கடலடியில் ஒளிந்திருக்கும் முத்தான வாய்ப்புகள்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 29

கடலடியில் ஒளிந்திருக்கும் முத்தான வாய்ப்புகள்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 29
Updated on
2 min read

உலகப் பரப்பில் 71% கடலால் ஆனது. 36 கோடி சதுர கிலோமீட்டர் பரந்த இந்தக் கடல்வெளி, மனிதகுலத்தின் மிகப் பெரிய செல்வக் களஞ்சியம். ஆனால் இதுவரை இதில் மனிதன் ஆராய்ந்தது வெறும் 5% மட்டுமே. இந்த நிலையில், கடலியல் (Oceanography) இன்று மிக முக்கியமானதாக இருந்தும் புறக்கணிக்கப்பட்ட அறிவியல் துறையாகவே உள்ளது.

இந்தியாவில் கடலியல்

கடலியல் என்பது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல் ஆகிய ஐந்து அறிவியல் துறைகளின் கலவை. இது இயற்பியல் கடலியல் (கடலோட்டங்கள், அலைகள், வெப்பநிலை), வேதியியல் கடலியல் (கடல்நீரின் தன்மை), உயிரியல் கடலியல் (கடல் உயிரினங்கள்), புவியியல் கடலியல் (கடல் தளத்தின் அமைப்பு) என நான்கு முக்கியக் கிளைகளாகப் பிரிக்கப்படுகிறது.

உலக அளவில் கடலியல் ஆராய்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்திய அறிவிய லாளர்களும் பங்களித்துள்ளனர். 1960களில் ‘International Indian Ocean Expedition’இல் இந்திய விஞ்ஞானிகள் முக்கியப் பங்கு வகித்தார்கள். அதன் விளைவாகவே கோவாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷனோகிராஃபி (CSIR-NIO) நிறுவப் பட்டது. ஆனால், அதற்குப் பின்னர் இந்தியாவில் கடலியல் படிப்பும் ஆராய்ச்சியும் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை.

1966 ஜனவரியில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் 38 ஆய்வகங்களில் ஒன்றாகும். கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அதன் கிளைகள் செயல்படுகின்றன.

உயிரியல் கடலியல், வேதியியல் கடலியல், புவியியல் கடலியல், இயற்பியல் கடலியல், கடல் தொழில்நுட்பவியல், கடல் தொல்பொருள் ஆய்வு, கடல் கருவியியல் ஆகிய துறைகளில் இந்நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

எதிர்காலத்தின் தேவை

இந்தியா 7,600 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டிருந்தாலும் இன்றுவரை இந்தியாவில் எந்தக் கடல் காற்றாலைத் திட்டமும் முழுமையாகச் செயல் பாட்டுக்கு வரவில்லை. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் விண்ட் எனர்ஜி (NIWE) கணக்கீட்டின்படி தமிழ்நாடு, குஜராத் கடலோரங்களில் இணைந்து மொத்தம் 70 கிகா வாட் கடல் (தலா ஏறக்குறைய 35 கிகா வாட்) காற்றாலைத் திறன் உள்ளது.

இது பலகோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டது. உலகின் கடல் சார்ந்த காற்றாலைத் திறனில் சீனா சுமார் 50% வைத்திருக்கிறது. பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகள் இதன் மூலம் பெரும் வருவாய் ஈட்டுகின்றன. இந்தியா 2030ஆம் ஆண்டுக் குள் 30 கிகா வாட் இலக்கை எட்ட நிர்ணயித்திருந்தாலும், இன்னும் ஒரு திட்டமும் நடைமுறைக்கு வராதது கவலைக்குரியது.

கடலியல் படிப்புகள்

இந்தியாவில் கடலியல் படிப்புகள் குறைவாகவே உள்ளன. முனைவர் பட்டப் படிப்புக்கு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷனோகிராஃபி போன்ற நிறுவனங்களில் சேர முடியும். ஆனால் பி.எஸ்சி., எம்.எஸ்சி., அளவில் நேரடிப் படிப்புகள் மிகச் சில கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கின்றன.

கடலியலில் பட்டம் பெற்றவர்கள் மத்திய, மாநில அரசின் கடல் ஆராய்ச்சி நிறுவனங்கள், எண்ணெய் - இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC), ஆயில் இந்தியா, கடல் சார்ந்த நிர்மாண நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் (UNEP, FAO), நாசா, தேசியக் கடல் - வளிமண்டல நிர்வாகம் (NOAA) போன்றவற்றில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

உலக அளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் கடலியல் வல்லுநர்கள் தேவை என்று மதிப்பிடப்படுகிறது. இதனால், இத்துறையை நோக்கி மாணவர்கள் திரும்பிப்பார்க்க வேண்டிய நேரம் இது.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

கடலடியில் ஒளிந்திருக்கும் முத்தான வாய்ப்புகள்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 29
தொழில்நுட்ப உலகை வழிநடத்தும் ஃபோட்டானிக்ஸ் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 28

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in