உயர்கல்வி வழிகாட்டி | திறன் அறிந்து செயல்படுங்கள்

உயர்கல்வி வழிகாட்டி | திறன் அறிந்து செயல்படுங்கள்
Updated on
3 min read

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. உயர் கல்வியில் எந்தப் பாடத்தைத் தேர்வுசெய்யலாம் என்கிற சந்தேகமும் குழப்பமும் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பெற்றோருக்கும் இருக்கும். ஏனெனில் பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு அடுத்த கட்டக் கல்வியைத் தேர்ந்தெடுப்பது ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம்.

வழிகாட்டுதல் அவசியம்: அநேகக் கிராமப்புற மாணவர்களும், முதல் தலைமுறையாகப் பட்டப்படிப்புப் படிப்பவர்களும் உயர் கல்வி வாய்ப்புகள் குறித்துப் பெரிதாக அறிந்திருப்பதில்லை. பாடப் பிரிவின் பெயரைக் கேட்டோ, ஒருவர் அத்துறையில் வெற்றிகண்டால் தானும் வெற்றிபெற்றுவிடலாம் என்கிற மேம்போக்கான ஆசையின் காரண மாகவோ, பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் கூறியதாலோ அல்லது எடுத்த மதிப்பெண்ணுக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு படிப்பு என்கிற நிலையிலேயே மாணவர்கள் மேற்படிப்பை முடிவு செய்கின்றனர். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் இந்த நிலைமை.

ஆனால், இது தகவல் யுகம். பாடப்பிரிவு, கல்லூரிகள் பற்றிய தகவல் களை இணையதளம், கட்டுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் போன் றவற்றிலிருந்து பெறலாம். இன்றைக்குப் பெரும்பாலான மாணவர்களின் கைகளில் ‘ஸ்மார்ட் போன்’ உள்ளது. கூகுள் தேடுபொறியில் பாடப்பிரிவு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தேடிக் கண்டறியலாம். ஆனால், இவை அனைத்தும் தகவல்கள் மட்டுமே.

பெற்றோர் கவனத்துக்கு: உங்களுக்கு உடல்நலம் சரியில்லை எனும்போது, நோயின் தன்மை, உடல் நிலை குறித்து எதுவும் தெரியாமல் மருந்தகத்துக்குச் சென்று, நோயின் அறிகுறிகளை மட்டும் சொல்லி மருந்து வாங்குவீர்களா? அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவீர்களா என்கிற கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வதே சரியான முடிவாக இருக்க முடியும். அதைப் போல உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் ‘கரியர் கவுன்சிலர்’ (Career Counsellor) ஒருவரிடம் பேசி ஆலோசனை பெற்றுச் சரியான முடிவெடுப்பது நல்லது.

நண்பர் ஒருவரின் குழந்தை ஒரு பாடப்பிரிவைத் தேர்வுசெய்து படிப்பதாலோ, உறவினர் ஒருவர் பாடத்தைத் தேர்வுசெய்யச் சொல்வதாலோ ஒரு முடிவுக்கு வர வேண்டாம். உங்கள் குழந்தையின் இயல்பான திறன் (Aptitude), ஆர்வம், ஆளுமை ஆகியவற்றை முதலில் அறிய வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர் என்பது உளவியலின் அடிப்படை விதி.

என்ன செய்யலாம்? - தான் யார், தன்னுடைய ஆர்வம், ஆளுமை, இயல்பான திறன், பொருத்தமான பணிகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவருக்கும் அவசியம். அதற்கேற்பத் துறை, அத்துறையில் விரும்பும் பணி, அதற்கான படிப்பு, வேலைவாய்ப்புகள், அத்துறையின் எதிர்கால வளர்ச்சி, அதில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள், அதற்காக வளர்த்துக்கொள்ளக்கூடிய திறன்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்து மாணவர்கள் தங்களது உயர் கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த அளவுக்கு உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களது எதிர்காலம் குறித்துத் தெளிவான, சரியான பார்வையைத் தேர்வுசெய்ய முடியும். வித்தியாசமான கவர்ச்சிகரமான பெயர் கொண்ட படிப்பு என்று கருதி உங்களுக்கு ஒத்துவராத படிப்பைத் தேர்வு செய்யாதீர்கள். இயல்பான திறனைக் கண்டறிந்து அதற்கு பொருத்தமான படிப்பைத் தேர்வு செய்து படித்தால் அத்துறையில் உச்சத்தைத் தொடலாம்.

ஒவ்வொரு படிப்புக்கும் தேவை யான இந்த இயல் திறன்களின் அளவு வேறுபடும். பெரும்பாலான மாணவர் களுக்கு, அவர்களுடைய தனித்திறன் என்ன என்பது தெரிவதில்லை. தெரிந்தி ருந்தாலும், தயக்கம், பயம் காரணமாக அதை மேம்படுத்த முயல்வதில்லை.

உதாரணமாக, புள்ளியியல், தரவு அறிவியல், தரவுப் பகுப்பாய்வு (Data Analytics), கணிதம், சார்டர்ட் அக்கவுண்டண்ட் (CA), காஸ்ட் மேனேஜ் மென்ட் அக்கவுண்டண்ட் (CMA), பொறி யியல், காப்பீடு தொடர்பான அக்சுவரியல் அறிவியல் (Actuarial Science) போன்ற படிப்புகளுக்குக் கணிதத்திறன் தேவைப்படும். உங்களின் இயல்பான திறன் எதில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அது தொடர்பான துறையைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு.

கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்: வாய்ப்புகளும் வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதில் தனக்கானது எது என்பதைச் சரியாகத் தேர்வுசெய்து முன்னேற வேண்டும். நூற்றுக்கணக்கானவர்களை ஓரிடத்தில் உட்கார வைத்து எந்தக் கல்லூரியில் படிக்கலாம், எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்யலாம், எந்தப் பாடத்திற்கு எதிர்காலம் உள்ளது என்று பொதுவாகக் கூறுவது ‘கரியர் கவுன்சிலிங்' அல்ல. இவை அனைத்தும் தகவல்கள் மட்டுமே.

பொதுவாக அனைவருக்கும் கணிதத்திறன் இருக்கும். ஆனால் சிலர் அளப்பரிய கணிதத் திறனைப் பெற்றிருப்பர். சிலருக்கு சராசரியாகவும், சிலருக்குச் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும். பாரதியாருக்குக் கணிதப்பாடமே பிடிக்காது. ஆனால் மொழிப் புலமையில் புத்திக்கூர்மை மிகுதியாக இருந்தது.

எனவே, நமக்கான இயல் திறன் எதில் சிறப்பாக உள்ளது என்பதை ‘கரியர் கவுன்சிலர் சைக்கோமெட்ரிக்' தேர்வுகள் மூலம் கண்டறிந்து, அந்தத் திறன் எந்தப் பணிகளுக்குத் தேவை என்பதுடன் பொருத்தி அதற்கான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இயல் திறனுடன் ஒத்துப்போகிற மூன்று துறைகளைத் தேர்வு செய்து, முன்னுரிமைப்படி ஏதாவது ஒரு துறையை இறுதிசெய்யலாம்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பை ஆர்வத்துடன் படிக்க முடியுமா? படித்து முடித்தவுடன் அத்துறையில் உங்கள் திறமையைப் பயன்படுத்தி வேலை பெற முடியுமா? அதே துறையில் நீடித்திருக்க முடியுமா? துறையில் உச்சத்தைத் தொட முடியுமா? சாதனைகள் படைக்க முடியுமா? இது போன்று ஆர்வம், ஆளுமை, தன்னை அறிதல் உள்பட 12 விதமான தலைப்புகளில் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் கட்டுரையாளர்
எம்.கருணாகரன். மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான உயர் கல்வி வழிகாட்டியாக இருக்கும் இப்புத்தகம், ‘+2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? - திறனை அறி, திசையைத் தீர்மானி’ என்கிற பெயரில் வெளியாகியுள்ளது.
தொடர்புக்கு: 99761 52525

- கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை; karunas2k09@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in