‘யூடியூபை மட்டும் நம்பித் தொழில் செய்ய மாட்டேன்!’ - இளம் தொழில்முனைவோர்

‘யூடியூபை மட்டும் நம்பித் தொழில் செய்ய மாட்டேன்!’ - இளம் தொழில்முனைவோர்
Updated on
3 min read

இந்தியாவில் புத்தொழில், சிறுதொழில் நிறுவனங்கள் சாதித்துவருவது பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். நாமே பல புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை நம்முடைய திறன்பேசி வழியாக அணுகிப் பயன்படுத்திக்கொண்டும் வருகிறோம்.

பொதுவாகப் படித்து முடித்த பிறகே பலரும் இது போன்ற தொழில்களில் இறங்குவது வழக்கம். ஆனால், இளம் தலைமுறையைச் சேர்ந்த பலர் படிக்கும் காலத்திலேயே தொழில் தொடங்கு வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். தங்கள் படைப்பாற்றல், வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றலை இதற்கு மூலதனம் ஆக்குகின்றனர்.

<div class="paragraphs"><p>சஞ்சனா விஜய்</p></div>

சஞ்சனா விஜய்

இந்தியாவில் இன்றைக்கு மிக அதிக மாணவர்கள் சேர்வதற்குப் போட்டியிடும் படிப்பு மருத்துவம். அந்தப் படிப்பைப் படித்துக் கொண்டே ‘நாட்ஸ்வில்’ (knotsville) எனும் குரோஷே (பின்னல்) தொழிலைத் தொடங்கி நடத்திவருகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சஞ்சனா விஜய்.

குரோஷே என்னும் பின்னல் கலையைப் பொழுதுபோக்காக, மனதை இலகுவாக்கப் பலரும் பயன்படுத்தி வருகின் றனர். அதேநேரம், இதைத் தொழிலாகச் செய்து லாபம் ஈட்ட முடியுமா?

படிப்பும் வேலையும்

புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.நிறைவு செய்திருக்கிறார் சஞ்சனா. படிக்கும்போதே இன்ஸ்டகிராம் வழியாக குரோஷே தொழிலைத் தொடங்கிய அவர், வியாபாரத்தை விரிவுபடுத்தத் தற்போது இணையதளமும் தொடங்கிவிட்டார்.

“சிறு வயது முதலே என் பாட்டி எனக்கு ஏதாவது ஒரு புது விஷயத்தைக் கற்றுத் தருவார். எட்டாம் வகுப்புப் படித்த போது குரோஷே கலையை எனக்குக் கற்றுத் தந்தார். எனக்கும் இதில் ஆர்வம் இருந்ததால் நேரம் கிடைத்தபோது குரோஷே செய்துவந்தேன்.

அப்படியே பள்ளி, கல்லூரிப் படிப்பு என நாள்கள் நகர்ந்தன. எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருந்தபோது நான் கைப்பட உருவாக்கிய குரோஷே பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, படிப்புக்கு மத்தியில் நேரம் கிடைக்கும்போது குரோஷே தொழிலைச் செய்கிறேன். இத்தொழிலை முறையாகச் செய்ய வேண்டுமென்கிற யோசனை யுடன் இணையதளத்தைத் தொடங்கினேன்” என்றார் சஞ்சனா.

இதுதான் ‘குரோஷே’

அழகான பூக்கள், செடிகள், பொம்மைகள், உயிரினங்கள், ஜாக்கெட், ஹேண்ட் பேக், போர்வை எனப் பலவற்றைத் தனது கைவண்ணத்தில் உருவாக்குகிறார் சஞ்சனா. போட்டி நிறைந்த களத்தில் இணையதளத்தைத் தொடங்கிய பிறகு சஞ்சனாவால் படிப்பு, தொழில் என இரண்டு குதிரைகளில் எப்படி சவாரி செய்ய முடிகிறது? “படிப்பையும் தொழிலையும் சமாளிக்கச்சரியான திட்டமிடல் அவசியம்.

என்னைப் பொறுத்தவரை ‘குரோஷே’ வேலையை எப்படியாவது முடித்துவிடுவேன். ஆனால், படிப்பதற்கு ஒரு உந்துதல் தேவை. இதனால் தேர்வு இல்லாதபோது 60% குரோஷேவுக்காகவும் 40% படிப்புக் காகவும் நாள்தோறும் நேரம் ஒதுக்கிடு வேன். இதுவே தேர்வு நேரம் எனும்போது படிப்புக்காக அதிக நேரம் ஒதுக்குவேன். நேரக் கட்டுப்பாட்டைக் கண்டிப்பாகப் பின்பற்ற முயல்வேன். இது பலன் அளிக்கிறது.”

வியாபார உத்தி

ஒரு தொழிலைத் தொடங்கி நிர்வகிக் கும்போது சந்தை நிலவரத்தைப் புரிந்து கொள்வது அவசியம் என்கிறார் சஞ்சனா. “குரோஷேவைப் பொறுத்தவரை மூலப் பொருளுக்கான விலை, படைப்பை உருவாக்குவதற்காக எடுத்துக்கொள்ளப் படும் நேரம் ஆகிய வற்றைத் தவிர, லாபத்துக்கு என ஒரு பகுதியை ஒதுக்கிப் பொருளின் இறுதி விலையை நிர்ணயிக்க வேண்டும்.

எந்தவொரு தொழிலுக்கும் இதுவே அடிப்படை. ஒருவர் மிகக் குறைந்த விலை அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்யும்போது, அது அவரது தொழிலை மட்டுமில்லாமல் அதே பொருளை விற்பனை செய்யும் மற்றவர்களையும் பாதிக்கும். இதனால் ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்ப விலையை நிர்ணயிக்கிறோம்.

வியாபாரம் தொடர்பான விஷயங்களை, நிதி சார்ந்த முக்கிய விதிமுறைகளைத் துறைசார் நிபுணரின் உதவியோடு கையாள்கிறேன். ஏராளமானோர் யூடியூப் பார்த்து வியாபார நிதி சார்ந்த விஷயங்களைக் கையாளலாம் என்று நினைக்கின்றனர்.

ஒரு மருத்துவராகவும் தொழில்முனைவோராகவும் நான் அதை ஆதரிக்க மாட்டேன். சிறு தொழிலாகவே இருந்தாலும் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்டும்போது முறையான வழியில் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று வியாபாரம் செய்தால் மட்டுமே தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்க முடியும்” எனத் தன் வெற்றிக்கான ரகசியத்தை சொல்கிறார் சஞ்சனா.

ஒரு பக்கம் மருத்துவ மாணவியாகவும் இன்னொரு பக்கம் தொழில்முனை வோராகவும் வெற்றி பெற உழைக்கும் சஞ்சனா, எதிர்காலத்தில் இரண்டையும் திறம்பட நிர்வகிக்கத் திட்டமிட்டிருக்கிறார்!

சஞ்சனாவின் ‘நாட்ஸ்வில்’ இணையதளம்: https://www.knotsville.in

- karthiga.rajendran@hindutamil.co.in

‘யூடியூபை மட்டும் நம்பித் தொழில் செய்ய மாட்டேன்!’ - இளம் தொழில்முனைவோர்
உதவித்தொகையோடு முதுகலைப் படிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in