

பள்ளிக்கரணையின் ராம்சர் தளத்தைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ. பகுதிக்குள் புதிய கட்டுமானங்களுக்குத் தடை விதித்திருக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு, சுற்றுச்சூழல் பார்வையில் வரவேற்கத்தக்கது. அதேவேளையில், அப்பகுதியில் நிலம், வீடு வைத்திருப்பவர்கள் மத்தியில் இந்த உத்தரவு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும் அவற்றைச் சார்ந்த உயிர்ப் பன்மையையும் பாதுகாக்கும் பொருட்டு ராம்சர் தளம் அடையாளப்படுத்தப்படுகிறது. 2022இல் ராம்சர் தளமாக, சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையில், இதன் ஒரு பகுதியான பெரும்பாக்கம் ஈரநிலப் பகுதியில் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஒரு பிரபல தனியார் கட்டுமானக் குழுமம் ஈடுபட்டது; அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் 2025 ஜனவரியில் பெற்றது.