

21ஆம் நூற்றாண்டில் உலகம் வேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் கணிதம், கணினி அறிவியல், நிதி ஆகிய மூன்று துறைகளின் சங்கமமாக உருவெடுத்திருப்பது 'கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ்' என்கிற புதிய கல்வித் துறை.
இன்று வங்கி, பங்குச் சந்தை, காப்பீடு, ஃபின்டெக் நிறுவனங்கள் போன்ற இடங்களில் கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வுசெய்து வேகமாக முடிவெடுக்க இந்தத் துறை முக்கியப் பங்காற்றுகிறது.
செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிட்டிக்ஸ், அல்காரிதம் அடிப்படையிலான வர்த்தகம் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களுடனும் இது நெருக்கமாக இணைந்துள்ளது.
உலகளாவிய வாய்ப்புகள்
‘கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ்' துறையில் பணிபுரிபவர்கள் ‘குவான்ட்ஸ்’ (Quants) என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கணித மாதிரிகள், கணினி நிரலாக்கம் மூலம் முதலீட்டு அபாயங்களைக் கணித்து, நிதிச் சந்தைகளில் துல்லியமான முடிவு களை எடுக்க உதவுகின்றனர்.
உலகள வில் ஃபின் டெக் துறை 2032ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய ரூ.120 லட்சம் கோடி மதிப்பை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால் கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு வங்கி, முதலீட்டு நிறுவனங்கள், தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
கார்னெகி மெலன் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கொலம்பியா பல்கலைக் கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், இ.டி.எச். சூரிக் போன்ற உலகின் முன்னணிக் கல்வி நிறுவனங்கள் கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் துறையில் சிறப்பு படிப்புகளை வழங்கு கின்றன.
இந்தியாவில் முதல் முறையாக கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி எம்.எஸ்சி. கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத் தேவைகளையும் உலகளாவிய வேலைவாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, முனைவர் ஆர். நடராஜன் தலைமையிலான குழு இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.
ஏற்கெனவே சாப்ட்வேர் இன்ஜி னீயரிங், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற முன்னோடிப் படிப்பு களை அறிமுகப்படுத்திய இக்கல்லூரி, தற்போதைய டிஜிட்டல் பொருளாதாரப் புரட்சிக்கு ஏற்ப இப்புதிய படிப்பைத் தொடங்கியுள்ளது.
என்ன படிக்கலாம்?
கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் படிப்பில் பங்குச் சந்தை, முதலீட்டு வங்கிகள், இடர் மேலாண்மை போன்ற ‘நிதி அறிவியல்' சார்ந்த கோட்பாடுகளை முதன்மையாக மாணவர்கள் கற்கிறார்கள்.
இதனுடன், நிதிச் சந்தையின் கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க உதவும் புள்ளியியல், நிகழ்தகவுக் கோட்பாடுகள் அடங்கிய 'கணித மாதிரிகள்' இணைகின்றன.
இவை அனைத்தையும் திறம்படச் செயல்படுத்த அல்காரிதம், பைதன் போன்ற நவீன நிரலாக்க மொழிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் கோடிக்கணக்கான தரவுகளை நொடிப் பொழுதில் பகுப்பாய்வு செய்யும் ‘கணினி நிரலாக்க' அறிவும் இப்பாடத்திட்டத்தில் ஆழமாகக் கற்பிக்கப்படுகிறது.
இத்துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்களின் கல்விப் பயணத்தில், உலகளாவிய நிதிச் சந்தையை ஆளுகை செய்யும் பல்வேறு அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.
குறிப்பாக, மனிதத் தலையீடு இன்றி கணினி நிரல்களே தானாகப் பங்கு வர்த்த கத்தில் ஈடுபடும் ‘அல்காரிதமிக் டிரேடிங்', புதிய நிதித் தயாரிப்புகள், முதலீட்டு உத்திகளை உருவாக்கும் ‘ஃபைனான்சியல் இன்ஜினீயரிங்' ஆகிய திறன்களைப் பெறுகிறார்கள்.
மேலும், நிதிச் சந்தையின் எதிர்காலப் போக்கைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத் தையும், உலகளாவிய பிரம்மாண்ட நிதித் தரவுகளை ஆராய்ந்து மிக விரைவாக முடிவெடுக்க உதவும் ‘பிக் டேட்டா அனலிட்டிக்ஸ்' உத்திகளையும் மாணவர்கள் இதில் கற்கலாம்.
மிகக் குறுகிய காலத்தில் உலக ளாவிய கவனத்தைப் பெற்றுள்ள ‘கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ்' துறை பாரம்பரிய நிதித் துறையைத் தொழில்நுட்பத்தோடு பிணைக்கும் ஆற்றல் கொண்டது.
சவாலான நிதிச் சந்தைகளை எதிர்கொள்ளும் தகுதியை வளர்க்கும் இப்படிப்பு, புதிய தலைமுறை நிதி நிபுணர்களை உருவாக்கி உலக அரங்கில் அவர்களை மிகச்சிறந்த உயரத்தில் அமர்த்துவதற்கான முதன்மை நுழைவாயிலாகப் கருதப்படு கிறது.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org