டிப்ளமோ படித்தவர்களுக்கு முப்படைகளில் வேலை | வெற்றி உங்கள் கையில்

டிப்ளமோ படித்தவர்களுக்கு முப்படைகளில் வேலை | வெற்றி உங்கள் கையில்
Updated on
2 min read

நான் இந்த ஆண்டு டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிக்கவுள்ளேன். நல்ல வேலை கிடைக்க வழி கூறுங்கள். - முத்தரசன், செங்கம்.

டிப்ளமோ படிப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. படிப்பு முடிந்த வுடன் தொழிற்பயிற்சியை மேற்கொள்ளலாம். அதை வைத்து வேலை தேடலாம் அல்லது ராணுவத்தின் அங்கங்களான கடற்படை, விமானப்படை, தரைப்படையில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதற்கு விண்ணப்பிக்கலாம். முப்படை களில் பணியாற்ற உடற்தகுதி அவசியம். அதனால் உரிய உடற்பயிற்சி தேவை. பின்பு தேர்வுகளுக்குத் தயாராகலாம். விமானப்படையில் குரூப் எக்ஸ் (Group X) தொழில்நுட்பப் பிரிவில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஐ.டி., கணினி படித்தவர்களுக்கு ஏர்மென் பிரிவில் ஆண்டுதோறும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பறப்பதற் கான விமானங்கள் பராமரிப்புப் பிரிவிலும் தரையில் மேற் கொள்ளப்படும் பரமரிப்புப் பிரிவிலும், இதர பொறியியல் கருவிகள் பராமரிப்புப் பணிகளுக்காகவும் இவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

கடற்படையில் ‘DEDH’ (Direct Entry Diploma Holders) பிரிவில் தொழில்நுட்பப் பணியாளர்களாக, போர்க் கருவிகள் பராமரிப்புப் பிரிவில் மாலுமிகளாகப் பணிபுரியலாம். சார்ஜ்மென் பணியிடங்களுக்கு வயது வரம்பு 18- 25 வரை.

இதற்கான போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும். தரைப்படையில் அக்னிவீர், ஜெ.சி.ஓ. (ஜூனியர் கமிஷண்டு ஆபிசர்ஸ்) ஆர்மி ஏர் டிபென்ஸ், ஆர்டிலரி, எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளில் பணியாற்றலாம்.

தொழில்நுட்பப் பிரிவில் பராமரிப்புப் பொறியியல் ஆதரவுப் பணிகளுக்கும் டிப்ளமோ படித்தவர்கள் தேவைப் படுவார்கள். இதற்கான உடற்தகுதியில் தேர்ச்சி பெற்று, போட்டித் தேர்வை எழுத வேண்டும்.

ரயில்வேயில் வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய ரயில்வே கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ரயில்வே பணிகளுக்கான ஆள்சேர்ப்புப் பணி களை நாடு முழுவதும் உள்ள 21 ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியங்கள் மேற்கொள்கின்றன.

இதில் ஜூனியர் இன்ஜினீயர், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்குத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டித் தேர்வுகளை எழுத மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் பிற அரசுத் துறைகளும் வழங்கும் பயிற்சித் திட்டங்களில் சேரலாம்.

ரயில்களை ஓட்டுவதற்கான அசிஸ்டென்ட் லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதைத் தவிர தொழில்நுட்பப் பணியாளர்களாக லோகோ செட் கராஜ் அண்டு வாகன், இருப்புப் பாதைப் பராமாரிப்புப் பணிகளுக்கும் தேவைப்படுவர். இதையடுத்து எஸ்.எஸ்.சி.சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர்கள் தனியே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ரயில்வேயின் மற்றோர் அங்கமான மெட்ரோ ரயில் பணியிடங்களுக்கும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவை தவிர தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள ‘Post Diploma in Mould Design with CAD/CAM’ (1.5 வருடம்) அல்லது ‘PG Diploma in Plastic Processing and Testing’ போன்ற படிப்புகள் அல்லது கூடுதல் திறன் கல்வித் தகுதியாக PLC, CNC பயிற்சிகளை அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்களில் பெற்றுத் தொழிற்சாலைகளில் பணிபுரியலாம்.

பத்தாம் வகுப்புத் தகுதியைக் கொண்டு குரூப் 4 தேர்வை எழுதலாம். இப்படி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கெனத் தகுதியைப் பெற முயற்சி, பயிற்சி, உழைப்பு ஆகியவை தேவை.

டிப்ளமோ படித்தவர்களுக்கு முப்படைகளில் வேலை | வெற்றி உங்கள் கையில்
கட்டணமில்லாமல் சந்தை முதலீட்டுப் படிப்பு | வெற்றி உங்கள் கையில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in