

நல்ல வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய கம்பெனி செக்ரட்டரி (ACS) படிப்பை வழங்குகிறது இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா (The Institute of Company Secretaries of India). நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இதன் மண்டல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் இதன் பிரிவு அலுவலகங்கள் உள்ளன.
ரூ.5 கோடியும் அதற்கு மேலும் மூலதனம் செய்யப்பட்ட கம்பெனிகள் கட்டாயம் ஒரு கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது கம்பெனிகள் சட்ட விதி. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் முழு நேர கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும். சர்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ் சான்றிதழை இன்ஸ்டிடியூட்டில் பெற்ற பிறகு தனியே பிராக்டிஸ் செய்யலாம். ரூ.10 லட்சம் பங்கு முதலீட்டில் (Paid-up share Capital) அல்லது ரூ.5 கோடிக்குக் குறைவாக உள்ள நிறுவனங்களில் கம்பெனி செக்ரட்டரி சான்றிதழ் பெற்றவர்கள் அவசியம் தேவை. கம்பெனி செக்ரட்டரி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சான்றிதழ்களை வழங்குவதும் கம்பெனி செக்ரட்டரி தான்.
நிர்வாகத் தலைவர், தலைமை செயல் அதிகாரி, இயக்குநர்கள், தலைமை நிதி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதிருக்கும். பெரிய தொழில் நிறுவனங்கள் பெருகி வரும் இக்காலத்தில் கம்பெனி செக்ரட்டரியின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில் நிறுவனத்தின் சட்ட நிர்வாகியாக மட்டுமல்லாமல், நிதி நிர்வாகம், பணியாளர் நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளிலும் நிர்வாகம் செய்வதில் கம்பெனி செக்ரட்டரிகளின் பங்கு முக்கியமானது.
செபி, ரிசர்வ் வங்கி போன்ற அரசு அமைப்புகளின் விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதும் கம்பெனி செக்ரட்டரிகளின் பணிகளில் அடங்கும். நிர்வாக இயக்குநர்களின் கூட்டத்தின் தீர்மானங்களை வரையறை செய்யவும், அதனை ஒருங்கிணைக்கும் பணியும் அவர்களுக்கு உண்டு.
கம்பெனி செக்ரட்டரி எக்ஸிகியூட்டிவ் நுழைவுத் தேர்வை (CSEET) பிளஸ் டூ படித்த மாணவர்கள் எழுதலாம். 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இத்தேர்வில் மாற்றம் செய்யப்படுகிறது. பிசினஸ் கம்யூனிக்கேஷன், ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் அக்கவுண்டிங், எகனாமிக் அண்ட் பிசினஸ் என்விரான்மெண்ட், பிசினஸ் லா அண்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளில் இத்தேர்வை எழுத வேண்டியதிருக்கும்.
ஃபவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் டூ படித்த மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். சி.ஏ., காஸ்ட் அக்கவுண்டிங் படிப்புகளில் இறுதிக் கட்ட நிலையில் இருப்பவர்களும் பட்டதாரிகளும் (நுண்கலை தவிர மற்ற அனைத்துப் பாடப்பிரிவு பட்டதாரிகளும்) முதுநிலைப் பட்டதாரிகளும் இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அவர்கள் நேரடியாக கம்பெனி செக்ரட்டரி எக்ஸிகியூட்டிவ் புரோகிராமில் சேர பதிவு செய்யலாம்.
பட்டப்படிப்பில் இறுதி ஆண்டில், இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களும் நேரடியாக கம்பெனி செக்ரட்டரி எக்ஸிகியூட்டிவ் புரோகிராமில் சேர நேரடியாகப் பதிவு செய்யலாம்.
கம்பெனி செக்ரட்டரி எக்ஸிகியூட்டிவ் புரோகிராமில் இரண்டு பகுதிகளில் ஏழு பாடப்பிரிவுகள் உள்ளன. இதன் முதல் பகுதியில் கம்பெனி லா, காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங்,எகனாமிக் அண்ட் கமர்சியல் லாஸ், டாக்ஸ் லாஸ் அண்ட் பிராக்டிஸ் ஆகிய நான்கு பாடங்களும் இரண்டாம் பகுதியில் கம்பெனி அக்கவுண்ட்ஸ் அண்ட் ஆடிட்டிங் பிராக்டிசஸ், கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்ட் செக்யூரிட்டி லாஸ், இன்டஸ்ட்ரியல், லேபர் அண்ட் ஜெனரல் லாஸ் ஆகிய மூன்று பாடங்களும் உள்ளன.
புரஃபஷனல் புரோகிராமில் உள்ள நான்கு பகுதிகளில் 8 பாடப்பிரிவுகள் உள்ளன. கம்பெனி செக்ரட்டிரி பிராக்டிஸ், டிராப்டிங், அப்பியரன்ஸஸ் அண்ட் பிளீடிங்ஸ், பைனான்சியல், டிரஸரி அண்ட் போரக்ஸ் மேனேஜ்மெண்ட், கார்ப்பரேட் ரீ ஸ்டரக்சரிங் அண்ட் இன்சால்வன்ஸி, ஸ்ரேட்டஜிக் மேனேஜ்மெண்ட், அலையன்சஸ் அண்ட் இன்டர்நேஷனல் டிரேட், அட்வான்ஸ்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் பிராக்டிசஸ், டியூ டெலிஜென்ஸ் அண்ட் கார்ப்பரேட் கம்ப்ளையன்ஸ் மேனேஜ்மெண்ட், கவர்னன்ஸ், பிசினஸ் எதிக்ஸ் அண்ட் சஸ்டெயினபிலிட்டி ஆகிய எட்டுப் பாடப்பிரிவுகள் உள்ளன.
பேங்கிங் லா அண்ட் பிராக்டிஸ், கேப்பிட்டல், காமாடிட்டி அண்ட் மணி மார்க்கெட், இன்சூரன்ஸ் லா அண்ட் பிராக்டிஸ், இன்டெக்சுவல் புராப்பர்ட்டி ரைட்ஸ் – லா அண்ட் பிராக்டிஸ்,இன்டர்நேஷனல் பிசினஸ் – லாஸ் அண்ட் பிராக்டிசஸ் ஆகிய ஐந்து விருப்பப் பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தைத் தேர்வு செய்து அந்தத் தேர்வை எழுத வேண்டும்.
எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் தேர்வுக்காகப் பதிவு செய்யும் மாணவர்களுக்கு 3 நாட்கள் மாணவர்கள் தொடக்கநிலை பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற வேண்டும். எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு ஒரு மாத காலம் எக்ஸிகியூட்டிவ் டெவலப்மெண்ட் புரோகிராமில் பங்கேற்க வேண்டும். 21 மாத காலம் நேரடிப் பயிற்சியும் உண்டு.
புரபஷனல் எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் கார்பரேட் லீடர்ஷிப் டெவலப்மெண்ட் புரோகிராமில் பங்கேற்க வேண்டும். சிறப்பாகப் படித்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்கும் சாத்தியங்களும் உண்டு.
கம்பெனி செக்ரட்டரி புரோகிராம் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேரடிப் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் கம்பெனி செக்ரட்டரி இன்ஸ்டிட்யூட்டில் அசோசியேட் உறுப்பினராகப்பதிவு செய்யலாம். தற்போது சுமார் 74 ஆயிரம் உறுப்பினர்களும் 2 லட்சம் மாணவர்களும் உள்ளனர்.
கம்பெனி செக்கரட்டரி படிப்பை முதுநிலைப் படிப்பாகப் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ளது. இந்தப் படிப்பைப் படித்து முடித்தவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நேரடியாக பிஎச்டி படிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்துடன் இன்ஸ்டியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில், அங்கு பி.காம்., எம்.காம். படிக்கும் மாணவர்களுக்கு சில பாடங்களை எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல, காஸ்ட் அக்கவுண்டிங், எல்.எல்.பி. படித்துவிட்டு, கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்புவர்களுக்கு சில பாடங்களை எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: www.icsi.edu
- கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் | தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com