நடக்க நடக்க தூரம் குறையல…

நடக்க நடக்க தூரம் குறையல…
Updated on: 
1 min read

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கணினித் திரையையே பல மணி நேரம் பார்த்துக்கொண்டிருப்பது என நவீன வேலைச்சூழல் பலரையும் போதுமான உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கைமுறைக்குள் கட்டிப்போட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது ‘வாக்மேக்ஸிங்’ (Walkmaxxing) எனும் முறை.

‘வாக்மேக்ஸிங்’ என்றால்? ‘மேக்ஸிங்’ (Maxxing) என்றால் எந்தவொரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டோடு முழுமை அடையும்வரை செய்வது அல்லது பின்பற்றுவது.

இளம் தலைமுறையினர், குறிப்பாக ஜென் ஸீ தலைமுறையினர் இந்தச் சொல்லை சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எடுத்துக்காட்டாக, கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற ஜிம் வொர்க்-அவுட்டில் ஈடுபடுவது ‘Gymmaxxing’, இடையூறு இல்லாமல் சரியான நேரத்தில் தூங்கி எழும் நடைமுறையைத் தவறாமல் பின்பற்றுவது ‘Sleepmaxxing’ எனப்படுகிறது.

இந்த வரிசையில் வந்த ‘வாக்மேக்ஸிங்’ முறைதான் தற்போது உலக அளவில் வைரலாகியுள்ளது.

நாள்தோறும் வேலைக்குச் செல்வது, கல்லூரிக்குச் சென்று வருவது போன்ற வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையே நடைபயில்வதை ஊக்குவிக்கும் ஒரு முயற்சிதான் ‘வாக்மேக்ஸிங்’.

வேலைக்கு நடுவே இடைவேளை எடுத்து நடப்பது, அலுவலக வளாகத்துக்குள் திறன்பேசியில் பேசும்போது நடந்துகொண்டே பேசுவது, மதிய உணவு இடைவேளையில் சிறிது தூரம் நடப்பது, அலுவலகத்துக்குச் செல்லும்போது முடிந்தவரை நடப்பது என இளம் தலைமுறையினர் நடைப்பயிற்சியை உறுதியோடு பின்பற்ற முயன்றுவருகிறார்கள்.

நடக்கும் தூரத்தை ஸ்மார்ட்வாட்ச் அல்லது திறன்பேசி செயலிகள் வழியே கண்காணித்து, அதற்கான இலக்குகளையும் நிர்ணயிக்கின்றனர். நடைப்பயிற்சி என்பது புதிதல்ல.

ஆனால், ஏற்கெனவே பழக்கத்தில் உள்ள ஒரு விஷயத்துக்குப் புதுப் பெயர் சூட்டி, அதைச் சமூக வலைத்தளப் போக்காக மாற்றுவதில் ஜென் ஸீ தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். என்றாலும், உடற்பயிற்சிக்கு எனத் தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்களும் அன்றாட வாழ்க்கையில் உடல் இயக்கத்தை அதிகரிப்பதற்கான வழியாக இதைப் பார்க்கிறார்களாம்!

நடக்க நடக்க தூரம் குறையல…
இந்தியர்கள் எப்படிப் பயணிக்கிறார்கள்? | சொல்... பொருள்... தெளிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in