

சர்வதேச அளவில் தொற்றுநோய்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. அந்தக் காலத்தில் ஒவ்வொரு தட்பவெப்பத்திற்கும் ஏற்ப வெவ்வேறு வகையான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒவ்வொரு பகுதி யிலும் ஒவ்வொரு நோயின் தாக்கம் இருந்தது. ஆனால், அண்மைக் காலமாக உருமாறும் வைரஸ்களின் தாக்கம் பெரிதாக இருக்கிறது.
முக்கியப் படிப்பு: தட்பவெப்ப நிலைகளைத் தாண்டி எல்லா நாடுகளையும் அந்த வைரஸ்கள் புரட்டிப் போடுகின்றன. உதாரணமாக, கரோனா வைரஸைச் சொல்லலாம். பல நூறு உயிர்கள் பறிபோனது ஒரு தாக்கமென்றால், உலகம் முழுவதையும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டது கரோனா. சுகாதாரப் பிரச்சினையோடு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் அது உருவாக்கியது.
21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் அழிவுகளில் ஒன்றாக வரலாற்றில் அது பதிவாகிவிட்டது. சுகாதாரம் என்பது மாநில, தேசியப் பிரச்சினையாக இல்லாமல் சர்வதேசப் பிரச்சினையாக உருமாற்றம் அடைந்து விட்டது. இனிவரும் காலத்தில் இம்மாதிரியான உருமாறும் வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்கி றார்கள் மருத்துவ அறிஞர்கள்.
இந்தச் சூழலில் ‘குளோபல் ஹெல்த்’ துறையின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் ‘குளோபல் ஹெல்த்’ சார்ந்த படிப்புகளைத் தொடங்கி விட்டன. சர்வதேச மாணவர்கள் மத்தியில் அந்தப் படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்துவருகிறது.
‘குளோபல் ஹெல்த்’ என்பது வெறும் மருத்துவம் சார்ந்த படிப்பு மட்டுமல்ல. நோய்களுக்கான காரணிகள், அது உருவாகும் விதம், அவற்றைக் கட்டுப்படுத்து வதற்கான மருந்துகள், அது தாக்கம் செலுத்தும் சமூக - பொருளாதாரச் சூழல், அவசரச் சூழலைச் சமாளிக்கும் நிர்வாக நடைமுறைகள், பிற துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வழிகள், பேரிடர் மேலாண்மை போன்ற வற்றை எல்லாம் இந்தப் படிப்பில் மாணவர்கள் படிக்கிறார்கள்.
எப்படிப்பட்ட படிப்பு? - ஆராய்ச்சி, களப்பணிகள், ஆராய்ச்சி நடைமுறைகள் கொண்ட கல்வி இது. மருத்துவ அறிவியல் மட்டுமன்றிச் சமூக அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கொள்கை ஆய்வுகளையும் ஒருங்கிணைக்கும் விரிவான களம். கரோனா போன்ற பெருந்தொற்றுகள் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சியின் தேவையை வெளிப்படுத்தின.
தகுந்த முன்னேற்பாடுகளோ ஆராய்ச்சிகளோ இல்லாததால் உலகம் செய்வதறியாது கைபிசைந்து நின்றது. சர்க்கரை நோய்க்கும் மாரடைப்புக்கும் பல்லாயிரம் கோடிகளில் ஆராய்ச்சி செய்த மனிதகுலம், கரோனா போன்ற சர்வதேசத் தொற்றுகளை எதிர்கொள்வதற்கான ஆரம்ப காலப்பணிகளைத் தொடங்கவில்லை.
பாதிப்பின் தீவிரம் உயரத் தொடங்கிய பிறகு, இந்தியா தைரியமாகக் களமிறங்கி ஒரு தடுப்பூசியைக் கண்டறிந்து உலகைக் காப்பாற்றியது. ஆனால், அதில் காட்டிய தீவிரத்தை எதிர் காலத்திற்கான ‘குளோபல் ஹெல்த்’ என்கிற கல்வித்துறையின் மீது காட்டவில்லை. இன்னும் நம் பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான துறைகள் தொடங்கப் படவில்லை.
இந்தப் படிப்பில் பயிற்றுவிக்கப்படும் பிரிவுகள்: சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு (Global Health Security): அவசரகாலத் திட்டமிடல், வலுவான நோய் கண்காணிப்பு அமைப்புகள், நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாடுகள், தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், காலநிலை மாற்றம், சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தல் போன்று நாடுகளின் எல்லைகளைத் தாண்டிய உலகளாவிய சவால்களை அறிவியல்ரீதியாக ஆய்வு செய்வது பற்றிய பிரிவு இது.
சுற்றுச்சூழல் சுகாதாரம் - மீள்தன்மை (Environmental Health & Resilience): காலநிலை மாற்றம் பொதுச் சுகாதாரத் தில் பெரிய தாக்கத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கிறது. இயற்கைப் பேரிடர்களால் பொருளாதார இழப்புகள் மட்டுமன்றி, நோய் அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு சுகாதாரக் கடமையாகக் கருதவேண்டிய தருணம் இது.
அதற்கான உத்திகளை வடிவமைத்து, மருத்துவம், சுற்றுச்சூழல் அறிவியல், பொருளாதாரம் போன்ற துறைகளை ஒருங்கிணைத்து இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தொற்று நோய்கள் - பாதுகாப்பு (Infectious Disease & Security): புதிதாக உருவாகும் கிருமிகள், காலங்காலமாக மனித குலத்தை அச்சுறுத்தும் தொற்றுநோய்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள நவீனத் தடுப்பு - கண்காணிப்பு உத்திகளை இந்தப்பிரிவு ஆய்வு செய்யும்.
பெருந்தொற்று களுக்கு முன்கூட்டியே தயார் நிலையையும், அவற்றின் தாக்கத்துக்குப் பின் சமூகத்தில் விரைவில் மீளக்கூடிய திறனையும் உறுதிசெய்வது தொடர்பாகச் சர்வதேச ஆய்வுகளை இப்பிரிவு ஒருங்கிணைக்கும்,.
இவை தவிர மருத்துவத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவை மருத்துவத்தில் இணைத்துப் பயன் படுத்துவது, தொலை மருத்துவம், தரவுப் பகுப்பாய்வு, மருத்துவத் துறையில் டிஜிட்டல்மயமாக்கல், உலகளாவிய மனநல ஆய்வுகள், பண்பாட்டுரீதியாகப் பொருத்தமான அணுகுமுறைகள் பற்றியும் மாணவர்கள் இந்தப் படிப்பில் கற்றுக்கொள்வார்கள்.
தவிர ‘ஹெல்த் ஜஸ்டிஸ்’ இந்தப் படிப்பில் ஓர் அங்கமாகும். சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், பாகுபாடுகளை அடையாளம் கண்டு, அனைவருக் கும் சமமான ஆரோக்கிய உரிமை கிடைப்பதற்கான கொள்கைகளை வகுப்பதே இந்தப் பிரிவு. மேலும் ஊட்டச் சத்து - உணவுப் பாது காப்பு, புற்றுநோய் மருத்துவம் போன்ற பிரிவுகளும் இந்தப் படிப்பில் உள்ளன.
சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் பல வற்றில் ‘குளோபல் ஹெல்த்’ படிப்புகள் வந்துள்ளன. இத்துறையில் முதுகலை 20 மாதப் படிப்பை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் வழங்குகிறது. டிரினிட்டி காலேஜ் ஆஃப் டப்ளின், எம்.எஸ்சி., குளோபல் ஹெல்த் படிப்பை வழங்குகிறது. இங்கிலாந்து மான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகம்.
இதில் எம்.எஸ்சி.,பி.ஜி. டிப்ளமோ, பி.ஜி. சான்றிதழ் போன்ற படிப்புகளைத் தருகிறது. இந்தப் படிப்பு களுக்குக் கணிசமான உதவித்தொகையும் தரப்படுகிறது. படிக்கும் காலத்தி லேயே ஆராய்ச்சிகளில் பங்கேற்று, வருமானமும் அனுபவமும் கூடப் பெற முடியும்.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு முன்பாக நம் மாணவர்கள் சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்பு களில் சேரலாம். உரிய தகுதியோடு இருக்கும் பட்சத்தில் முழு கல்வி உதவித் தொகையோடு படிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org