்) இரண்டு ஆண்டுப் படிப்பைப் படிக்கலாம். பாண்டிச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் எம்ஏ மாஸ் கம்யூனிகேஷன், எம்எஸ்சி எலெக்ட்ரானிக் மீடியா ஆகிய படிப்புகள் உள்ளன.

நிருபர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், அரசியல் விவாத நிகழ்ச்சி நடத்துபவர்கள்… இப்படித் தொலைக்காட்சியின் பல்வேறு பிரிவுகளில் எலெக்ட்ரானிக் மீடியா படிப்பைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இணைய இதழ்களிலும் பணியில் சேரலாம். திறமையாளர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை இல்லை. எலெக்ட்ரானிக் மீடியா இன்றைய முக்கியப் படிப்புகளில் ஒன்றாக மாறிவருகிறது. எழுத்தாற்றலும் படைப்பாற்றலும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கற்பதிலும் கையாளுவதிலும் ஆர்வம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு ஏற்ற படிப்பு இது.

ஊடகக் கல்வி நிறுவனங்கள்

அச்சு ஊடகங்களின் வளர்ச்சியைவிட, தொலைக்காட்சி ஊடகம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. எனவே அச்சு ஊடகங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பல கல்வி நிறுவனங்கள் தொலைக்காட்சி, இணைய இதழியலுக்குத் (நியூ மீடியா) தேவையான திறமையாளர்களை உருவாக்குவதற்கான படிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

சென்னையில் ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் கல்வி நிலையத்தில் போஸ்ட்கிராஜுவேட் பிசினஸ் அண்ட் பிசினஸ் மல்டிமீடியா ஜர்னலிஸம், போஸ்ட்கிராஜுவேட் இன்டகிரேட்டட் மல்டிமீடியா ஜர்னலிஸம் ஆகிய ஓராண்டுப் படிப்புகளில் பட்டதாரி மாணவர்கள் சேரலாம். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாஸ் கம்யூனிகேஷன், ரிசர்ச் சென்டரில் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஏற்ற திறமைகளைக் கற்றுத்தரும் இதழியல் படிப்புகளிலும் மாணவர்களிடம் ஆர்வம் உள்ளது.

இதுபோல, முக்கியத்துவம் வாய்ந்த இதழியல் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் கல்வி நிலையத்தில் மீடியா பிசினஸ் ஸ்டடீஸ், ஸ்ட்டேரட்டஜிக் கம்யூனிகேஷன், நியூ மீடியா கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்.ஏ. படிப்புகள் உள்ளன. ஜர்னலிஸம், ரேடியோ அண்ட் டெலிவிஷன் ஜர்னலிஸம், அட்வர்டைசிங் அண்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ், கார்பரேட் கம்யூனிகேஷன் அண்டு பிராண்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடப்பிரிவுகளில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.

தமிழக அரசு புதிதாகத் தொடங்கியுள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிஸம் கல்வி நிலையத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ஜர்னலிஸம் (தமிழ், ஆங்கிலத்தில்) படிக்கலாம். ஏதாவது பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். இதேபோல, சில பிரபல பத்திரிகைகளும் ஊடகக் கல்லூரிகளை நடத்தி வருகின்றன. இதேபோல ஊடகத் துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்குக் கல்வியும் நேரடிப் பயிற்சியும் அளிக்கும் கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ளன.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர் | தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com

(நிறைந்தது)

மாணவர்களை ஈர்க்கும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 35
படைப்பாக்கத் திறன் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற டிசைனிங் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 34

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in