படைப்பாக்கத் திறன் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற டிசைனிங் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 34

டிசைனிங் படிப்புகள்

டிசைனிங் படிப்புகள்

Updated on
3 min read

எந்தப் பொருளிலுமே டிசைனிங் என்கிற வடிவமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. டிசைனிங் என்றதும் ஃபேஷன் டிசைனிங் மட்டுமேயான துறை என்று கருதிவிடக் கூடாது. கம்ப்யூட்டரில் உள்ள சிப்பை வடிவமைப்பதற்குக்கூட சிப் டிசைனர்கள் தேவை. அழகிய கட்டிடங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்டுகளுக்கும் டிசைனிங் என்பது முக்கியமானது.

மோட்டார் வாகனங்கள் போன்ற தொழில்துறைகளிலும் டிசைனிங் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்ஜின் வடிவமைப்பிலிருந்து அதன் வெளிப்புற வடிவமைப்பு வரை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தால்தான் மார்க்கெட்டில் இடம்பிடிக்க முடியும். எனவே, டிசைனிங் என்பது தவிர்க்க முடியாத முக்கியத் துறையாக உருவாகியுள்ளது.

நாட்டிலேயே டிசைன் படிப்புகளைப் படிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன். பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் இதன் விரிவாக்க மையங்கள் உள்ளன. மத்திய அரசின் வணிகம் - தொழில் துறை அமைச்சகத்தின் மூலம் நடந்து வரும் இந்தக் கல்வி நிறுவனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் மையத்தில் டிசைன் துறையில் பி.டெஸ். என்கிற நான்கு ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பு உள்ளது. அனிமேஷன் பிலிம் டிசைன், எக்ஸிபிஷன் டிசைன், பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், கிராபிக் டிசைன், செராமிக் அண்ட் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்ட் இன்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்.

ஆந்திரப்பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம், அசாம் ஆகிய இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் மையங்களில் கம்யூனிகேஷன் டிசைன், இன்டஸ்ட்ரியல் டிசைன், டெக்ஸ்டைல் அண்ட் அப்பேரல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்.

முதல் இரண்டு செமஸ்டர்கள், அதாவது முதலாண்டில் டிசைனர் ஆவதற்கான அடிப்படைப் பயிற்சியும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறப்புப் பாடங்களில் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். முதல் முறையிலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மூன்று ஆண்டு டிப்ளமோ படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர்க்கப்படும் முதல் ஆண்டின் முடிவில், அதாவது இரண்டு செமஸ்டர்களில் மாணவர்களின் திறமை அடிப்படையில், சிறப்புப் பாடங்களைத் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்க்க இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு (Design Aptitude Test) நடைபெறும். முதல் கட்டத் தேர்வு காகிதத்தில் விடை எழுதும் வகையில் இருக்கும். கேள்வித்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

சென்னை, பெங்களூரு, விஜயவாடா, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நிலைத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தகுதி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக, ஸ்டுடியோ சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட், இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட் ஆகிய தேர்வுகளை எழுத வேண்டியதிருக்கும். இதில் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 60 சதவீதமும் இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 40 சதவீதமும் என்கிற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

இதேபோல டிசைன் படிப்பு தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படிக்க சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. மும்பையில் உள்ள ஐஐடியில் பி.டெஸ். படிப்பைப் படிக்கலாம். காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மானுபாக்ச்சரிங் (IITDM) கல்வி நிறுவனத்தில் டிசைன் என்ஜினியரிங் பாடப்பிரிவில் பி.டெக். படிப்பு உள்ளது. அத்துடன், இன்டகிரேட்டட் புராடக்ட் டிசைன் பாடப்பிரிவில் எம்.டெஸ். படிப்பும் உள்ளது.

மும்பையில் உள்ள ஐஐடியில் ஸ்கூல் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்ச்சர் கல்வி நிலையத்தில் டிசைனிங் தொடர்பான முதுநிலைப் பட்டப் படிப்புகளைப் படிக்கலாம். அகமதாபாத்தில் உள்ள சென்டர் ஃபார் என்விரான்மெண்ட்ல் ப்ளானிங் டெக்னலாஜி பல்கலைக்கழகத்தில் டிசைன் ஆனர்ஸ் இளநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கலாம்.

டிசைனிங் படிப்புகள்

டிசைனிங் படிப்புகள்

இந்தப் பல்கலைக்கழகத்திலேயே அர்பன் டிசைன் இளநிலைப் பட்டப்படிப்பைப் படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் டிசைன் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ஆஃப் கான்கிரீட் ஸ்டரக்சர்ஸ், கம்ப்யூட்டர் எய்டு டிசைன் ஆஃப் கான்கிரீட் ஸ்டரக்சர்ஸ் ஆகிய துறைகளில் படிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

புதுடெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன், புணேயில் உள்ள சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், மும்பையில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் டிசைன் அண்ட் இன்னவேஷன் போன்று பல்வேறு டிசைன் கல்வி நிறுவனங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், கிராபிக் டிசைன் போன்ற தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு டிசைன் படிப்புகளைக் கற்றுத்தரவும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதேபோல இன்டீரியர் டிசைன் படிப்பும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது..

முக்கிய உற்பத்தித் தொழில் நிறுவனங்களிலும் டிசைனர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காலணி வடிவமைப்புத் துறையில் படித்தவர்கள் தோல் பொருள் தயாரிப்பு நிறுவனங்களிலும் டெக்ஸ்டைல் டிசைனிங் படிப்பைப் படித்தவர்கள் ஜவுளி நிறுவனங்களிலும் கிராபிக் டிசைனிங் படித்தவர்கள் விளம்பர நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பைப் பெறலாம்.

தொழில் உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், நவீன ஃபர்னிச்சர் தொழில் நிறுவனங்களில் இன்டஸ்ட்ரியல் டிசைனிங் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படித்த திறமையான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துவிடுகிறது.

இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு விளம்பர நிறுவனங்கள், தொழில் உற்பத்தி நிறுவனங்கள், ஃபர்னிச்சர் நிறுவனங்கள், வர்த்தக மேம்பாட்டு நிறுவனங்கள், இன்டீரியர் டிசைன் நிறுவனங்கள், சானிட்டரிவேர் நிறுவனங்கள், கண்ணாடிப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள்… இப்படிப் பல்வேறு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

டிசைனிங் படிப்புகள்

டிசைனிங் படிப்புகள்

தோஷிபா, சிடிஎஸ், டிசிஎஸ், இன்போசிஸ், ஐபிஎம் இந்தியா, மைக்ரோசாஃப்ட் இந்தியா, நோக்கியா, ஆரக்கிள், டைட்டன், தனிஷ்க், மாருதி சுசுகி, அசோக் லேலண்ட், டாபே, ஹெச்பி லேப்ஸ், லாஜிடெக், ஜே.பி. மோர்கான், சாம்சங் இந்தியா போன்ற ஏராளமான நிறுவனங்கள் இங்குப் படிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்ய வருகின்றன. படைப்பாக்கத் திறனும் புதுமையான சிந்தனையோட்டமும் டிசைனிங்கில் ஆர்வமும் உள்ள இளைஞர்களின் திறமையைப் பட்டைத் தீட்டுவதற்கான வாய்ப்புதான் டிசைனிங் எனப்படும் வடிவமைப்புப் படிப்பு.

விவரங்களுக்கு: www.nid.edu

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com

டிசைனிங் படிப்புகள்

கலை ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 33

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in