

உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான அமெரிக்காவின் எம்.ஐ.டியில் படிக்கும் இளங்கலை மாணவர் கள்கூட ‘Earth, Atmospheric and Planetary Sciences’ (EAPS) - புவி, வளிமண்டலம், கோள் அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அப்படியானால், இந்தியாவில் இத்துறைக்கு எத்தகைய முக்கியத்துவம் இருக்கிறது?
மருத்துவம், பொறியியல் மட்டும்தானா?
மருத்துவமும் பொறியியலும் மட் டுமே பாதுகாப்பான எதிர்காலத்துக்கான பாதைகள் என்கிற எண்ணமே பெரும் பாலும் காணப்படுகிறது. இதனால் பாறைகள், மேகங்கள், நட்சத்திரங்கள், காலநிலை போன்றவற்றில் ஆர்வ முள்ள மாணவர்களின் அறிவியல் ஆர்வம் பின்தள்ளப்படுகிறது. “இதைப்படித்தால் என்ன வேலை கிடைக்கும்?” என்கிற கேள்வியும் அவர்களைத் தடுக்கிறது.
ஆனால் புவி, வளி மண்டலம், கோள் அறிவியல் என்பது ஆர்வத்துக்கான படிப்பு மட்டுமல்ல. நீர், கனிம வளங்கள், காலநிலை, பேரிடர்கள், சுற்றுச்சூழல், ஆற்றல், விண்வெளி என நாட்டின் பல முக்கியத் தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய துறை இது.
காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, நிலத்தடி நீர் குறைதல், இயற்கைப் பேரிடர்கள், கனிம வளங்கள், புதிய ஆற்றல் வளங்கள், விண்வெளி ஆய்வு என இந்தியா எதிர்கொள்ளும் பல சவால்களைப் புரிந்துகொள்ள புவி, வளிமண்டலம், கோள் அறிவியல் ஆகிய துறைகள் தேவைப்படுகின்றன.
எடுத்துக் காட்டாக வெள்ளம், வறட்சி போன்ற பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள மழைப்பொழிவு மட்டுமல்ல; நிலப்பரப்பு, மண், நீர்வளம், காலநிலை உள்ளிட்ட பல காரணிகளை ஒரே நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய சிக்கல் களைப் புரிந்துகொண்டு தீர்வுகளை உருவாக்கப் பயிற்சிபெற்ற நிபுணர்கள் அவசியம்.
வாய்ப்புகள்
இந்தியாவில் இத்துறையில் வாய்ப்புகளே இல்லை என்று சொல்ல முடியாது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI), தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனம் (NIOT), இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) உள்ளிட்ட நிறுவனங்களில் இத்துறை தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்கள் (IISER), இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IIT) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களிலும் இத்துறைசார் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவராக வேண்டும், பொறி யாளராக வேண்டும் என்றால், அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பது பலருக் கும் தெரியும்.
ஆனால், காலநிலை அறிவியலாளராக வேண்டும், புவியிய லாளராக வேண்டும், கோள் அறிவியலில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், இந்தத் துறைகள் சார்ந்து படித்து எதிர் காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிற தெளிவு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இன்னும் உருவாக வில்லை.
இந்தத் தகவல் பள்ளி நிலையிலேயே மாணவர்களுக்குச் சென்றுசேர வேண் டும். புவியியல் (Geology), வளிமண்டல அறிவியல் (Atmospheric Science), காலநிலை அறிவியல் (Climate Science), கோள் அறிவியல் (Planetary Science) போன்ற படிப்புகள் மூலம் பல்வேறு ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகளுக்குச் செல்ல முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
அதேபோல், ஆராய்ச்சி நிதி, ஆய்வகங்கள், கள ஆய்வு வசதிகள், தரவுகளுக்கான அணுகல் போன்றவற்றையும் அரசு, கல்வி நிறுவனங்கள் விரிவுபடுத்த வேண்டும். பல்கலைக்கழகங்கள், தொழில்துறை இணைந்து செயல்பட்டால், இந்தத் துறையில் புதிய ஆராய்ச்சி சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
கல்விக்கான முதலீடு
ஒரு மாணவரின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பது, அவரது தனிப்பட்ட எதிர்காலத்தை உருவாக்கு வதோடு மட்டுமல்லாமல், நாட்டுக்குத் தேவையான அறிவியல் திறனையும் உருவாக்குகிறது.
நிலத்தடி நீர் எங்கே குறைகிறது? எந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்படலாம்? காலநிலை மாற்றம் எதை அதிகம் பாதிக்கும்? கடல் மாற்றங்கள் மக்களை எவ்வாறு பாதிக்கும்? இவை எப்போதோ நடைபெற இருக்கிற எதிர்காலக் கேள்விகள் அல்ல.
இந்தியா இன்று எதிர்கொள்ளும் சவால்கள். புவி, வளிமண்டலம், கோள் அறிவியல் துறைகளில் வாய்ப்புகளை அதிகரிப்பது, கல்விக்கான முதலீடு மட்டுமல்ல; இந்தியாவின் நீர், காலநிலை, வளங்கள், பேரிடர் மேலாண்மை, விண்வெளி என எதிர்காலத் தேவைகளுக்கான முதலீடும்கூட.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org