

சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா வளாகத்தில் செயல்பட்டுவரும் ‘சோலினாஸ் இன்டகிரிட்டி’ ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனம், ‘சீரீஸ் ஏ1’ முதலீட்டு சுற்றில் ஏறக்குறைய ரூ.48 கோடி நிதியைத் திரட்டியுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு, வணிக விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ‘சீரீஸ் ஏ1’ சுற்றில் சோலினாஸ் நிதி திரட்டியிருப்பது, அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்.
சோலினாஸின் செயல்பாடு
‘சீரீஸ் ஏ1’ நிதிக்கான முதலீட்டை ‘ஹீரோ எண்டர்பிரைஸ் பார்ட்னர் வென்ச்சர்ஸ்’, ‘மெலா வென்ச்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து வழங்கியுள்ளன. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களான திவான்ஷு குமார், மொய்நாக் பானர்ஜி ஆகியோரால் நிறுவப்பட்ட சோலினாஸ் நிறுவனம், நிலத்தடி நீர், கழிவுநீர் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தல், சுத்தம் செய்தல், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பணிகளுக்கான ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவுத் (ஏ.ஐ.) தொழில்நுட்பங்களை உருவாக்கிவருகிறது.
இந்தத் தொழில்நுட்பங்கள் நீர் கசிவு, மாசுபாடு, மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் ஆபத்தான நடைமுறைகள் போன்ற பிரச்சினைகளுக்குப் பாதுகாப்பான, திறன் வாய்ந்த மாற்று முறைகளைத் தீர்வாக அளிக்கின்றன. மேலும், மனிதர்கள் நேரடியாக இறங்கவேண்டிய தொட்டிகள், கழிவுநீர்க் கால்வாய்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பான துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பங்களையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
சந்தை விரிவாக்கம்
சோலினாஸின் தொழில்நுட்பம் இந்தியாவின் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் 35க்கும் மேற்பட்ட நகரங்களிலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெற்காசிய நாடுகளிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, நகராட்சி பொதுச் சேவை நிறுவனங்களின் நிலத்தடி உள்கட்டமைப்பு மேலாண்மைக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்கிவருகிறது. இப்பணிகள் மட்டுமின்றி வாகன உற்பத்தி, மருந்துத் தயாரிப்பு, உற்பத்தித் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு ஆய்வு, பராமரிப்பு சேவைகளிலும் சோலினாஸ் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
எதிர்காலத் திட்டங்கள்
புதிய நிதியைப் பயன்படுத்தி இந்தியாவின் தற்போதைய சந்தைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதுடன், தங்களது பணியை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேற்காசிய, தெற்காசிய நாடுகளின் சந்தைகள் எனத் தனது சர்வதேச தடத்தை விரிவுபடுத்த உள்ளது.
அடுத்த தலைமுறை ரோபாட்டிக் ஆய்வு, துப்புரவு தொழில்நுட்பங்கள், ஏ.ஐ. அடிப்படையிலான மென்பொருள் உருவாக்கம், தொழில்துறை உள்கட்டமைப்பு வசதி சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றின் மேம்பாட்டிலும் சோலினாஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் ரூ.100 கோடி வருவாய் ஈட்டுவதே தங்களின் அடுத்த இலக்கு என நிறுவனத்தின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.