வெறும் மதிப்பெண்களுக்கானது அல்ல... | பொதுத் தேர்வு

வெறும் மதிப்பெண்களுக்கானது அல்ல... | பொதுத் தேர்வு
Updated on
1 min read

மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு முறையாவது ‘ஏன் தேர்வு எழுதுகிறோம்?’ என்கிற கேள்வி எழாமல் பள்ளி வாழ்க்கை முடிவதில்லை.

தேர்வு என்பது ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளவும், மதிப்பெண்கள் பெறவும், அடுத்த வகுப்புக்குச் செல்வதற்காகவும் மட்டு மல்ல; பள்ளியில் கிடைக்கும் தேர்வு எழுதும் அனுபவம், பின்னாளில் வாழ்க்கைப் பாடங்களாகவும் மாறலாம்.

தொடக்கம்: தேர்வு எழுத வேண்டும் என்றாலே ஒருவித அச்சம் ஏற்படுவது இயல்பு. ஆனால், அந்த அச்சத்தையும் பதற்றத்தையும் கடந்து தேர்வை எழுதி முடிப்பதும் ஒரு முக்கியமான அனுபவம்.

வாழ்க்கையில் அழுத்தத்தைக் கையாளக் கற்றுக்கொடுக்கும் முதல் படியாகத் தேர்வு அமைகிறது. படித்தது மறந்துபோன தருணங்களிலும் அவசரப்படாமல் சிந்தித்துச் செயல்படும் திறன், தேர்வு அறையில்தான் உருவாகிறது.

இந்தத் திறன், எதிர் காலத்தில் நேர்காணல், வேலை அழுத்தம், குடும்பச் சிக்கல்கள் போன்ற சூழ்நிலைகளையும் சமநிலையுடன் எதிர்கொள்ள உதவுகிறது.

பழக்கம்: தேர்வுக் காலத்தில் கடைசி நேரத்தில் செய்யும் அவசரப் படிப்பு முழுமையான பலனைத் தருவதில்லை. முறையாகத் திட்டமிட்டு நாள்தோறும் படிப்பதும், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதும்தான் பாடத்தைப் புரிந்துகொள்ளவும், மதிப்பெண்கள் பெறவும் வழி வகுக்கிறது.

தேர்வுகள் மாணவர்களிடம் பொறுப் புணர்வையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றன. இவை வாழ்க்கை முழுவதும் பயன்படும் முக்கியமான பழக்கங்கள்.

முயற்சி: ஒவ்வொரு தேர்வும் எதிர்பார்த்தபடி அமைவதில்லை. சில நேரம் தோல்வியையும் எதிர்கொள்ளலாம். ஆனால், அதுவே முடிவல்ல. திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து முயன்று உழைத்தால், அடுத்த முயற்சியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

பலர் அப்படி வெற்றி பெற்றிருக்கிறார்கள். விடாமுயற்சியும் மனவலிமையும் தேர்வு கற்றுத்தரும் முக்கியமான பாடங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

வெறும் மதிப்பெண்களுக்கானது அல்ல... | பொதுத் தேர்வு
பிறப்பிட அடையாள அட்டை! | சொல்... பொருள்... தெளிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in