

தொகுப்பு: கனி
ஜூலை 6: பல்கலைக்கழக மானியக் குழுவும், மத்திய மனிதவள அமைச்சகமும் இணைந்து 2020 செப்டம்பர் 30-க்குள் கல்லூரிகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன. கோவிட்-19 காரணமாகத் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதியாண்டு தேர்வுகளை நடத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில அரசு, செப்டம்பரில் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை என்று மனிதவள அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விலகல்
ஜூலை 6: உலக சுகாதார நிறுவனத்திலிருந்து 2021, ஜூலை 6 முதல் விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவலை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலில், உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்குச் சார்பாகச் செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. இந்தச் சூழலில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
151 தனியார் ரயில்கள்
ஜூலை 8: 151 ரயில்களை இயக்குவதற்கான தனியார் பங்களிப்பை வரவேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தனியார் இயக்கும் இந்தப் புதிய 151 ரயில்கள், தேவை அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வே துறையில், பயணிகள் ரயில்கள் இயக்குவதற்காகத் தனியார் முதலீடு அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை.
89 செயலிகளுக்குத் தடை
ஜூலை.8: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஜூம், ஸ்னாப்சாட், ஷேர்இட், டின்டர், பம்பிள் உள்ளிட்ட 89 செயலிகளைப் பயன்படுத்த வேண்டாமென்று ராணுவ வீரர்களிடம் இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய ராணுவம் தொடர்பான தகவல் கசிவைத் தடுப்பதற்காக இந்தச் செயலிகளின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-ஐரோப்பிய மாநாடு
ஜூலை 9: பதினைந்தாம் இந்திய-ஐரோப்பிய மாநாடு மெய்நிகர்வழியில் ஜூலை 15 அன்று நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா ஃபன் தேர் லேயென், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷல் ஆகியோர் தலைமைவகிக்கின்றனர்.