

கரோனா பெருந்தொற்று, பொது முடக்கம் ஆகியவற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் வழக்கமான காலத்தில் கல்வியாண்டு தொடங்கியுள்ளது.
ஆசிரியர்களும் மாணவர்களும் புதிய முழுமையான கல்வியாண்டை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். ஆனால், அண்மைக் காலமாகச் சில பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது, கேலி கிண்டல் செய்வது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.
இது கல்வித் துறை மீது அக்கறைகொண்டவர்களுக்கு மிகுந்த கவலையை அளித்தது. இந்தப் பின்னணியில் புதிய கல்வியாண்டில் ஆசிரியர்கள் - மாணவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக கல்வித் துறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?
அணுகுமுறை மாற்றம் தேவை
l சுடரொளி - அரசுப் பள்ளி ஆசிரியர், மாநில ஒருங்கிணைப்பாளர், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு.
கரோனா பெருந்தொற்றின் காரணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் மனரீதியான மாற்றங்கள் பெரிய அளவில் நிகழ்ந்திருக்கின்றன. இதுபோன்ற சூழலில் மாணவர்களைக் கையாள ஆசிரியர்களுக்குக் கூடுதலாகச் சில பயிற்சிகள் தேவை.
ஆசிரியர்களுக்கு உளவியல் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மனநல ஆலோசகர்கள் அல்ல. ஆனால், ஆற்றுப்படுத்துநர்களாகச் செயல்பட முடியும். குழந்தைகள் பேசுவதைப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்பதே ஆற்றுப்படுத்தும் செயல்தான்.
மனநலரீதியான உதவி தேவைப்படும் அளவுக்கு மன அழுத்தத்துடன் இருக்கும் குழந்தைகள் யாரென்று கண்டறிந்து, அவர்களுக்கு என்ன தேவையோ அதைப் பெறுவதற்கு வழிகாட்டலாம். அதற்கான பயிற்சியையும் உள்ளடக்கியதுதான் உளவியல் முதலுதவிப் பயிற்சி.
அந்தப் பயிற்சியை மனநல மருத்துவர்கள் மூலம் ஆசிரியர்களுக்குக் கொடுக்கலாம். ஏனென்றால், பெருந்தொற்றின் காரணமாகக் குடும்பத்தில் உறவுகளை இழப்பது முதல் பொருளாதார பிரச்சினை வரை குழந்தைகள் எவ்வளவோ இழப்புகளை எதிர்கொண்டிருப்பார்கள்.
ஆதரவற்ற குழந்தைகளின் நிலை இன்னும் மோசமானது. பல இல்லங்களைத் திடீரென்று மூடினார்கள். அத்தகைய குழந்தைகளை மீண்டும் கல்விவளையத்துக்குள் கொண்டுவருவது சவாலான செயல். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டாலே ஒரு பேரிடர் காலத்துக்குப் பிந்தைய மாணவர்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்குத் தேவைப்படுவதை உணர முடியும்.
கரோனா காலகட்டத்தில் திறன்பேசிகளிலும் தொலைக்காட்சியிலும் அதிக நேரம் செலவிட்டதால் மாணவர்களிடம் கவனச் சிதறல் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் கல்விக்குத் தேவையான கவனக் குவிப்பைக் கொண்டுவர கலைகள், விளையாட்டு போன்றவற்றை இணைத்து கற்பிக்கும் முறை தேவை.
இது ஆசிரியர்கள் மட்டும் முடிவெடுக்கக்கூடிய விஷயமல்ல. கல்வித் துறையின் அணுகுமுறையிலேயே மாற்றங்கள் வேண்டும். தொடக்கக் கல்வியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் போன்ற முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், பதின்பருவப் பிள்ளைகளுக்கும் கலைகளோடு இணைந்த கற்பித்தல் முறை மிகவும் அவசியம்.
ஆனால், புத்தகத்தில் உள்ளவற்றையே கற்பித்து முடிக்க முடியாத அளவுக்கு நம் பாடத்திட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே கலைகள், விளையாட்டை உள்ளடக்கிய கல்வி என்று சொல்லும்போதே பாடத்திட்டமும் அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.
ஆனால், குறைக்கப்பட்ட பாடங்களை விட்டுவிட்டு பிற பாடங்களை நடத்த முடியவில்லை. எனவே, குறைக்கப்பட்ட பாடங்களையும் கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறார்கள் ஆசிரியர்கள். எனவே, பாடங்களைக் குறைப்பதையும் முறையாகச் செய்ய வேண்டும். அதற்கென்று ஒரு சிறப்புக் குழுவை அமைக்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் பெருந்தொற்று காலத்துக்குப் பிந்தைய சூழலை மனத்தில்கொண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டம், கலைத்திட்டத்தோடு கூடிய கற்பித்தல் முறை, குழந்தைகளின் மன வீழ்ச்சி சார்ந்த விஷயங்களைக் கையாள்வதற்கான உளவியல் முதலுதவி ஆகியவை காலத்தின் கட்டாயமாக இருக்கின்றன.
பொதுமைப்படுத்தக் கூடாது
l கார்த்திக் தெய்வநாயகம் மனநல மருத்துவர், புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்ட அலுவலர்.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக அளவில் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. மாணவர்கள் இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால், மாணவர்களிடம் கற்றலில் தேக்கநிலை இருக்கலாம். அது அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.
இந்த உண்மையை உள்வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை அணுக வேண்டும். சில மாணவர்களுக்குக் குடும்பச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக அந்தத் தேக்கநிலை இருக்கலாம். எனவே, பொதுவாகவே மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளையும் குறிப்பாக சில குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகளையும் சார்ந்து தனி கவனம் செலுத்த வேண்டும்.
பதின்பருவக் குழந்தைகளுக்குச் சாகச மனப்பான்மை இருக்கும். இது குழந்தைகளுக்கு இயல்பாக உள்ளதுதான் என்றாலும் அளவுதான் வேறுபடும். சிலர் வன்முறையாக நடந்துகொள்கிறார்கள் என்றால், அவர்களுக்கு உரிய கவனம் கொடுத்துச் செயல்பட வேண்டும். மாணவர்கள் சார்ந்து ஒன்றிரண்டு சம்பவங்கள் தெரியவருவதை வைத்து, மாணவர்களால் ஆசிரியர்களுக்குப் பிரச்சினை என்பதாகப் பொதுமைப்படுத்திவிடக் கூடாது.
கரோனா காரணமாக அப்பாவையோ அம்மாவையோ இழந்த குழந்தைகளுக்குக் கூடுதல் அக்கறை தேவை. ஆசிரியர்கள் வழக்கமான பணியைத் தாண்டி குழந்தைகள் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் நடத்தையில் மாற்றம் வந்தால் அவர்களைச் சுற்றியிருக்கும் சூழல்தான் காரணமாக இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு அவற்றைக் கையாள மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதீத வன்முறையுடன் நடந்துகொள்ளும் மாணவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை. இதைப் பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டும். சின்னசின்ன குறும்புகள் செய்வதையும் வன்முறையில் ஈடுபடுவதையும் சமமாகப் பாவிக்கக் கூடாது. அந்த மாதிரியான குழந்தைகள் உடனடியாக மனநல ஆலோசனையை நாட வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மனநலத் திட்டம் செயல்பட்டுவருகிறது. அந்தத் திட்டத்தில் உதவிக்கான தொடர்பு எண் (Helpline) வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களோ பெற்றோரோ அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனையை பெறலாம். அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியே தெரியாது. மாநில அளவிலான உதவி எண் 104. மாவட்ட அளவிலான தொடர்பு எண்களும் தனியாக உள்ளன.