கல்லூரி நேர்காணலுக்குத் தயாராக டிப்ஸ்!

கல்லூரி நேர்காணலுக்குத் தயாராக டிப்ஸ்!
Updated on
1 min read

பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிப் படிப்பில் சேர்வதற்கான நேர்காணல் என்பது உங்கள் மதிப்பெண்களை மட்டும் மதிப்பிடு வதற்கானது அல்ல. பொதுவாக மதிப்புமிக்க உயர் கல்வி நிறுவனங்கள், முதுநிலைப் படிப்புகளில் சேர நினைக்கும்போது நேர்காணல் செய்யப்பட வாய்ப்பு அதிகம்.

நீங்கள் எப்படிச் சிந்திக்கிறீர்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதம், அந்தப் படிப்பை ஏன் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதும் மதிப்பிடப்படும். நேர்காணல் நடத்துபவர்களிடம் உங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் ஏற்கெனவே இருக்கும்.

எனவே, உங்களது திறமைகள், ஆர்வமுள்ள விஷயங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்கள். “தலைமைத்துவ அனுபவத்தை விவரி யுங்கள்”, “நீங்கள் தோல்வியடைந்த ஒரு தருணத்தைப் பற்றிக் கூறுங்கள்”, “கருத்து முரண்பாட்டை எவ்வாறு கையாண் டீர்கள்?” என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.

அந்தச் சூழலில் என்ன நடந்தது, உங்கள் பொறுப்பு என்ன, நீங்கள் என்ன செய்தீர்கள், அதன் விளைவு என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். ஒருவேளை நீங்கள் விண்ணப் பிக்கும் துறை சார்ந்து ஏன் படிக்க விரும்புகிறீர்கள், எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்கிற கேள்வியும் கேட்கப்படலாம்.

இக்கேள்விக்குப் பொதுவான பதில்களைத் தவிர்க்க வேண்டும். அந்தத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படுத்திய குறிப்பிட்ட பாடம், அனுபவம் அல்லது நபரைப் பற்றிக் கூறி, அது உங்கள் இலக்குடன் எப்படிப் பொருந்துகிறது என்பதை விளக்குங்கள்.

“ஏன் இந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறீர்கள்?” என்கிற கேள்விக்கு, பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் இணைய தளத்தை முன்கூட்டியே பாருங்கள். உங்கள் துறையின் பாடத்திட்டம், பேராசிரியர்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள், மாணவர் மன்றங் கள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்துப் உங்கள் பதிலை அளிக்கலாம்.

நிமிர்ந்து உட்கார்வது, சீரான வேகத்தில் பேசுவது, கண்களைப் பார்த்துப் பேசுவது போன்ற அடிப்படை விஷயங்களும் முக்கியம். சிறிய இடைவெளி எடுத்துப் பதிலளிப்பது, நிதானமாகச் சிந்திக்க உதவும்.

ஒரு கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால் அதை நேர்மையாகக் கூறி, அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வேன் என்று சொல்லலாம். மெய்நிகர் (Virtual) நேர்காணல்களின்போது கேமராவைக் கண் மட்டத்தில் வைக்க வேண்டும்.

பளிச்சிடுவதுபோல அல்லாமல் வெளிர் நிறப் பின்னணியைப் பயன்படுத் துங்கள். பேசும்போது திரையில் உங்கள் முகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக கேமரா லென்ஸைப் பாருங்கள்.

தெளிவு, ஆர்வம், நேர்மை ஆகிய மூன்றுமே ஒரு நல்ல நேர்காணலுக்கு அடிப்படை. முன்தயாரிப்பே வெற்றி யைத் தீர்மானிக்கும். சத்தமாகப் பேசிப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்துள்ள துறையைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.

பெரும்பாலான நேர்காணல்கள், “எங்க ளிடம் கேட்பதற்கு உங்களிடம் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?” என்கிற கேள்வி யுடன் முடிவடையும். அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, நீங்களும் கேள்விகளைக் கேட்டு உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள்.

- ஆசியன் (பயிற்சி இதழாளர்)

கல்லூரி நேர்காணலுக்குத் தயாராக டிப்ஸ்!
பொதுத் தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in