உயிரித் தொழில்நுட்பத்தில் தொழில் வாய்ப்புகள் | வெற்றி உங்கள் கையில்

உயிரித் தொழில்நுட்பத்தில் தொழில் வாய்ப்புகள் | வெற்றி உங்கள் கையில்
Updated on
2 min read

நான் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கிறேன். படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வதா அல்லது ஆராய்ச்சி செய்வதா எனக் குழப்பமாக உள்ளது. எனக்கு உயிரித் தொழில்நுட்பத்தில் ஏதேனும் கண்டுபிடித்து, எளிய மக்கள் பயனடையும் வகையில் ஒரு தொழில் நிறுவனம் நடத்த ஆசை. வழி சொல்லுங்கள். – ராமலிங்கம், ஜெயங்கொண்டான்.

இன்றைய காலக்கட்டத்தில் உயிரித் தொழில்நுட்பம் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மனித குலத்துக்குத் தேவையான வேளாண்மைத் துறை முதல் மருந்துகள், மருத்துவத் துறைவரை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

உங்கள் எதிர்காலத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ஏராளமான ஆராய்ச்சி உதவித் திட்டங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

இந்திய அரசின் பயோ டெக்னாலஜி துறை (DBT), ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வதற்காக BET (Biotechnology Eligibility Test) தேர்வை இணையவழியில் நடத்துகிறது. இது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம்.

உங்களுக்கு ஏதேனும் பயோ டெக்னாலஜி நிறு வனத்தில் பணிபுரிய விருப்பம் இருப்பின், முதுகலைப் பட்ட அளவிலான பயோ இண்டஸ்ட்ரியல் டிரெயினிங் புரோகிராம் என்கிற ஆறு மாதப் பயிற்சியை முன்னணி பயோ டெக், மருந்து, வேளாண் நிறுவனங்களில் பெற்றிட பயோ டெக்னாலஜி துறை வழிவகை செய்யும்.

மேலும், BEST (Biotechnology Entrepreneurship Student Teams) என்கிற திட்டத்தின் மூலம் உயிரித் தொழில்நுட்பத் துறையில் உள்ள முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிந்து, அதை வணிகரீதியில் கொண்டுசெல்லும் வகையில் தொழில்முனை வோருக்கான வழிகாட்டுதல் கட்டமைப்பை உருவாக் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கும் பயோ டெக்னாலஜி துறை உரிய நிதியளிக்கிறது. இவை மட்டுமல்ல, அண்மையில் ‘AIEDFP’ (AICTE Innovation and Entrepreneurship Doctoral Program) திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.60,000 வழங்கப்படும். நான்காவது, ஐந்தாவது ஆண்டுகளில் மாதம் ரூ.70,000 வழங்கப்படும். இதைத் தவிர, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஓர் ஆராய்ச்சியாளருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த உதவித்தொகை 150 பிஎச்.டி.

ஃபெல்லோஷிப்களுக்கு வழங்கப்படும். இதன் அடிப்படை அம்சம் என்னவெனில், பிரச்சினைகளை எதிர்கொண்டு அதற்குத் தீர்வு காணும் வகையில் அமையும் புதிய கண்டுபிடிப்புகளாகவும், அதன் மூலம் ஏற்படும் சமூகத் தாக்கத்தின் நன்மைகளைக் கொண்ட ஆராய்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை முழு நேர பிஎச்.டி. மாண வர்களாகப் பொறியியல், டெக்னாலஜி, மேலாண்மை, டிசைன், திட்டமிடுதல், அப்ளைடு சயின்ஸ், பார்மசி, இதர தொழில்சார் துறைகள் (ஏ.ஐ.சி.டி.இ.யால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

நிலைத்த-தூய எரிசக்தி, வேளாண்மை, தண்ணீர் மேலாண்மை, காலநிலை மாற்றம் ஆகிய பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் மேற்கூறியவற்றில் அடங்கும்.

இதற்கு விண்ணப்பிக்க www.aicte.india.org அல்லது www.fellowship.aicte.gov.in என்கிற இணையதளங்களை நேரடியாக அணுக வேண்டும். இந்த அதிகாரபூர்வத் தளங்கள் தவிர, பிற பயிற்சி இணையதளங்கள் மூலம் அணுகுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் கனவை நனவாக்கப் பல வாய்ப்புகள் உள்ளன. மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந் தெடுத்து உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.

உயிரித் தொழில்நுட்பத்தில் தொழில் வாய்ப்புகள் | வெற்றி உங்கள் கையில்
போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லாப் பயிற்சி | வெற்றி உங்கள் கையில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in