சேதி தெரியுமா? - 5 மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பில்லை

சேதி தெரியுமா? - 5 மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பில்லை
Updated on
1 min read

தொகுப்பு: கனி

ஏப்.27: இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசல பிரதேசம் ஆகியவற்றில் கோவிட்-19 தொற்று பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று மாநிலங்களான மேகாலயம், அசாம், மிசோரம் ஆகியவற்றில் புதிதாக யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் ரத்து?

ஏப்.28: கோவிட்-19 காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டி, 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, கோவிட்-19 நோய்த்தொற்று 2021-ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தப்படவில்லையென்றால், ஒலிம்பிக் போட்டியை அதன்பிறகும் ஒத்திவைக்கும் திட்டமில்லை என்றும், அது ரத்து செய்யப்படும் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கான தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதியில் மாற்றமில்லை

ஏப்.28: 2020 நவம்பர் 3 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த மாற்றமுமில்லை என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியில் மாற்றமில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

50 லட்சம் இந்தியர்கள் இடப்பெயர்வு

ஏப்.28: உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு 2020 அறிக்கையை (GRID), உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் (IDMC) வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் இயற்கைப் பேரிடர்கள், வன்முறைகளால் உலகிலேயே அதிகபட்சமாக 50 லட்சம் இந்தியர்கள் உள்நாட்டுக்குள் இடப்பெயர்வை மேற்கொண்டிருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நிதிநிலையில் வெளிப்படைத்தன்மை

ஏப்.29: நிதிநிலை வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையில் இந்தியா 53-ம் இடத்தில் இருப்பதாக ‘ஓபன் பட்ஜெட்’ என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 117 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்து பிடித்துள்ளது. சர்வதேச நிதிநிலைக் கூட்டாண்மை (IBP) நடத்திய இந்த ஆய்வில், தென் ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில் ஆகியவை நியூசிலாந்துக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

கடலை மிட்டாய்க்குப் புவிசார் குறியீடு

ஏப்.30: கோவில்பட்டியில் தயாரிக்கப்பட்டுவரும் கடலை மிட்டாய், கோரக்பூரில் உருவாக்கப்பட்டுவரும் சுடுமண் சிற்பங்கள், மணிப்பூரின் கறுப்பு அரிசி ஆகியவற்றுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் உற்பத்திசெய்யப்பட்டுவரும் கடலை மிட்டாயின் சிறப்புச் சுவைக்குத் தாமிரபரணி ஆற்று நீரால் அது உருவாக்கப்படுவதுதான் காரணம் என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in