

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல் நிலை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்க சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப்பணித்தேர்வு பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல் நிலை தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்குத் தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு பயிற்சி மையம், கோவை, மதுரை நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித்தேர்வு பயிற்சி மையங்களில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம்.
இந்தப் பயிற்சியை பெற விரும்புவோர், www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 7ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
இலவச பயிற்சிக்குத் தேர்வர்களை தேர்ந்தெடுப்பதற்கான நுழைவுத் தேர்வு வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நவம்பர் 9ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வில் பங்கேற்பவர்கள் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அசல் ஆதார் அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. சென்னை பயிற்சி மையத்தில் 225 முழுநேரத் தேர்வர்கள், 100 பகுதிநேரத் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். கோவை, மதுரையில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித்தேர்வுப் பயிற்சி மையங்களில் 100 முழுநேர தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு www.civilservicecoaching.com என்கிற இணையதளத்தைப் பார்க்கவும்.