

தொகுப்பு: கோபால்
கல்வி என்பது மனித குலத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக சர்வதேசச் சுழலில் மாறிக்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் கல்வித் துறையில் சமூக, பண்பாட்டு, அரசியல் தாக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது.
எது சரியான கல்வி, கல்வி முறை எப்படி இருக்கிறது, அதில் என்னென்ன மாற்றங்கள் தேவை, முன்னெடுக்கப்படும் மாற்றங்கள் எந்தளவுக்கு அனைவருக்கும் பயனளிக்கின்றன ஆகியவற்றை அறிந்துகொள்வது கல்வித் துறையைச் சரியாக அணுகுவதற்குத் தேவையாக உள்ளன.
இதற்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு அவசியமாகிறது. குறிப்பாக வாழ்க்கையை நிர்ணயிக்கும் உயர்கல்விக்கு பாடத்திட்டம் சார்ந்த நூல்களை மட்டுமல்லாமல், உயர்கல்வி தொடர்பான பொது நூல்களை இளைஞர்கள் படித்தாக வேண்டும். 2019-ல் வெளியான கல்வி, உயர்கல்வி தொடர்பான சில நூல்களின் அறிமுகம்:
நட்சத்திரங்களுக்குப் பயணம் செய்தவர்கள்
தமிழில் - தா.சந்திரகுரு, வெளியீடு- வாசல்,
தொடர்புக்கு: 98421 02133
உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் மாணவர்களின் தற்கொலைகளால் வெட்டவெளிச்சமாகியுள்ளன. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக் குறிப்பும், அவரைப் போலவே சாதியப் பாகுபாடுகளால் தற்கொலை செய்துகொண்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்துகிருஷ்ணனும் கல்வி நிலையங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளை அம்பலப்படுத்தும் வகையில் எழுதிய பதிவுகள் - கட்டுரைகள், ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன், நீட் தேர்வுக்கு எதிராக உயிரை மாய்த்துக்கொண்ட அனிதா ஆகியோரின் தற்கொலைகளுக்கு எதிர்வினையாக கல்விப்புல ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் சர்வதேச, தேசிய ஊடகங்களில் எழுதிய கட்டுரைகள் ஆகியவை நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
என்ன சொல்கிறது தேசிய கல்விக்கொள்கை 2019
இல.சண்முக சுந்தரம், வெளியீடு- பாரதி புத்தகாலயம்,
தொடர்புக்கு: 044-24332924
2019இல் கல்வி தொடர்பாக அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு. 488 பக்கக் கல்விக்கொள்கை வரைவின் சாராம்சத்தை126 பக்கங்களில் கேள்வி-பதில் வடிவத்தில், எளிய பேச்சுத் தமிழில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
கல்வித் துறை தொடர்பான புள்ளிவிவரங்கள், கல்வி குறித்த சர்வதேசப் புகழ்பெற்ற கல்வியாளர்களின் கருத்துகள், மேற்கோள்கள் ஆகியவை உரிய இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. தேசியக் கல்விக்கொள்கை வரைவை விமர்சிப்பதுடன் நில்லாமல், எப்படிப்பட்ட கல்விக் கொள்கை நமக்குத் தேவை என்பதற்கான ஆலோசனைகளையும் நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.
நயீ தலீம் - என் அற்புதமான பள்ளி
-டாக்டர் அபய் பங் (தமிழில்- ச.இராமசுந்தரம்);
வெளியீடு - வாசல்,
இந்தியாவில் சில பள்ளிகள் மாற்றுக் கல்வி முறையை போதிக்கின்றன. அவற்றுள் முக்கியமானது ரவீந்திரநாத் தாகூர் தொடங்கிய நயீ தலீம் பள்ளி. உழைப்பையும் கல்வியையும் இணைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவையும் படைப்பூக்கம் கொண்ட மனதுடன் சுதந்திரமான கற்றல் முறை என்ற தன்னுடைய கனவையும் இணைத்து தாகூர் உருவாக்கிய பள்ளி இது.
இதில் படித்து மருத்துவரான டாக்டர் அபய் பங், நயீ தலீம் பள்ளியில் நான்கு சுவர்களுக்குள் முடங்காமல் இயற்கையிடமிருந்தும் உழவு செய்தல், தண்ணீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்தும் தான் கல்வி கற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
கல்வி நேற்று-இன்று-நாளை,
ச.சீ. ராஜகோபாலன், வெளியீடு- மதுரை திருமாறன் வெளியீட்டகம்,
தொடர்புக்கு: 7010984247
மூத்த கல்வியாளரும் கல்வித் துறைச் செயல்பாட்டாளருமான முனைவர் ச.சீ.ராஜகோபாலன் சமீப காலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தமிழகக் கல்வித் துறையில் நெடிய அனுபவம் பெற்றவரும், கல்வித் துறை சார்ந்து விமர்சனப்பூர்வமான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்துவருபவர் ராஜகோபாலன். அவருடைய அனுபவபூர்வமான பார்வையும் கருத்துகளும் கல்வித் துறை செல்ல வேண்டிய திசைக்கு வழிகாட்டுகின்றன.
In Search of Education
எல்.ஜவஹர் நேசன், வெளியீடு- Indian Universities Press, தொடர்புக்கு: 044-24332424
தேசியக் கல்விக்கொள்கை வரைவுக்கு எதிர்வினையாக எழுதப்பட்ட நூல். ஆனால், வரைவை விவாதிப்பதுடன் இந்நூல் சுருங்கிவிடவில்லை. கல்வியானது தேசியவாதம் சார்ந்ததாக இருக்க வேண்டுமா, சமூகத்தின் தேவைகளால் உந்தப்பட்டதாக இருக்க வேண்டுமா (Nationalistic Education Vs Society Driven Education) என்ற விவாதம்தான் இந்த நூலின் முதல் பகுதி.
பாடத்திட்டம், பள்ளி அசிரியர்கள் நியமன முறை, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவக் கல்வி, பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வியை ஒழுங்குபடுத்துதல், உயர்கல்வியை மாற்றியமைப்பதற்கான திட்டம், உயர்கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு, உயர்கல்வி ஆசிரியர்கள், தொழில்முறைக் கல்வி என கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கல்விக்கொள்கை வரைவு வெளிப்படுத்தும் பார்வையை விமர்சித்து அவற்றுக்கான மாற்றுப் பார்வையை இந்நூல் விரிவாக முன்வைக்கிறது.