

பிப்.11: 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழக அரசு தடை விதித்தது.
பிப்.12: அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.12: 1984இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில், 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிப்.13: ஆளுநர் பரிந்துரையை ஏற்று மணிப்பூரில் 356ஆவது சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பிப்.13: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடும் அமளிக்கு நடுவே வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பிப்.13: முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம தொழில் துறை அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.
பிப்.13: சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தை (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறை தவறாகப் பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
பிப்.14: வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தபோது, அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பிப்.14: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
பிப்.14: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1526 ஏக்கர் சொத்து ஆவணங்கள், புடவைகள் உள்ளிட்ட பொருள்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கின.
பிப்.14: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.5 கோடி வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்தது.
பிப்.14: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா (198 பதக்கங்கள்), ஹரியாணா (153 பதக்கங்கள்) முறையே இரண்டாம், மூன்றாமிடத்தைப் பிடித்தன. தமிழ்நாடு 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தது.
பிப்.15: மகா கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் கூடிய கட்டுங்கடங்காத கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்தனர்.
பிப்.17: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சட்ட விரோதமாக தாது மணலை கடத்திய நிறுவனங்களிடமிருந்து ரூ.5832 கோடியை வசூலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.17: போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொகுப்பு: மிது