பூமிக்குள் புதைந்திருக்கும் எதிர்காலம் வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 48

பூமிக்குள் புதைந்திருக்கும் எதிர்காலம் வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 48
Updated on
2 min read

நாம் அணியும் ஒவ்வொரு நகை யிலும், செலுத்தும் ஒவ்வொரு வாகனத்திலும், கட்டும் ஒவ்வொரு கட்டிடத்திலும் ஏதோ ஒரு வகையில் சுரங்கவியல் பொறியியலின் பங்கு இருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களின் மூலப்பொருள்கள் பூமிக்குள் இருந்து எடுக்கப்படும் கனிமங்கள்தான்.

சுரங்கவியல் பொறியியல்

கனிம வளங்களை அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்து, பாதுகாப்பாக வெளியே எடுத்து, பயன் பாட்டுக்குக் கொண்டுவரும் பணியைச் செய்வதே சுரங்கவியல் பொறியியல்.

இது வெறும் தோண்டும் பணி அல்ல. பூமிக்குள் இருக்கும் கனிம வளங்களைக் கண்டறிதல், அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக வெளியே எடுப்பது எனத் திட்டமிடுதல், கனிமங்களைப் பிரித்துப் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றுதல் எனப் பல்வேறு பணிகளை உள்ளடக்கியது.

இதற்குப் புவியியல், இயந்திரப் பொறியியல், சுரங்கப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அறிவியல், தரவு அறிவியல் எனப் பல துறைகளின் அறிவு தேவைப் படுகிறது.

சுரங்கப் பணி முடிந்த பிறகு, அந்த நிலத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மீட்டெடுப்பதும் சுரங்கவியல் பொறியியலின் முக்கியப் பகுதியாகும்

நாம் அன்றாடம் பயன் படுத்தும் பல பொருள்களின் பின்னணியில் கனிம வளங்கள் உள்ளன. வீட்டுக் கட்டிடம், சாலைகள் கட்டுவதற்குத் தேவையான சுண்ணாம்புக்கல், கருங்கல் முதல் மின்சாரக் கருவிகளுக்குப் பயன்படும் செம்புவரை பல பொருள்கள் சுரங்கங்களில் இருந்து கிடைக்கின்றன.

திறன்பேசி, கணினி போன்ற மின்னணு சாதனங்களிலும் மின்சார வாகனங்களின் மின்கலன்களிலும் பயன்படுத்தப்படும் லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்களும் முக்கிய மானவை.

வேலைவாய்ப்புகள்

கட்டுமானம், ஆற்றல், மின்னணு வியல், வாகனத் தொழில், வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளின் வளர்ச்சிக்குச் சுரங்கப் பொறியியல் முக்கிய அடித்தளமாக உள்ளது. தொழில் நுட்பம் வளர வளர, புதிய வகைக் கனிமங்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால், இந்தத் துறையின் முக்கியத்துவமும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

சுரங்கவியல் பொறியியல் படித்த வர்களுக்குச் சுரங்கத் தொழிலில் மட்டுமல்லாமல், அதனுடன் தொடர் புடைய பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

சுரங்கத் திட்டமிடல், கனிம வள ஆய்வு, சுரங்கப் பாதுகாப்பு, குவாரி மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுரங்கப் பொறி யாளர்கள் பணியாற்றுகின்றனர்.

நிலக்கரி, இரும்புத் தாது, தங்கம், செம்பு போன்ற கனிமச் சுரங்கங்கள் மட்டுமன்றி, சிமென்ட், எஃகு, அலுமினியம், எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட தொழில்களிலும் சுரங்கப் பொறியாளர்களுக்கு வாய்ப்பு கள் உள்ளன.

குறிப்பாக, மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் லித்தியம், கோபால்ட், நிக்கல் உள்ளிட்ட முக்கியக் கனிமங்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது. இதனால், எதிர்காலத்தில் சுரங்கவியல் பொறி யியல் துறையில் வேலை வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.

சுரங்கவியல் பொறியியலின் அடுத்த கட்டம் பூமிக்கு வெளியேயும் இருக்கலாம். நிலவின் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டி நீர் உள்ளிட்ட வளங்களை எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படுத்துவது குறித்து உலக நாடுகளும் விண்வெளி நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன.

பூமியிலிருந்து அனைத்துப் பொருள்களையும் எடுத்துச்செல்லாமல், நிலவு அல்லது செவ்வாய் போன்ற துணைக் கோள், கோள்களில் கிடைக் கும் வளங்களையே பயன்படுத்தும் முறைக்கு ‘தளத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்துதல்’ (In-Situ Resource Utilisation) என்று பெயர். இதனால், எதிர்காலத்தில் விண்வெளியில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தும் சுரங்கத் தொழில் நுட்பமும் சுரங்கவியல் பொறியியலின் புதிய துறையாக உருவாகக்கூடும்.

இந்தியாவில் சுரங்கவியல் பொறி யியல் இளநிலைப் படிப்பில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டுவரை மொத்தமாக 8,000க்கும் குறை வான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

நிலவு, செவ்வாயில் சுரங்கப் பணிகள் எப்படிச் சாத்தியமாகும், இந்தத் துறையில் இந்தியாவின் பங்கு என்ன என்பதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

பூமிக்குள் புதைந்திருக்கும் எதிர்காலம் வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 48
இந்தியா எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 47

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in