சட்டம் பேச பட்டப் படிப்பு | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 29

சட்டம் பேச பட்டப் படிப்பு  | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 29
Updated on
3 min read

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அம்பேத்கர் தலைமையில் பல்துறை வல்லுநர்கள், அரசியல் சட்ட மேதைகள் இணைந்து உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே இங்கு ஐனநாயக ஆட்சி நடந்து வருகிறது. சட்டங்களும் நீதிமன்றங்களும் வலுவாகத் தங்களது கடமையைச் செய்து கொண்டிருக்கும்போதுதான் ஐனநாயகம் நிலைத்து நிற்கும்.

தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சட்டத்திற்குப் புறம்பான, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்கும், அநீதிகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவதற்கும் சட்டம் உதவுகிறது. குடிமக்களின் வாழ்க்கையில் சட்டம் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கிறது. சட்டம் படித்துவிட்டு, வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் பணியாற்றுபவர்களே நம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் காவலர்களாகத் திகழ்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல் போலவே சட்டமும் ஒரு தொழிற் படிப்புதான். முன்பு ஏதாவது பட்டப் படிப்பு படித்தவர்கள்தான் சட்டப்படிப்பில் சேர முடியும் என்கிற நிலைமை இருந்தது. சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட மாணவர்களை இளம் வயதிலேயே ஈர்க்க வேண்டும் என்பதற்காக 5 ஆண்டு சட்டப் படிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. பிளஸ் டூ படித்த மாணவர்கள், உயர் கல்வி படிப்பதற்காகத் தேர்வு செய்ய வேண்டிய படிப்புகளில் முக்கியமானது சட்டப் படிப்பு.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக வளாகத்தில் சீர்மிகு சட்டக் கல்லூரியில் (ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்) பி.ஏ.எல்.எல்.பி. (ஆனர்ஸ்), பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) பி.பி.ஏ.எல்.எல்.பி. (ஆனர்ஸ்) பி.சி.ஏ. எல்.எல்.பி. (ஆனர்ஸ்) ஆகிய படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.

பி.ஏ.எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிப்பில் பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப்பிரிவையும் எடுத்துப் படித்தவர்கள் சேரலாம். பி.காம்., எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் பிரிவு பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பி.சி.ஏ., எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டு பாலிடெக்னிக் டிப்ளமோ படித்தவர்களும் சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது. இங்கு, பட்டப்படிப்பு மாணவர்கள் சேருவதற்கான மூன்று ஆண்டு சட்டப் படிப்பும் உண்டு.

சென்னை (புதுப்பாக்கம், பட்டறை பெரும்புதூர்) , செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, காரைக்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் பி.ஏ.,எல்.எல்.பி., ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். பாலிடெக்னிக்கல்லூரிகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்களும் ஐந்து ஆண்டுப் படிப்பில் சேரலாம்.

அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இளநிலைப் சட்டப்படிப்பு படிக்க விரும்பும் பொதுப்பிரிவு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள் தவிர்த்து பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இப்படிப்பில் சேர வயது வரம்பு இல்லை. தொழிற் பயிற்சி (வொகேஷனல்) படிப்பு மாணவர்களுக்கு 4 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசு சட்டக் கல்லூரிகளிலும் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு இல்லை.

நேஷனல் லா ஸ்கூல் என்று அழைக்கப்படும் மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு கிளாட் (Common Law Admission Test) என்கிற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். பெங்களூரு, ஹைதராபாத், போபால், கொல்கத்தா, ஜோத்பூர், ராய்ப்பூர், காந்திநகர், சில்வாசா, லக்னோ, பாட்டியலா (பஞ்சாப்), பாட்னா, கொச்சி, கட்டாக் (ஒடிஸா), ராஞ்சி, அமீர்காவுன் (அசாம்), விசாகப்பட்டினம், திருச்சி, மும்பை, நாக்பூர், சத்ரபதி சாம்பஜிநகர், சிம்லா, ஜபல்பூர், சோனாபட் (ஹரியாணா), அகர்தலா, பிரயாகஞ்ச், கோவா ஆகிய ஊர்களில் நேஷனல் லா ஸ்கூல்கள் செயல்பட்டு வருகின்றன.

இரண்டு மணி நேரம் நடைபெறும் கிளாட் நுழைவுத் தேர்வில் 120 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில மொழி, நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பொது அறிவு, லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், குவான்டிடேடிவ் டெக்னிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் (ஒரு தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் வீதம் ) உண்டு. பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 45 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

கரக்பூர் ஐஐடியில் இன்டலெக்சுவல் புராப்பர்ட்டிலா என்கிற சட்டப் படிப்பில் பொறியியல், மருத்துவம் படித்தவர்களும் எம்பிஏ படித்தவர்களும்கூட சேரலாம். மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி, புணேயில் உள்ள அரசு சட்டக் கல்லூரி போன்ற பிரபலமான சட்டக் கல்லூரிகள் பல உள்ளன.

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளும் தனியார் சட்டப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றில் சேரும் முன்பு அக்கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பார்த்துச் சேர வேண்டும்.

இளநிலை சட்டப்படிப்பைப் படித்தவர்கள், பல்வேறு சிறப்புச் சட்டப் பிரிவுகளில் முதுநிலைப்பட்டம் பெறலாம். சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, பார் கவுன்சிலில் உறுப்பினராகப் பதிவு செய்த பிறகே நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியும். வெற்றிகரமான வழக்கறிஞர் ஆவதற்குக் கடின உழைப்பும் அதிகப் பொறுமையும் தேவை. அனுபவம் மிக்க வழக்கறிஞர் ஒருவரிடம் ஜுனியராகச் சேர்ந்து சில ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.

அப்போதுதான், வழக்குக்கான மனுக்களைத் தயாரிப்பது, தாக்கல் செய்வது உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளை நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன், வழக்குகளை நடத்துவது எப்படி, அதற்காக வாதிடுவது எப்படி, தேவையான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிப்பது எப்படி போன்ற விவரங்களையும் படிப்படியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் சட்ட நுணுக்கங்களையும் சீனியர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். தனியே அலுவலகம் வைத்து, நீதிமன்றத்தில் தனித்து வழக்காடி சம்பாதிக்கச் சில ஆண்டுகள் பிடிக்கும். வழக்கறிஞர் தொழிலில் பிரபலமாகிவிட்டால் அப்புறம் வருமானத்துக்குப் பஞ்சமில்லை.

மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள லா ஃபார்ம்களில் சட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தனியார் தொழில் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகலாம். சட்டப்படிப்பைப் படித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று, சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி, இந்திய ஆட்சிப் பணிகளில் இடம்பிடிப்பவர்களும் உண்டு. வாதத் திறமைமிக்கவர்கள் சில ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு, அரசு வழக்கறிஞர்களாவதும் உண்டு. அனுபவமிக்க சிறந்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். சட்டத்தில் ஆர்வமிக்க மாணவர்கள் சட்டப் படிப்புகளில் சேரலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://tndalu.ac.in/ | https://consortiumofnlus.ac.in/

| கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர் | தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com

சட்டம் பேச பட்டப் படிப்பு  | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 29
நல்ல வேலை நல்கும் கம்பெனி செக்ரட்டரி படிப்பு | புதியன விரும்பு 2.0 – அத்தியாயம் 28

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in