

சென்னையின் பரபரப்பான தெருக்களில் நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவின் விலை 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். ஆனால், உலகப்புகழ் பெற்ற ‘Louis Vuitton’ (LV) நிறுவனம் அதே ஆட்டோவின் வடிவில் ஒரு கைப்பையைத் தயாரித்துள்ளது.
அதன் விலை சுமார் ரூ.35 லட்சம்! வேடிக்கை என்னவென்றால், ஆட்டோ வடிவில் ஒரு கைப்பை வாங்கும் விலையில் நீங்கள் நிஜமாகவே 15 புதிய ஆட்டோக்களை வாங்கி ஒரு ஆட்டோ ஸ்டாண்டே நடத்தலாம்.
இது ஏதோ சமூக வலைத்தள நகைச்சுவை அல்ல; ‘லக்சரி பிராண்ட் மேனேஜ்மென்ட்' (Luxury Brand Management - LBM) எனப்படும் ஒரு பிரம்மாண்டமான வணிக உலகின் நிதர்சனம்.
அந்தஸ்தும் பணக்காரர்களின் ரசனையும்: பெரும் பணக்காரர்களின் உலகம் என்பது சாமானியர் களின் கற்பனைக்கு எட்டாதது. அவர்கள் வாங்கும் பொருள்கள் வெறும் பயன்பாட்டுக்கானவை அல்ல. அவை அவர்களின் தனித்துவமான அடையாளங்கள்.