கோவில்பட்டி மாணவரின் ‘விண்வெளியில் ஏ.ஐ’ ஆய்வு

கோவில்பட்டி மாணவரின் ‘விண்வெளியில் ஏ.ஐ’ ஆய்வு
Updated on
1 min read

இஸ்ரோ சார்பில் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ‘ஸ்பேஸ் மிஷன் கிராஃப்ட் ஆபரேஷன்’ என்கிற சர்வதேசக் கருத்தரங்கில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள், ஆய்வு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

‘விண்வெளியில் ஏஐ பயன்பாடு’ என்கிற தலைப்பில் கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த கணினி அறிவியல் துறை மாணவர் க.ராகுல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

விண்வெளியில் இயந்திரங்கள் மூலம் தட்பவெப்ப நிலையை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதைவிட ‘Extremophile’ பாக்டீரியாவைப் பயன்படுத்தி நிலப்பரப்பையே வாழத் தகுந்த சூழலாக மாற்ற முடியுமா எனக் கருத்தரங்கில் அவர் கேட்ட கேள்வி விவாதிக்கப்பட்டது.

“சாதாரணமாக ஏஐ, அதற்கு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்தான் பதிலளிக்கும். ஏஐ ஏஜென்ட்கள் பல வேலைகளைச் செய்தாலும், ஒரு கேள்விக்கான பதிலை வழங்குவதற்கு அவை ஒன்றுடன் மற்றொன்று ஆலோசிப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வாக ஏஇஐ (Artificial Ether Intelligence) என்கிற கருத்தை அறிமுகப்படுத்தினேன்.

மனித உடலில் ஓர் உறுப்புக்குத் தகவல் கிடைத்தவுடன், நரம்பு மண்டலம் மூலம் மற்ற உறுப்புகளும் உடனடியாகத் தகவமைத்துக்கொள்வதைப் போல, ஏஇஐயிலும் அனைத்து ஏஜென்ட்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும். ஒரு ஏஜென்ட்டுக்குக் கிடைக்கும் தகவல் மற்ற ஏஜென்ட்களுக்கும் உடனடியாகச் சென்றடைவதால், தகவல் பரிமாற்றத்தில் தாமதம் இருக்காது.

இந்த முறையை விண்வெளியில் செயல்படுத்தினால் மண், காற்று, வெப்பம் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்யும் தனித் தனி ஏஜென்ட்களை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கலாம். ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கண்காணிப்பதைவிட, இந்தப் பணியை ஏஇஐ எளிமையாக்கும் என்பதையே ஆய்வறிக்கையில் விளக்கி யிருந்தேன்.

ஏஐயின் தற்போதைய பயன்பாடுகளைத் தாண்டி, அதன் அடுத்தகட்ட வளர்ச்சியை ஆராயும் நோக்கில்தான் இந்த ஆய்வை மேற்கொண்டேன். விண்வெளி ஆய்வில் ஈடுபடும் அறிவியலாளர்களுக்கு ஏஇஐ எந்த அளவுக்கு உதவக்கூடும் என்பதையும் விளக்கியிருந்தேன்” என்றார் ராகுல்.

எதிர்காலத்தில் ஏஐ முக்கியப் பங்காற்றும் நிலையில், விண்வெளி ஆய்வுகளில் ஏஇஐ பயன்பாட்டை முன்வைத்துத் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமர்ப்பித்துள்ள இந்த ஆய்வு, பொறியியல் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கோவில்பட்டி மாணவரின் ‘விண்வெளியில் ஏ.ஐ’ ஆய்வு
சதுப்புநிலப் பாதுகாப்பும் மக்களின் வாழ்வாதாரமும் சமம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in