வேலைக்குத் திரும்பும் தாய்மார்களே…

வேலைக்குத் திரும்பும் தாய்மார்களே…
Updated on
2 min read

பேறுகால விடுப்பு முடிந்து தாய்மார்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது சில சவால்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

குழந்தையைப் பிரிந்திருப்பது, வீட்டையும் வேலையையும் சமாளிப்பது, வேலையைச் சிறப்பாகச் செய்வது எனப் பல மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழும்போது, அவற்றை எதிர்கொள்வதில் சிரமம் இருக்கலாம். அவற்றை எப்படிச் சமாளிக்கலாம்?

உணர்வுகளைக் கையாள்வது எப்படி?

வேலைக்கு மீண்டும் திரும்பும் போது உடன் பணிபுரிபவர்களை மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சி, இடை வெளிக்குப் பின்னர் வேலையைத் தொடங்குவது குறித்த அச்சம், குழந்தையைப் பிரியும் சோகம் எனப் பல்வேறு உணர்வுகள் மேலெழும்.

முன்புபோல் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிற வருத்தம் தேவையில்லை. இவை அனைத்தும் இயல்பானவைதான்.

எனவே, வேலைக்குத் திரும்பிய தாய்மார்கள் தங்கள் மனநலனைப்பேணுவதற்கு நெருக்கமானவர் களுடன் பேசலாம். தேவைப்பட்டால் நிபுணர்களின் உதவியையும் நாடலாம்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்

தனிக்குடித்தனக் குடும்பத்தில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் குழந்தைப் பராமரிப்பு முக்கியமான சவாலாகும்.

குழந்தைகள் காப்பகம், பகல்நேரக் காப்பகம் அல்லது நம்பிக்கையான பராமரிப்பாளர்கள் எனத் தேவையான வற்றை முன்னரே திட்டமிடுவது நல்லது. நீங்கள் வேலைக்குத் திரும்புவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே குழந்தையைப் புதிய சூழலுக்குப் பழக்குங்கள்.

புதிய முறையைப் பழகுங்கள்

மீண்டும் வேலைக்குத் திரும்பிய பின்னர், உங்கள் காலை நேர அன்றாட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டத்தை ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கிவிடலாம்.

காலையில் எழுந்திருக்கும் நேரம், குழந்தையைத் தயார்படுத்துவது, உணவு என அனைத்தையும் எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை அந்த ஒரு வாரத்தில் பழகிக்கொள்ளலாம்.

ஏனெனில், உங்களுடன் சேர்த்து குழந்தையையும் தயார்படுத்துவதற்கு வழக்கத்தைவிட அதிக நேரம் செலவாகலாம். இரண்டு வாரங்களுக்கு முன்ன தாகவே தேவையான உடைகளைத் தயார் செய்துவிடுங்கள். பாலூட்டும் தாய்மார்கள் என்றால், பாலைச் சேகரித்து வைக்க வசதியான உடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அணியினருடன் உரையாடுங்கள்

வேலையில் சேர்வதற்கு முன்பு உங்கள் அணியினருடன் பேசுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் நடைபெற்ற வேலைகள், அலுவலகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், முக்கியமான திட்டங்கள், தற்போதைய வேலைகள் எனத் தேவையான விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதேபோல் நீங்கள் இல்லாதபோது உங்களின் வேலைகள் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு இருக்கும். எனவே, நீங்கள் வேலைக்குத் திரும்பியவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்புகள் குறித்து முன்னதாகவே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது, தேவையானவற்றை முன்கூட்டியே எடுத்துச்செல்வதற்கு இது வசதியாக இருக்கும். இது தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன் வேலையில் உங்களின் அர்ப்பணிப் பையும் காட்டும்.

முதலில் செய்ய வேண்டியவை

வேலையில் சேர்ந்தவுடனே கடு மையான வேலைகளை உடனே செய்யவேண்டிய அவசியமில்லை. எளிமையாகச் செய்யக்கூடிய வேலை களைச் சில காலம் செய்யலாம்.

மனிதவள அதிகாரியுடன் பேசி நெகிழ்வான நேரம் (flexible timing), பகுதி நேரம் (Part-Time) அல்லது வீட்டிலி ருந்து வேலை (work from home) என வாய்ப்பிருந்தால் அவற்றில் உங்களுக்கு ஏற்றவற்றைக் கேட்டுப் பெறலாம். படிப்படியாக வேலையை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

பணியிட எல்லைகள்

வேலையில் சேர்வதற்கு முன்னர் உங்கள் மேலாளருடன் தொடர்பு கொண்டு வேலை நேரம், குழந்தைப் பராமரிப்பு, இடைவேளை ஆகியவை குறித்துத் தெளிவாகப் பேசிக் கொள்ளுங்கள்.

பாலூட்டும் தாய்மார்கள் என்றால், பால் சேகரிப்பதற் கான வசதி, அதற்கான இடைவேளை குறித்து மனிதவள அதிகாரியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் சட்ட உரிமைகள், நிறுவனத்தின் கொள்கைகள் ஆகிய வற்றை முன்னரே தெரிந்துகொள்வது நல்லது.

குற்றவுணர்வு வேண்டாம்

குழந்தையை விட்டுவிட்டுப் வேலைக்குச் செல்வதால் சில தாய்மார்களுக்குக் குற்றவுணர்வால், ‘குழந் தையைவிட வேலை முக்கியமா, நான் சுயநலவாதியா?‘ என்பன போன்ற கேள்விகள் எழும்.

பொருளாதாரப் பாதுகாப்பு, உங்களின் அடையாளம் உள்ளிட்ட அனைத்துமே குடும்ப நலனின் அங்கம்தான். எனவே, தேவையற்ற குற்றவுணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிற்காலத் தில் அது குறைந்துவிடும்.

தன்னம்பிக்கை

உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். வேலையை மீண்டும் தொடங்கியவுடனே சிறப்பாகச் செயல்படவேண்டிய தேவையில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின்வேலையை மீண்டும் தொடங்கும் போது உங்களுக்குத் தெரிந்து கொள்வதற்கு எண்ணற்ற புதிய தகவல்கள் இருக்கலாம்.

அவற்றை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். வேலையில் செய்யும் சிறிய சாதனைகளைக்கூடக் கொண்டாடி, உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

மனதும் உடலும் தயாரா?

மனரீதியாகத் தயாராவதைப் போலவே உடல்ரீதியாகத் தயாராவதும் முக்கியம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம். அது உங்களுக்கு உடல் வலுவையும் புத்துணர்வையும் அளிக்கும்.

உங்களின் உறக்கப் பழக்கத்தை ஒரு வாரத்துக்கு முன்னரே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போது தான் அலுவலகம் செல்லும்போது சிரமம் இருக்காது.

மேலும் குழந்தை, குடும்பம், வேலைக்கு மத்தியில் உங்கள் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பேறுகால ஓய்வுக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பும்போது உங்களுக்குச் சில சிரமங்கள் ஏற்படுவது இயல்புதான்.

எனவே, அவற்றுக்கான தீர்வைத் தேடுங்கள். குடும்பம் – வேலை என இரண்டையும் சமாளிக்கக் கற்றுக்கொள்வதுதான் முக்கியம். எனவே, இரண்டு இடங்களிலும் சிக்கலின்றி வேலையை மகிழ்ச்சியாக செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள்.

- தர்ஷினி

வேலைக்குத் திரும்பும் தாய்மார்களே…
உயிரித் தொழில்நுட்பத்தில் தொழில் வாய்ப்புகள் | வெற்றி உங்கள் கையில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in