

‘இந்து தமிழ்' இயர்புக் 2019-க்கு வாசகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இயர்புக் 2020 மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
இந்தப் புத்தாயிரத்தின் முதல் இருபது ஆண்டுகளின் நிறைவு. மூன்றாம் பத்தாண்டின் தொடக்கம் என 2020 பல வகைகளில் முக்கியமானதொரு ஆண்டு. இந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இயர்புக் 2020 தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வர்களுக்கான தகவல்கள், கட்டுரைகள் மட்டுமன்றி கடந்த இருபது ஆண்டுகளின் முக்கிய தேசிய, தமிழக வரலாற்று நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்தியா அரசியல் சாசனத்தை ஏற்று ஜனநாயகக் குடியரசாகி 70 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் இந்தியக் குடியரசு, இந்திய அரசியல் சாசனம் குறித்த 70 தகவல்கள் தனித் தனிக் கட்டுரைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாறு, அறிவியல், கணினி அறிவியல் ஆகியவற்றின் வரலாற்று மைல்கல் தருணங்கள் காலவரிசை வடிவில் தனித் தனியாக தொகுக்கப்பட்டுள்ளது இந்த இயர்புக்கின் சிறப்புப் பகுதிகளில் முக்கியமானது.
கீழடி அகழாய்வின் அண்மைக் காலக் கண்டுபிடிப்புகளின் வெளிச்சத்தில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் தமிழக எல்லையை அலசும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனின் கட்டுரை, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை பற்றி விரிவாக அறிமுகப்படுத்தும் சைபர் சிம்மனின் கட்டுரை.
டாக்டர் கு.கணேசனின் மருத்துவக் கட்டுரைகள் என முக்கியமான தலைப்புகளில் சிறப்புக் கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சங்கர் கணேஷ் கருப்பையாவின் போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம், மூத்த இதழாளர் பொன். தனசேகரனின் கல்லூரிப் படிப்புகளுக்கான அரசு உதவித்தொகைத் திட்டங்கள், மக்கள்தொகை 2011 குறித்த விரிவான தகவல் தொகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பருவநிலை நெருக்கடி உலகை அச்சுறுத்திவரும் தேசிய. சர்வதேச செய்திகளில் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயனளிக்கும் கையேடாக உருவாகியிருக்கிறது இயர்புக் 2020.