

நான் ஒரு குடும்பத் தலைவி. 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். பிள்ளைகள் பள்ளியில் படிக்கி றார்கள். எல்லாரும் ஏ.ஐ. பற்றிப் பேசுகி றார்கள். எனக்கும் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? - காந்திமதி, வள்ளியூர்.
இன்றைய காலக்கட்டத்தில் அடிப்படை கணினி அறிவு அனைவருக்கும் அவசியமாக இருப்பதைப் போலவே, மெல்ல மெல்ல ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மனித வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்று, அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் மாறிவருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘யுவா ஏ.ஐ. ஃபார் ஆல்' என்கிற கட்டணமில்லா ஏ.ஐ. பயிற்சியை வழங்குகிறது. அனைத்துத் தரப்பினரும் ஏ.ஐ. பற்றிய அடிப்படைத் திறன்களைப் பெற இந்தப் பயிற்சி உதவும்.
இது 4.5 மணி நேர இணையவழிப் பயிற்சி. தமிழ் உள்பட 11 மொழிகளில் வழங்கப்படுவதால், அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இதில் சேரலாம்.
இந்தப் பயிற்சியின் மூலம் ஏ.ஐ. செயல்பாடுகள், அதைப் பயன் படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இத் துறையில் உருவாகவுள்ள வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பயிற்சி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவல கங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும். பயிற்சியை நிறைவுசெய்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இதில் சேர ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம்' இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இதைத் தவிர, ‘கூகுள் ஏ.ஐ. எசென்ஷியல்ஸ்', ‘எலிமென்ட்ஸ் ஆஃப் ஏ.ஐ.', ‘ஜியோ ஏ.ஐ. கிளாஸ்ரூம்' போன்ற பயிற்சிகளையும் கற்றுக்கொள்ளலாம்.
மேலும், ‘ஏ.ஐ. / எம்.எல். யூசிங் பைத்தன்' என்கிற 36 மணி நேரப் பயிற்சியும் ‘ஸ்வயம்' இணையதளத்தில் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
இதில் சேர கணிதத்தில் அடிப்படை அறிவும், கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் ஓரளவு அறிவும் இருந்தால் போதுமானது. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
நான் கவரிங் நகைத் தொழில் செய்து வருகிறேன். என் மகன் 11ஆம் வகுப்பு படிக்கிறான். அவனை நகை வடிவமைப்பு, நகை தயாரிப்பு தொடர்பான படிப்பில் சேர்க்க ஆசைப்படுகிறேன். அப்படிப் படித்தால் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்? – ராஜராஜன், சிதம்பரம்.
மனிதர்கள் இருக்கும் வரை ஆடை, அணிகலன் ஆகியவற்றுக்கான தேவை தொடர்ந்து இருக்கும். அதனால் நகை வடிவமைப்புத் துறைக்கும் எப்போதும் வாய்ப்புகள் உள்ளன. நகை வடிவமைப்பைப் படிக்க B.Des. Accessory Design, B.Sc. Jewellery Design போன்ற பட்டப்படிப்புகளைத் தேர்வுசெய்யலாம்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் (NID), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வடிவமைப்புப் படிப்புகளை வழங்குகின்றன.
இவற்றில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல் பல தனியார் கல்வி நிறுவனங்களும் B.Des., B.Sc., ஓராண்டு டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளை வழங்குகின்றன.
மேலும், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெம்ஸ் அண்டு ஜூவல்லரியின் (IIGJ) மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி உள்ளிட்ட வளாகங்களில் நகை வடிவமைப்பு தொடர்பான படிப்புகள் வழங்கப் படுகின்றன.
நகை வடிவமைப்பாளர்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடு களிலும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. படைப்பாற்றல், தொழில் நுட்ப அறிவு, புதிய வடிவமைப்புத் திறன், அனுபவம் ஆகியவற்றைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டால் இந்தத் துறையில் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும்.