

நான் நான்காம் ஆண்டு பி.இ. சிவில் இன்ஜினீயரிங் படிக்கிறேன். எனது கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வு எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. எனக்கு ரியல் எஸ்டேட் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும். - முத்து இராமலிங்கம், சின்னமனூர்.
மனிதன் இப்பூவுலகில் வாழும் வரை அவனுடைய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று வீடு. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
எனவே, இத்துறையில் நீங்கள் நுழையும் முன், அதன் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்வதும், எதிர்காலத்தில் அது எந்தத் திசையில் பயணிக்கக்கூடும் என்பதைக் கணித்து அதற்கேற்பத் திட்டமிடுவதும் அவசியம்.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையின் தற்போதைய சந்தை மதிப்பு 2026ஆம் ஆண்டில் சுமார் 585 பில்லியன் டாலர்கள். இது 2031ஆம் ஆண்டில் 926 பில்லியன் டாலர்களாக உயரக்கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதன் முக்கியக் காரணிகளாக அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்கள், 'அனைவருக்கும் வீடு' திட்டம், முதல், இரண்டாம் நிலை நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் GCC (Global Capability Centers) நிறுவனங்கள் அதிக அளவில் பரவிவருவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இதை யடுத்து, மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம் - கிராமப்புறம்) திட்டம், மாநில அரசின் கனவு இல்லம் திட்டம், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புக்காக 2024-25ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.11.11 லட்சம் கோடி நிதி போன்றவை இத்துறை வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
மேலும், தற்போதைய கட்டுமானத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பி.இ. சிவில் மாணவரான நீங்கள் முக்கியத் தொழில் நுட்பமான ‘BIM’(Building Information Modelling) சார்ந்த பயிற்சியைப் பெற்றிருப்பீர்கள். அதுபோல, மிகத் துரிதமான கட்டுமான முறையான ‘Fabricated Building’ தொழில்நுட்பம், மேலும் தற்போது அதிகக் கவனம் பெற்றுள்ள ‘LEED’, ‘IGBC’ சான்றிதழ்களைப் பெறும் பசுமைக் கட்டுமானங் களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
இன்று இத்துறை உச்சம் பெறுவதற்கான காரணிகளில் ஒன்றாகப்புதிய கட்டுமானத் தொழில்நுட்பங் களும் உள்ளன. உலகிலேயே மிக விரைவாகக் கட்டி முடிக்கப்பட்ட வானுயர்ந்த கட்டிடம் சீனாவில் உள்ள 57 மாடிக் கட்டிடம். இது வெறும் 19 நாள்களில் கட்டி முடிக்கப்பட்டது.
அதேபோல், இந்தியாவில் மொகாலியில் உள்ள 10 மாடிக் கட்டிடம் வெறும் 50 மணி நேரத்தில் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், நம் நாட்டில் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் கட்டு மானத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.
மிகப்பெரிய சந்தையைக் கொண்ட இத்துறையில், நீங்கள் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. பட்டப்படிப்பை முடித்த பிறகு, NICMAR (National Institute of Construction Management and Research) கல்வி நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட், இன்ஃப்ராஸ்டிரக்சர் மேனேஜ் மென்ட், புராஜெக்ட் அண்டு கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜ்மென்ட், குவாண்டிட்டி சர்வேயிங், காஸ்ட் மேனேஜ்மென்ட், டிசைன் அண்டு பில்டிங் இன்ஃபர்மேஷன் மாடலிங் போன்ற முதுகலைப் படிப்புகளைப் படிக்கலாம். இந்நிறுவனத்தின் வளாகங்கள் ஹைதராபாத், டெல்லி, புணே, மும்பையில் உள்ளன.
ஆர்வம் இருந்தால், இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அல்லது, ஏதேனும் ஒரு முன்னணி நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்து உரிய அனுபவத்தைப் பெற்று, பின்னர் கட்டுமானம் தொடர்பான சிறிய பணிகளை மேற்கொண்டு, தொழிலின் நெளிவுசுளிவு களை அறிந்துகொண்டு மெல்ல முன்னேறலாம்.