

ஃபோட்டானிக்ஸ் அறிவியல் துறையின் தேவையோடு ஒப்பிடும்போது, ஃபோட்டானிக்ஸ் தொடர்புடைய படிப்பைத் தேர்வுசெய்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டிகள், என்.ஐ.டிகள் ஆகிய எல்லாவற்றிலும் சேர்த்து ஏறக்குறைய 2,000 மாணவர்கள் மட்டுமே ஃபோட்டானிக்ஸ் படிப்பைப் பயில்கின்றனர்.
எங்குப் படிக்கலாம்?
இந்தியாவிலேயே ஃபோட்டானிக்ஸ் படிப்பில் முன்னோடி நிறுவனம் கொச்சி அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (CUSAT) உள்ள சர்வதேச ஃபோட் டானிக்ஸ் பள்ளி (International School of Photonics — ISP).
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் நேரடியாக ஃபோட்டானிக்ஸ் படிக்க வழிவகுக்கும் ஒரே நிறுவனம் இதுதான். இங்கு ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., எம்.டெக்., முதுகலைப் படிப்புகளும், முனைவர் பட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன.
இவை தவிர அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.இ., / எம்.டெக் (ஃபோட்டானிக்ஸ் பொறியியல்) படிப்பு வழங்கப் படுகிறது. ஐ.ஐ.டி சென்னையில் எம்.டெக்., (அப்ளைடு ஆப்டிக்ஸ் / ஃபோட்டானிக்ஸ்), பி.ஹெச்.டி., படிப்பு வழங்கப்படுகிறது. ஐ.ஐ.டி டெல்லி, கான்பூர் கல்வி நிறுவனங்கள் எம்.டெக் (ஃபோட்டானிக்ஸ் ஆப்டோ எலக்டிரானிக்ஸ் / லேசர் டெக்னா லஜி) படிப்பை வழங்குகிறது.
இந்தியாவில் இளநிலையை முடித்துவிட்டு வெளிநாட்டில் மேற் படிப்பையோ ஆராய்ச்சியையோ தொடர விருப்பமுள்ள மாணவர் களுக்கு இந்தத் துறை மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
கொச்சி அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பைப் பயிலும் மாணவர்களுக்கு, உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஃபோட்டானிக்ஸ் சார்ந்த உயர் கல்வியைத் தொடர கல்வி உதவித் தொகைகள் எளிதாகக் கிடைக்கின்றன. இங்குப் படிக்கும் மாணவர்கள் பலரும் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று சாதித்து வருகின்றனர்.
தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்
உலக அளவில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஃபோட் டானிக்ஸ் உள்ளிட்ட முன்னேற்ற அறிவியல், பொறியியல் துறைகளில் பாடப்பிரிவுகளைக் கற்பிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி., ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், கால்டெக் ஆகியவையும், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி, சுவிட்சர்லாந்தின் ஈ.டி.எச். ஸூரெக் (Zurich) போன்ற பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு இத்துறை சார்ந்து வலுவான அடித்தளத்தை உருவாக்கு கின்றன.
வேலைவாய்ப்புகள்
ஃபோட்டானிக்ஸ் அறிவியல் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் இஸ்ரோ, பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள், பாதுகாப்பு லேசர் தொழில்நுட்ப நிறுவனங்கள், பாரத் எலக்டிரானிக்ஸ் லிமிடெட், பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கலாம். தனியார் துறையைப் பொறுத்த வரை தொலைத்தொடர்பு, ஃபைபர் நெட்வொர்க் சேவைகள், தகவல் தொழில்நுட்பத் துறை, செமி கண்டக்டர் துறை போன்றவற்றில் இத்துறை சார்ந்தவர்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள்.
இத்துறையில் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.12–15 லட்சம் வரையும், 4 முதல் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவருக்கு ரூ.18–25 லட்சம் வரையும், மூத்த நிபுணர்களுக்கு ரூ. 40 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவிலும் ஃபோட்டானிக்ஸ் துறையில் பணியாற்ற ஆள்கள் தேவைப்படுகிறார்கள்.
ஐ.பி.ஜி ஃபோட்டானிக்ஸ், இன்டெல், ஹுவாவே போன்ற பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் ஃபோட் டானிக்ஸ் பொறியாளர்களை அதிக அளவில் நியமித்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பாவில் இத்துறை யில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ. 67 லட்சம் முதல் ரூ.1.25 கோடிவரை என்று கணிக்கப்படுகிறது. உயர் கல்வித் தகுதி, அனுபவம் கூடக்கூட இதைவிடவும் அதிக வருமானம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
எதிர்காலத் தொழில்நுட்ப உலகை வழிநடத்தும் முக்கியத் துறைகளில் ஒன்றாக ஃபோட்டானிக்ஸ் அறிவியல்உருவெடுத்துவருகிறது. இதனால் இப்படிப்பில் திறன் பெற்றால் கிடைக் கும் உலகளாவிய வாய்ப்புகளைத் தவற விடாது இந்தத் துறையின்மீது மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
- கட்டுரையாளர்,உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org