

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தமிழ்நாடு அரசு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகளையும் பயிற்சிகளையும் வழங்கிவருகிறது. அந்த வகையில் மாணவர்கள் உயர் கல்வி பயிலத் தேவையான தகுதித்தேர்வுக்கான பயிற்சி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயிற்சி விவரம்: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிக்கத் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம். இதில் முக்கியமான TOEFL, IELTS, GRE, GMAT தகுதித்தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கான இலவசப் பயிற்சியை தாட்கோ நிறுவனம் வழங்குகிறது. இந்தப் பயிற்சிக்கான கட்டணத்தை அந்நிறுவனமே முழுமையாக ஏற்கிறது. 45 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியை நிறைவுசெய்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப் பிக்கலாம்? ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். எந்தெந்தப் பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: இணையவழியில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தாட்கோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (http://iei.tahdco.com/hred_reg.php) செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.