

இந்து தமிழ் இயர்புக் பயனுள்ள நூலாக வந்துள்ளது. பொது விவகாரங்கள், அன்றாட நிகழ்வுகள் போன்ற வழக்கமான விஷயங்களைத் தாண்டி என்னைக் கவர்ந்த அம்சங்கள் இதில் இருந்தன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்திய மாநிலங்கள், தமிழகத்தின் மாவட்டங்கள் குறித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கி விரிவான தகவல்களைக் கொடுத்திருந்தது மிக நன்றாக இருந்தது. அதிலும் குறிப்பாக மாவட்டங்கள் பற்றிய குறிப்புகளில் அவற்றின் எல்லைகள், அங்கு கிடைக்கும் முக்கியமான பொருள்கள், முக்கியமான தகவல்கள் என அனைத்தையும் கொடுத்திருந்தது சிறப்பானது.
போட்டித் தேர்வுக்குப் பிந்தைய நேர்காணலில் நாம் பிறந்து வளர்ந்த மாவட்டம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்ததும் எனக்கு மதுரை மாவட்டம் தொடர்பான கேள்விகளைக் கேட்டார்கள். மாநில அளவிலான போட்டித் தேர்வுகளிலும் மாவட்டங்கள் பற்றி அதிக கேள்விகள் இடம்பெறும்./ அந்த விதத்தில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்த முழுமையான தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அடுத்ததாக புவிசார்க் குறியீடுகள் பற்றிய பகுதியும் கரோனா வைரஸ் தாக்கம், தொற்று பரிசோதனை, மருந்துவம், தடுப்பூசி, மருந்துகள் கண்டறிவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பும் சிறப்பாக அமைந்திருந்தன. ஒட்டுமொத்தமாக ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வை எதிர்கொள்ளும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள நூல் இந்து தமிழ் இயர்புக் 2021.
அடுத்தடுத்த இயர்புக்குகளில் நிகழ்வுகளை தலைப்புவாரியாகப் பிரிப்பதை இன்னும் விரிவாக்கலாம். புவிசார் குறியீடு பற்றி ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சிதேர்வுகளில் ஒரு கேள்வியாவது கேட்கிறார்கள். அது மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் பற்றி இன்னும் விரிவான தகவல்களை கொடுக்கலாம். அரசு, மாவட்ட நிர்வாக அமைப்புகள் பற்றி இன்னும் விரிவான தகவல்களைக் கொடுக்கலாம். மாநில தகவல் ஆணையம். மாநில ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் பற்றிய தகவல்களைக் கொடுக்கலாம்.
- எம்.பிரதாப், துணை ஆணையர், தர்மபுரி