ஏரோநாட்டிக்கல் படித்தால் ‘பைலட்’ ஆக முடியுமா? | வெற்றி உங்கள் கையில்

ஏரோநாட்டிக்கல் படித்தால் ‘பைலட்’ ஆக முடியுமா? | வெற்றி உங்கள் கையில்
Updated on
2 min read

என் மகன் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்கு ஏரோபிளேன் என்றால் ஆசை அதிகம். அதனால், ஏரோநாட்டிக்கல் படிக்க விரும்புகிறான். அதன் பிறகு பைலட் ஆக வேண்டுமென்று முடிவுசெய்துள்ளான். இதற்கு எவ்வளவு செலவாகும்? விவரங்களைக் கூறுங்கள். - மாதேசுவரன், கோத்தகிரி.

ஏரோநாட்டிக்கல் படிப்பு குறித்துத் தெளிவான புரிதல் இல்லாததால், இப்படிப்பையும் பைலட் ஆவதையும் இணைத்தே பெற்றோரும் மாணவர்களும் குழப்பிவிடுகின்றனர். இரண்டும் வேறு வேறு பிரிவுகள். ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவு விமானங்களை வடிவமைப்பது, அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பானது.

இதைப் படிப்பவர்கள் பைலட் ஆவது சாத்தியமல்ல. அதற்குத் தனியே படிக்க வேண்டும். உங்கள் மகன் பைலட் ஆக வேண்டுமெனில் அதற்குப் பல வழிகள் உள்ளன. இப்பயிற்சிக்குப் பல லட்சம் செலவாகும். உங்களின் பொருளாதார நிலை இதற்கு இடமளிக்குமா என்பதைப் பொறுத்து முடிவுசெய்யலாம்.

மத்திய அரசுக் கல்வி நிறுவனத்தில் படிக்க நீங்கள் உத்தரப்பிரதேசம் அமேதியில் உள்ள ‘IGRUA’ எனப்படும் இந்திராகாந்தி ராஷ்ட்ரிய யுரன் அகாடமியில் விண்ணப்பிக்கலாம். இதற்குக் குறைந்தபட்சம் 17 வயது நிறை வடைந்திருக்க வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதி யியல் படித்திருக்க வேண்டும். இதற்கு எனத் தனியே நீங்கள் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். தேர்வான பிறகு முதலில் ஃபிரீ ஃபிளைட் கிரவுண்ட் டிரெயினிங் இன் ஏவியேஷன் வழங்கப்படும். இதையடுத்து ‘SPL’ எனப்படும் ஸ்டூடண்ட் பைலட் பயிற்சி வழங்கப்படும்.

இதைத் தொடர்ந்து ‘FRTOL’ எனப்படும் ஃபிளைட் ரேடியோ டெலிபோனி ஆபரேட்டர்ஸ் லைசன்ஸ் பயிற்சி வழங்கப்படும். அடுத்ததாக ‘CPL’ எனப்படும் கமர்சியல் பைலட் லைசன்ஸ் பெறுவதற்கான பயிற்சி வழங்கப்படும். இறுதியாக பி.எஸ்சி. ஏவியேஷன் பட்டம் வழங்கப்படும்.

இதற்கான செலவு, பயிற்சிக் கட்டணம் மட்டும் ஏறக்குறைய ரூ.55 லட்சம் ஆகலாம். இதர செலவினங்கள் தனி. இப்பயிற்சிக்கு வங்கிக் கடன் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இது இல்லையென்றால் மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் வழங்கும் ‘CPL’ பள்ளியில் சேரலாம். இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏறக்குறைய ரூ.17 லட்சம்வரை செலவாகலாம். பைலட்டுக்கான பயிற்சி வேலூரில் உள்ள விமானத்தளத்தில் வழங்கப் படுகிறது.

மத்திய அரசின் DGCA (Director General of Civil Aviation) துறையால் அங்கீகரிக்கப்பட்ட 35 ‘FTO’ (Flying Training Organisation) நிறுவனங்கள் தரவரிசை முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பைலட் ஆக வேண்டுமெனில் இந்திய விமானப் படையில் பைலட்டாகச் சேரலாம்.

இதற்காக உள்ள பிரத்யேகமான தேர்வு ‘PABT’ (Pilot Aptitude Battery Test) என்று முன்னர் அழைக்கப் பட்டது. தற்போது அது ‘CPSS’ (Computerised Pilot Selection System) என்றழைக்கப்படுகிறது. இத்தேர்வை எழுத வேண்டும். முதலில் ‘INSB’ (Instrument Battery Test) எனப்படும் எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

இத்தேர்வில் விமானத்தின் பாகங்களைப் படிக்கவும் அடையாளப் படுத்தவும் வேண்டும். பின்னர் ‘SSA’ (Sensory Motor Apparatus Test) தேர்வு எழுத வேண்டும். இதில் திரையில் உள்ளவற்றை ஜாய்ஸ்டிக், பெடல்களைக் கொண்டு இயக்குவதில் உள்ள திறன் பரிசோதனை செய்யப் படும்.

இறுதியாக ‘CVT’ (Control Velocity Test). இது இயந்திரங்களின் வழி ஒரு பொருளின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிகரிக்க உதவிடும் அளவீடு. இப்படி இத்தேர்வை மூன்று பகுதிகளாக எதிர்கொள்ள வேண்டும். அதற்கு மூன்று வழிகள் உள்ளன.

NDA (National Defence Academy) தேர்வு. இத்தேர்வை எழுத 16.5 முதல் 19.5 வயதுக்குள் இருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களைக் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும்.

CDS (Combined Defence Services) இத்தேர்வைப் பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு 20 முதல் 24க்குள் இருக்க வேண்டும், AFCAT (Air Force Common Admission Test) இத்தேர்வை இருபாலரும் எழுதலாம்.

இந்த மூன்று தேர்வுகளும் உடல்தகுதிக்கு உட்பட்டவை. இத்தேர்வு களுக்கு முறையாகத் தயாரான பின்னர் எழுதுவது உசிதம். ஏரோநாட்டிக்கல் படிப்பைப் பொறுத்தவரை, நீங்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று உங்களுக்கு உரிய கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

ஏரோநாட்டிக்கல் படித்தால் ‘பைலட்’ ஆக முடியுமா? | வெற்றி உங்கள் கையில்
‘ஸ்மார்ட்’ உணவு: இந்தியாவின் நிலை என்ன? | சொல்... பொருள்... தெளிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in