Published : 10 Oct 2022 05:20 PM
Last Updated : 10 Oct 2022 05:20 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 9

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 19 அன்று நடத்தப்பட இருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு தயார்செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குமான எளிய முறை குறிப்புகளை போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளிக்கிறார். இன்றைய ஒன்பதாம் பகுதியில் ‘அறிவியல்’ பாடத்துக்கான எளிய முறைக் குறிப்புகள் தொடர்கின்றன.

அறிவியல் - 1
உயிர்ச் சத்துக்கள், ரத்தம் ரத்த சுற்றோட்ட மண்டலம்
எளிய குறிப்புகள்

உயிர்ச் சத்துக்கள் (வைட்டமின்கள்) பொதுவாக இரு வகையாக பிரிக்கப்படுகின்றன. நீரில் கரைபவை -
B1, B6, B7,B12, C.
கொழுப்பில் கரைபவை -உயிர்ச் சத்து
A, D, E K.
ரெட்டினால் என வேதிப்பெயர் கொண்ட உயிர்ச் சத்து A , கண் தன் பார்வையைத் தானே சரி செய்து கொள்ளல்,எலும்பு,பல், திசுக்கள் வளர்ச்சி நோய் எதிர்ப்பு
சக்தி போன்றவற்றிற்கு தேவை.

தோல், கண், வாய் உள்தசை, மூக்கு, நுரையீரல், தொண்டை ஆகியவை ஈரப்பதத்துடன் இருப்பதற்கு இந்த உயிர்ச் சத்து பயன்படுகிறது. பால், பச்சைக்கீரை வகைகள், கேரட், மீன் ஆகியவற்றில் உயிர்ச் சத்து A உள்ளது. கல்லீரல் மூலமும் இச்சத்து கிடைக்கிறது. நமது உடல் காய்கறி பழங்களில் உள்ள லீட்டா கரோட்டினை உயிர்ச் சத்து A வாக மாற்றிக்கொள்ளும்.

தயாமின் எனும் வேதிப்பெயர் கொண்ட உயிர்ச் சத்து B1 ஓட்ஸ், முட்டை, உருளைக்கிழங்கு, கைகுத்தல் அரிசி ஆகியவற்றில் உள்ளது. ரிபோப்ளேவின் எனப்படும் உயிர்ச் சத்து B2 பால்பொருட்கள், வாழைப்பழம் ஆகியவற்றில் உள்ளது. குறிப்பாக தயிரில் மிகுதியாக இச்சத்து உள்ளது. நியாசின் எனும் உயிர்ச் சத்து B3 செரிமாதலுக்கு தேவைப்படும். முட்டை, மீன், இறைச்சி உணவுகளில் இது உள்ளது.

பன்டோதினிக் ஆசிட் எனப்படும் உயிர்ச் சத்து B5 உணவிலிருந்து சத்தை எடுத்துக்கொள்ள உதவுகிறது. மீன், முடடை, காய்கறிகளில் இது உள்ளது.
பைரிடாக்ஸின் எனும் உயிர்ச் சத்து B6 உடலின் வேதி மாற்றங்களுக்கு பயன்படுகிறது. இறைச்சி, காய்கறி வாழைப்பழம் ஆகியவற்றில் உள்ளது.
பயோடின் எனப்படும் உயிர்ச் சத்து B7 குடலுக்கும் சருமத்திற்கும் நல்லது. கடலை, கீரை, முட்டை ஆகியவற்றில் இச்சத்து உள்ளது. சயன கோபாலமின் எனும் B12 ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு முக்கியமானது. இந்த உயிர்ச்சத்தில் கோபால்ட் உள்ளது. பெரும்பாலும் அசைவ உணவில் அதிகம் உள்ளது. பொதுவாக தாவரங்கள், பழங்களில் இந்த உயிர்ச் சத்து இல்லை. வெங்காயத்தில் உயிர்ச் சத்து B அதிகம் உள்ளது.

உயிர்ச் சத்து C தான் உடலில் மிகுதியாக காணப்படும் கொலோஜன் எனும் புரதம் உருவாக முக்கியமாகிறது. அஸ்கார்பிக் அமிலம் இச்சத்தில் உள்ளது. காய்கறி, பழங்கள் ஆரஞ்சு,எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றில் இச்சத்து உள்ளது. மேலும் கல்லீரல் மூலமும் கிடைக்கிறது. சிட்ரஸ் பழங்கள் மூலம் ஸ்கர்வி நோயை குணப்படுத்தமுடியும் என கூறிய அறிவியலார் ஜேம்ஸ் லிண்ட் ஆவார்.

உயிர்ச் சத்து D சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது. இதன் வேதிப்பெயர் கால்சிபெரால்.

உயிர்ச் சத்து E இன் வேதிப்பெயர் டோக்கோபொரால். இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் செயல்களை கட்டுப்படுத்துகிறது. கீரை பால் பொருட்களில் இச்சத்து உள்ளது.

உயிர்ச் சத்து K யின் வேதிப்பெயர் பிலோ குயினோன் என்பதாகும். பாக்டீரியாவை பயன்படுத்தி குடல் இயற்கையாகவே இந்த உயிர்ச்சத்தை உற்பத்தி செய்துகொள்கிறது. இது ரத்தம் உறைதலில் முக்கியப் பங்காற்றுகிறது.

எந்தெந்த உயிர்ச்சத்து குறைபாடுகளால் என்னென்ன இழப்பு/நோய்கள் ஏற்படும் என்பதன் பட்டியல்:


A - மாலைக்கண்
(நிக்டலோபியா)நிறக்குருடு, சீரோப்தால்மியா
B - பெரி-பெரி
C - ஸ்கர்வி
D - ரிக்கட்ஸ்
E - மலட்டுத்தன்மை
K - ரத்தம் உறையாமை

B1, B2, B3, B5, B6, B7 B12 முதலிய உயிர்ச் சத்துக்கள் குறைவு அல்லது அதிகரிப்பினால் வரும் நோய்களின் பட்டியல்:
தயாமின் B1- நரம்பு, மூளை
பாதிப்பு
ரிபோப்ளேவின் B2- நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண்
நியாசின் B3 (நிக்கோடினிக் அமிலம்) - பெல்லக்கரா, செரிமான கோளாறு, தோல் வியாதிகள்.
பன்டோதினிக் ஆசிட் B5 - குறையானால் பராஸ்திஷியா, அதிகமானால், பிரட்டல்,நெஞ்சு எரிச்சல்.
பைரிடாக்ஸின் B6 - குறையானால் ரத்தசோகை, அதிகமானால் நரம்பு தளர்ச்சி
பயோடின் B7 -குறைந்தால் குடல் சரும பாதிப்பு
சயன கோபாலமின் B12 - குறையானால் ரத்த சோகை

ரத்தம், ரத்தக் சுற்றோட்ட மண்டலம்

ரத்தத்தை A, B, AB, O என நான்கு வகைகளாக வகைப்படுத்தியவர்
கார்ல் லேண்ட் ஸ்டைனர்.
அனைவருக்கும் தானம் கொடுக்கும் ரத்தவகை O அனைத்துவகை ரத்தத்தை ஏற்றுக்கொள்ளும் வகை AB.
ரத்த வகை ஏற்றுக்கொள்ளும் ரத்தவகை
A A, O
B B, O
AB A, B, AB, O
O O

ரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணமான ஹீமோகுளோபின் (சுவாச நிறமி) ஆக்சிஜன் படகு என அழைக்கப்படுகிறது. மனித உடலில் ரத்தத்தின் அளவு 5 முதல் 6 லிட்டர் வரை இருக்கும். நம் உடல் முழுவதும் ஒரு முறை ரத்தம் சுற்றி வர 64 வினாடிகள் ஆகும். ஒரு லிட்டர் ரத்தத்தில் 150 கிராம் ஹீமோகுளோபின் உள்ளது.
ரத்த வேகம் அதிகம் இருக்கும் இடம் தமனிகளும் குறைவாக உள்ள இடம் சிரைகளும் ஆகும். திட நலத்துடன் இருக்கும் ஒரு நபர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் கொடுக்கலாம்.

சிவப்பணுக்கள் இருபுறமும் உட்குழிந்த உட்கருவற்ற செல்லாகும். எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் 120 வாழ்நாட்கள் கொண்ட சிவப்பணுக்கள் (எரித்ரோசைட்டுகள்) ஆக்சிஜனை நுரையீரலில் இருந்து மனித உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சிவப்பணுக்கள் குறைவால் ஏற்படும் நோய் அனிமியா எனும் ரத்தசோகை அதிகமானால் ஏற்படுவது லூக்கிமியா. 90 வாழ்நாட்கள் கொண்ட ஒழுங்கற்ற வடிவமுடைய உட்கருவைக் கொண்ட ரத்த வெள்ளையணுக்கள் (லுயுக்கோசைடுகள்) எலும்பு மஜ்ஜை கல்லீரலில் உற்பத்தியாகிறது. வெள்ளையணுக்கள் குறைவால் ஏற்படும் நோய் லூயூக்கோபீனியா. அதிகமானால் ஏற்படுவது லூயூக்கேமியா.

மனித உடலின் எடையில் ரத்தத்தின் அளவு 6% முதல் 8% வரை இருக்கும். அதில் பிளாஸ்மா (90% நீரினைக்கொண்டது) 55% ரத்த செல்கள் 45% உள்ளது.
நுரையீரல் தமனி அசுத்த ரத்தத்தைப் பெற்றது. நுரையீரல் சிரை சுத்த ரத்தத்தைப் பெற்றது. இச்சிரையைத் தவிர அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும். சுத்த ரத்தத்தில் காணப்படுபவை ஆக்சிஜன், உணவுச்சத்து, ஹார்மோன்கள் நொதிகள் ஆகியவை.

ரத்தத்தை மனித உடலின் பல்வேறு பாகங்களுக்கும் அனுப்பும் உறுப்பான இதயம், பெரிகார்டியம் (எண்டோகார்டியம், எபிகார்டியம் மையோகார்டியம் கொண்டது) என்ற உறை மூலம் மூடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் இதயத்துள் சென்றுவரும் ரத்தத்தின் அளவு சுமார் 5லிட்டர். ஒரு கனமில்லி லிட்டர் ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகள் எண்ணிக்கை 2,50,000.
ரத்த ஓட்டத்தையும் இதயச் செயல்பாட்டையும் கண்டறிந்த அறிவியல் அறிஞர் வில்லியம் ஹார்வி. ரத்தம் உறைதலுக்கு பயன்படும் தனிமம் கால்சியம் உயிர்ச் சத்து(வைட்டமின்) K
ஆகும். உடலில் ரத்தம் பாயாத உறுப்பு கருவிழி.

ரத்த ஓட்டத்தின் சரியான வரிசை ஏட்ரியம் -> வெண்டிரிக்கள் -> தமனி -> சிரை.

SA கணு இதயத்தின் இதயம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் தான் இதயத்துடிப்பின் தொடக்கம் தூண்டல் நடைபெறுகிறது.
வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் ‘லப்’ எனும் ஒலி தோன்றுகிறது. விரியும்போது ‘டப்’ என்ற ஒலி கேட்கிறது. இதயத் தசைகளுக்கு ரத்தத்தை அளிக்கும் ரத்தக்குழாய் கரோனரி தமனியாகும். செமிலூனார் வால்வு வெண்டிரிக்கிளிலிருந்து வெளிச்செல்லும் முக்கிய தமனிகளில் உள்ள வால்வு ஆகும்.
கருவில் முதலில் உருவாகும் உறுப்பான இதயம், குறிப்பிட்ட நபருக்கு அவரது கைப்பிடி அளவு இருக்குமாம். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் முறை இதயத்துடிப்பு நடைபெறுகிறது. இதயம் துடிக்கும்போது ஏற்படும் அழுத்தம் சிஸ்டாலிக் என்றும் இதயத்துடிப்புகளுக்கிடையே ஏற்படும் அழுத்தம் இதயவிரிவமுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. முறையான ரத்த அழுத்தம் காண இவ்விரண்டு அழுத்தங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
மனித உடலின் சராசரி ரத்த அழுத்தம் 120/80 mmHg.

உடலுக்கு உகந்த ரத்தத்தில் சர்க்கரையின் அளவு
80 முதல் 110 mg/d.l வரை.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் இன்சுலின்.
ரத்தத்தில் பிலிருபின் சரியான அளவு 0.2 - 0.8 மி.கி/டெ.லி.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/879738-tnpsc-group-one-simple-notes-for-preparation-part-8-10.html

அடுத்த பகுதி அக்டோபர் 12 புதன் அன்று வெளியாகும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x