

அண்மையில் ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்திருந்த நண்பர் ஒருவர்,
“It is a very good film; I liked it on the whole” என்றார். இது தவறு. அவர் கூற நினைப்பதும் கூறியதும் வேறாக இருக்கின்றன.
ஒன்றில் ஒரு பகுதி நல்லதாக இருந்து மறுபகுதி அப்படி இல்லை என்றால்தான் ‘on the whole’ என்பதற்கு அர்த்தம் உண்டு. ஒரு திரைப்படம் மிக நன்றாக இருக்கிறது என்றால் ‘It is a very good film; I liked the whole of it’ என்று கூறிவிடலாம்.
மாறாக ‘கதை நன்றாக இருக்கிறது. திரைக்கதை சுமார்தான். ஒளிப்பதிவு பிரமாதம். இசை ஏற்புடையதாக இல்லை’. இப்படிக் கலவையாக உங்களுக்குத் தோன்றும்போதுதான் ‘இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது (on the whole) திரைப்படம் நன்றாகத்தான் இருக்கிறது’ என்று கூறுவது சரியாக இருக்கும்.
திரைப்படத்துக்கு மட்டும்தான் என்றில்லை, ஒருவரை எடை போடும்போதும் ‘on the whole’ என்று அவரைப் பற்றிய உங்கள் கருத்தை வெளியிடுகிறீர்கள் என்றால் அதற்கு முன் அவரது நேர்மறையான, எதிர்மறையான தன்மைகளை நீங்கள் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.
***
‘Troll என்ற வார்த்தை சமூக ஊடகங்கள் தொடர்பாக அதிகம் அடிபடுகிறது. அதன் சரியான விளக்கம் என்ன?’ எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.
இந்த வார்த்தையை ட்ரோல் (trole) என்பதுபோல் உச்சரிக்க வேண்டும். ஒருவரைக் காயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை இடுவது, ட்ரோல் செய்வதாகும். பதிலுக்கு எதிர்த்தரப்பு எதிர்வினை ஆற்றுவதையும் ட்ரோல் செய்பவர்கள் சந்தோஷத்துடன் எதிர்பார்த்து அடுத்த சுற்றுக்குத் தயாராவார்கள்.
ஆனால், இந்தச் சொல்லுக்கு வேறொரு ‘நல்ல’ அர்த்தமும் உண்டு. ஒரு பிரிவைச் சீராகவும் உன்னிப்பாகவும் தொடர்ந்து தேடுவதையும் ட்ரோல் செய்வது என்பார்கள். ‘The company trolls for partnership opportunities.’
என்றாலும் பெரிதும் புழங்கும் பொருளின்படி ட்ரோல் செய்யும் பழக்கம் (சாட்டிங் செய்வதுபோல அல்லாமல்) ஒருவித வக்கிர மனம் கொண்டவர்களின் வெளிப்பாடு என்கின்றன பல உளவியல் ஆராய்ச்சிகள்.
***
அண்மையில் பிரபல பெண்ணைக் குறித்து ‘She has faced a lot of abuse for standing up against misogyny and harassment’ என்று ஒரு நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. ‘Misogyny’ என்றால் என்ன? தெளிவு பெறுவோம்.
இந்தச் சொல்லை ‘மிஸோஜெனி’ என்று உச்சரிக்க வேண்டும். இது பெண்கள் குறித்த வெறுப்பை உணர்த்தும் சொல். கிரேக்க மொழியிலிருந்து பிறந்தது. அந்த மொழியில் ‘miso’ என்பது வெறுப்பைக் குறிக்கிறது.
‘Gyny’ என்பது பெண்களைக் குறிக்கும் சொல் (அதனால்தான் மகளிர் நல மருத்துவரை ‘கைனகாலஜிஸ்ட்’ என்கிறோம்).
ஆண்களின் மீது கொண்ட வெறுப்பை ‘misandry’ என்பார்கள்.
‘பாழாய்ப் போன சமூகம், இங்க எவனும் உருப்படி கிடையாது’ என்பதுபோல் கூறித் திரியும் நபர்களிடம் காணப்படும் தன்மை ‘misanthropy’, அதாவது மனித குலத்தையே வெறுப்பவர்கள்.
ஒரே தொடக்கம்தான். வெறுப்பு என்கிற ஒரே பொருள்தான். என்றாலும் ‘misogyny’ என்கிற சொல்லோடு சிலர் ‘misogamy’ என்ற சொல்லை குழப்பிக் கொள்வதுண்டு. இரண்டாவது சொல்லுக்குத் திருமணத்தை வெறுப்பது என்று பொருள். ‘Gamy’ என்பது திருமணத்தைக் குறிக்கிறது. ‘Monogamy’ என்றால் ஒருவரை மட்டும் மணப்பது. ‘Polygamy’ என்றால் பலரை மணப்பது. ‘Misogynist’ (பெண்களை வெறுப்பவர்) என்கிற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு அதன் மறு துருவமான ‘Misandrist’ (ஆண்களை வெறுப்பவர்) என்கிற சொல் பயன்படுத்தப்படுவதில்லை.
வெறுப்பு என்பதை உணர்த்தும் முன்னொட்டோடு அமைந்த வேறு சில வார்த்தைகள். ‘Misarchist’ (அரசை வெறுப்பவர்), ‘Misologist’ (விவாதங்களை வெறுப்பவர்).
(தொடரும்)
- aruncharanya@gmail.com