

உலகளவில் மிகப் பெரிய வர்த்தகம் விளையாட்டை நம்பி நடக்கிறது. இந்தச் சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.37,50,000 கோடி. கிரிக்கெட்டில் மட்டும் 2025இல் சட்டபூர்வமாகப் புரண்டது ரூ.34,560 கோடி. உலகளவிலான இந்த வருவாயில் பிசிசிஐ, 62 சதவீதத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் எனப் புதிதான விளையாட்டுத் தொடர்கள், ஒளிபரப்பு உரிமை, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, வியாபாரம் என இதில் ஏகப்பட்ட வருமானப் பிரிவுகள் இருக்கின்றன. அதேபோல 2023 முதல் 2026 வரையிலான ஃபிஃபா கால்பந்தின் மொத்த வருவாய் ரூ.1,17,000 கோடி. ஒருகாலத்தில் பொழுதுபோக்காக இருந்த விளையாட்டு, இன்று பல லட்சம் கோடிகள் புரளும் உலகளாவிய வணிகமாக உருவெடுத்துவிட்டது.
எங்கு படிக்கலாம்? - இவ்வளவு பெரிய துறை, பணம் புரளும் வணிகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் எழும். அதற்காகவே ‘Sports Law' என்கிற விளையாட்டு சார்ந்த சட்டப் படிப்பு உலகளவில் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்துவருகிறது.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டு, மெல்பர்ன் போன்றவற்றில் எல்லாம் இந்தப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. சர்வதேச மாணவர்கள் இந்தப் படிப்பின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இது தவிர, விளையாட்டுத் துறையில் உலகத்தரம் வாய்ந்த சட்டப் படிப்புகளை வழங்கும் சிறந்த பல்கலைக்கழகங்கள் சில:
ISDE பிசினஸ் ஸ்கூல், ஸ்பெயின்: இங்கு வழங்கப்படும் 'சர்வதேச விளை யாட்டுச் சட்ட மாஸ்டர்' படித்தவர்கள், ஃபிஃபா, விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (Court of Arbitration for Sport) போன்ற அமைப்புகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
நேச்சடெல் பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்து: இங்கிருக்கும் 'ஃபிஃபா மாஸ்டர்' படிப்பு, விளையாட்டு மேலாண்மைச் சட்டத்தில் உலகின் முதன்மையான படிப்பாகக் கருதப்படுகிறது.