

எம்.ஏ. தமிழ் படித்திருக்கிறேன். தற்போது என்ன வேலைக்குச் செல்வதென்று யோசனையாக உள்ளது. - ராஜா, மின்னஞ்சல் வழி
தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு குறைவு எனப் பலர் நினைப்பது உண்டு. அதிகபட்சம் ஆசிரியர் பணிக்குச் செல்லலாம்; மற்றபடி வேறு வாய்ப்புகள் இல்லை என்கிற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். நாம் சரிவர அவற்றை அறிவதில்லை என்பதுதான் உண்மை.
இன்றைய அறிவியல் உலகில் மொழிபெயர்ப்பாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். எனவே, ஏதேனும் ஓர் அந்நிய மொழியைத் தெளிவாகக் கற்று அதனுடன் மொழிபெயர்ப்பு ஆய்வியலில் (Translational Studies) முதுகலை அல்லது முதுகலைப் பட்டயப் படிப்பு படியுங்கள். இது பன்னாட்டு வெளியீட்டு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளராகப் பணி வாய்ப்புப் பெற உதவும்.
யுபிஎஸ்சி முதல் தமிழ்நாடு தேர்வாணையம் வரையுள்ள அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ், விருப்பப் பாடமாகவோ அல்லது கட்டாயத் தேர்வாகவோ உள்ளது. தொடர்ந்து அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எழுதுங்கள். இதற்கு ஆயத்தப்படுகையில் தேர்வு அணுகுமுறை உங்களுக்குத் தெளிவுபடும்.
இந்த அனுபவத்தை வைத்து இத்தகைய தேர்வுகளை எழுதுபவர்களுக்குத் தொழில்முறை வழிகாட்டியாக மாறலாம். வகுப்பெடுக்கலாம், குறிப்புகள் தயாரிக்கலாம். நெட் அல்லது ஸ்லெட் எழுதி கல்லூரி விரிவுரையாளராகச் செல்லலாம்.
அது மட்டுமன்றிச் சமூக வலைத்தளங்களில் கன்டென்ட் ரைட்டர், கன்டென்ட் எடிட்டர் ஆகவும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு இணையவழித் தமிழ் வகுப்புகளை நடத்தலாம். உங்களுக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
நான் இப்போது பி.ஏ. எகனாமிக்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எம்.பி.ஏ. ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் படிக்க நினைக்கிறேன். இது நல்ல முடிவா என வழிகாட்டுங்கள். - மஞ்சு லோகநாதன், மின்னஞ்சல் வழி
எந்தவொரு தொழில் நிறுவனமும் பொதுவாக ‘Man, Material and Money’ என்கிற அடிப்படையில் இயங்குகிறது எனக் கூறுவர். அதன்படி தங்களின் முடிவு சரியானதே. கலை அறிவியல் கல்லூரி முதல் அதற்கென உள்ள சிறப்பு மேலாண்மைப் பயிற்சி நிறுவனங்கள்வரை எம்.பி.ஏ. படிப்புகளை வழங்குகின்றன.
இவற்றில் தங்களின் முதல் இலக்கு ஐ.ஐ.எம். ஆக இருக்க வேண்டும். இங்கு மேலாண்மை படித்தவர்கள் உலக அளவில் பிரபலமான தொழில் நிறுவனங்களின் சி.இ.ஓ. அல்லது அதற்கு இணையான பதவிகளில் இருந்தனர், இப்போதும் உள்ளனர்.
இதைத் தவிர புகழ்பெற்ற மற்ற மேலாண்மைக் கல்வி நிறுவனங் களிலும் சேரலாம். இதற்கென உள்ள CAT, XAT, SNAP, MAT போன்ற நுழைவுத் தேர்வுகளைத் தங்களின் விருப்பத்துக்கு ஏற்பத் தேர்ந்தெடுங்கள். இதற்கென உள்ள பயிற்சிகளை முறையாக எடுங்கள். வசதி இருப்பின் மேற்கத்திய நாடுகளிலும் எம்.பி.ஏ. பயிலலாம்.
அவ்வாறு வெளிநாடுகளில் பயிலும்பட்சத்தில், அக்கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தைச் சரிபாருங்கள். நம் நாட்டிலேயே தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் உள்ளதால், உங்களின் முதல் விருப்பம், CAT தேர்வில் நன்மதிப்பெண்கள் பெறக் கடினமாக உழைக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.
எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு முன் அக்கல்வி நிறுவனத்தின் வருடாந்திர பணிவாய்ப்புப் பட்டியலைப் பாருங்கள். மத்தியப் பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் என வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. எனவே, CAT தேர்வில் நீங்கள் நன்மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுவதைப் பொறுத்து உங்கள் பாதை வளமாகும்.